Last Updated : 26 May, 2015 06:30 PM

 

Published : 26 May 2015 06:30 PM
Last Updated : 26 May 2015 06:30 PM

ஓகே கண்மணி இணைய சர்ச்சை: மெட்ராஸ் டாக்கீஸ் வருத்தம்

'ஓ காதல் கண்மணி' படத்தின் காப்புரிமை மீறல் தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட இணையப் பக்கங்களில் சில திரை விமர்சன இணைப்புகளும் இடம்பெற்றதற்கு மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் வருத்தம் தெரிவித்திருக்கிறது.

மணிரத்னம் இயக்கத்தில் துல்ஹர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஓ காதல் கண்மணி'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டது.

'ஓ காதல் கண்மணி' திரைப்படத்தை கள்ளத்தனமாக வீடியோ வடிவில் பதிவிறக்கம் தொடர்பான இணைய இணைப்புகளை நீக்குவதற்கு நிபுணர்களை பணிநியமனம் செய்திருக்கிறார்கள். அந்தக் குழு, தமது திரைப்படம் தொடர்பாக காப்புரிமை மீறிய இணையப் பக்கங்களைத் திரட்டி கூகுளிடம் அளித்துள்ளது.

இணையத்தில் இருந்து நீக்கக் கோரி அவ்வாறு அளிக்கப்பட்ட இணைப்புகளின் பட்டியலில், படத்தின் விமர்சனங்கள் அடங்கிய பக்கங்களும் இடம்பெற்றது. அவை அனைத்துமே நெகட்டி விமர்சனங்கள் என்ற நிலையில், மணி ரத்னம் அலுவலகம் மீது விமர்சகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டது.

இதற்கு மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறது. அந்த விளக்கம் வருமாறு:

"மெட்ராஸ் டாக்கீஸ் கடமையுணர்வு கொண்ட தயாரிப்பு நிறுவனம். எங்கள் திரைப்படத்தை கள்ளத்தனமாக யாரும் பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்க முயற்சிக்கிறோம். அத்தகைய இணைப்புகளை அடையாளம் காண நிபுணர்கள் உதவி தேவை என்பதால் இந்த வேலையை சில தொழில்முறை நிபுணர்களிடம் தந்துள்ளோம். இணையத்தில் பைரஸியை தவிர்க்கும் பொருட்டு செய்துள்ள இந்த முயற்சியில், சில முறையான இணைப்புகளும் சேர்ந்துள்ளன. அவை கூகுள் நிறுவனத்திடம் அளிக்கப்பட்டுள்ள பட்டியலில் துரதிர்ஷ்டவசமாக இடம்பெற்றுள்ளன.

இந்த பிழைக்கு நாங்கள் வருந்துகிறோம். முறையான இணைப்புகளை அந்தப் பட்டியலில் இருந்து நீக்கும் வேலைகளும் முடுக்கப்பட்டுள்ளன. முறையான இணைப்புகளை முடக்க மெட்ராஸ் டாக்கீஸ் எண்ணவில்லை. அப்படி செய்யவும் மாட்டோம்.

கிட்டத்தட்ட 5000-க்கும் அதிகமான இணைப்புகள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளதால் அதிலிருக்கும் முறையான இணைப்புகளை அடையாளம் காண உங்கள் உதவியும் எங்களுக்குத் தேவைப்படுகிறது. அப்படி ஏதேனும் உங்களுக்குத் தெரியவந்தால் எங்களிடம் தெரியப்படுத்தவும்.

பைரஸியை எதிர்கொள்ள நாங்க முயற்சித்துக் கொண்டிருப்பதால் அப்படியான இணைப்புகளை நீங்கள் பார்த்தாலோ, கள்ளத்தனமாக பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கும் தளங்கள் பற்றி தெரிய வந்தலோ எங்களிடம் தெரிவிக்கவும். இணையத்தை பைரஸி இல்லாத இடமாக மாற்றுவோம்.”

இவ்வாறு அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x