Last Updated : 14 Nov, 2016 08:47 AM

 

Published : 14 Nov 2016 08:47 AM
Last Updated : 14 Nov 2016 08:47 AM

கபாலிக்கு எப்படி யு கொடுத்தீர்கள்?- தணிக்கை அதிகாரியிடம் எஸ்.வி.சேகர் கேள்வி

'கபாலி' படத்துக்கு எதன் அடிப்படையில் 'யு' சான்றிதழ் கொடுத்தீர்கள் என தணிக்கை அதிகாரியிடம் எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதன் குமார் இயக்கத்தில் எஸ்.வி.சேகர், அஸ்வின் சேகர், விசு, பூர்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மணல் கயிறு 2'. தரண் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. இப்படத்துக்கு தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ் கொடுத்ததால், தணிக்கை அதிகாரி மதியழகனிடம் மறுஆய்வுக்குழு உறுப்பினராக எஸ்.வி.சேகர் வாக்குவாதம் செய்ததாக செய்திகள் வெளியானது. தணிக்கை செய்தப் பிறகு எப்படி வாக்குவாதம் செய்யலாம் என்று சர்ச்சையும் உண்டானது.

இதற்கு எஸ்.வி.சேகர் ஆடியோ வடிவில் விளக்கமளித்துள்ளார். அதில் "'மணல் கயிறு 2' படத்தின் தணிக்கைக்கு நான் தணிக்கை அதிகாரியாகச் செல்லவில்லை. அப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராகத் தான் சென்றேன்.

படம் பார்த்துவிட்டு முடித்துவிட்டு எங்களை அழைத்த தணிக்கை அதிகாரி மதியழகன் "நீங்கள் இப்படத்துக்கு என்ன சான்றிதழ் அளிப்பீர்கள்" எனக் கேட்டார். 'யு' சான்றிதழ் அளிப்பேன் எனச் சொன்னேன். "நாங்கள் யு/ஏ கொடுத்திருக்கிறோம்" என்றார். உடனே "நீங்கள் கொடுத்துவிட்டீர்கள் என்றால் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இது 'யு' சான்றிதழுக்கான படம். நீங்கள் எந்த அடிப்படையில் 'யு/ஏ' சொல்கிறீர்களோ, அதற்கு உண்டான அனைத்துக் கேள்விகளுக்கும் நான் பதில் சொல்கிறேன். நீங்கள் கொடுக்கும் சான்றிதழை வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. இன்னும் படத்துக்கு வெளியீட்டு தேதி முடிவு செய்யவில்லை.

நாங்கள் எடுத்திருக்கும் படத்துக்கு நியாயமான சான்றிதழ் கிடைக்கும்வரை போராடுவேன். அதற்காக நான் மறுஆய்வுக்குச் செல்ல மாட்டேன். உயர்நீதிமன்றம் செல்வேன். 'கபாலி' படத்துக்கு எதன் அடிப்படையில் 'யு' சான்றிதழ் கொடுத்தீர்கள் என தெரிந்துக் கொள்வேன். அதற்குப் பிறகு என்னுடைய படத்தை நீதிபதியே பார்க்கட்டும் எனச் சொல்வேன். பார்த்தப் பிறகு அவர்கள் கொடுக்கும் சான்றிதழை ஒப்புக் கொள்வேன்" என்றேன்.

'யு/ஏ' சான்றிதழுக்கான ஒவ்வொரு விஷயமாக சொன்னார். அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் நான் சட்டப்பூர்வமாக பதில் சொன்னேன். அதையே தான் நான் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் சொல்கிறேன். வெளியீட்டு தேதியை முடிவு பண்ணிவிட்டு தணிக்கைக்கு சொல்லாதீர்கள். "பல தயாரிப்பாளர்கள் மிகவும் ரொம்ப வேதனைப்படுகிறார்கள், அவர்கள் தணிக்கை என்றாலே பதறுகிற அளவுக்கு பண்ணுகிறீர்கள்" என்பதையும் தணிக்கை அதிகாரியிடம் பதிவு செய்துவிட்டு தான் வந்தேன். யாரையும் மிரட்டி தணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்திருக்கிறார் எஸ்.வி.சேகர்.

இறுதியாக 'மணல் கயிறு 2' படத்துக்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x