Last Updated : 12 Jun, 2016 03:12 PM

 

Published : 12 Jun 2016 03:12 PM
Last Updated : 12 Jun 2016 03:12 PM

ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவ முன்வர வேண்டும்: சூர்யா வேண்டுகோள்

ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளை தங்களுக்கு தெரிந்த ஏழை குழந்தைகளின் கல்விக்கு வழங்க வேண்டும் என்று சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

+2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி தனது அறக்கட்டளை மூலம் கவுரவித்து வருகிறார் சிவகுமார். இந்த ஆண்டுக்கான, ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 37-ஆம் ஆண்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் 20 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் பரிசளிக்கப்பட்டது.

இவ்விழாவில் தொடக்க உரை நிகழ்த்திய நடிகர் கார்த்தி, "இது எங்கள் குடும்ப விழா. ‘ நல்ல செயல்களை செய்’ என்று அப்பாவும் அம்மாவும் அறிவுரை மட்டும் கூறாமல், எப்படி நல்ல காரியங்களில் ஈடுபட வேண்டும் என்பதையும் எங்கள் கண் முன்னால் செய்து காட்டினார்கள். ஒவ்வொரு வருடமும் எங்கள் வீட்டு நிகழ்ச்சியாகவே ‘ சிவகுமார் கல்வி அறக்கட்டளை’ நிகழ்ச்சி நடக்கும். பரிசு பெற்ற மாணவர்கள் நன்றாக படிப்பவர்கள். அவர்களிடம் ‘ நல்லா படிங்க’ என்று சொல்வதைவிட, படித்த படிப்பை சமூகத்திற்கு பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறினார் .

இந்நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார். "1979ஆம் ஆண்டு, மே மாதம் தொடங்கப்பட்ட ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’ தொடர்ந்து, ப்ளஸ்-டூ தேர்வில் சிறந்த உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. 33ஆண்டுகள் என் பொறுப்பில் இயங்கிய அறக்கட்டளையை, அதற்குப் பிறகு அகரம் ஃபவுண்டேஷன் பொறுப்பேற்று சிறப்பாக கல்விப் பணி செய்து வருகிறது. சிறிய அளவில் ஏழை மாணவர்களுக்கு செய்த உதவியை, என்னுடைய பிள்ளைகள் இப்போது நல்ல முறையில் செய்து வருகிறார்கள்.

கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கல்வி ஒருவரின் வாழ்க்கை தரத்தை எந்த அளவு உயர்த்தும் என்பதனையும் நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். என்னைப் போல ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து நன்றாகப் படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன். தடைகளைத் தாண்டி பெற்ற முதல் வெற்றி இது. இன்னும் போக வேண்டிய பயணம் வெகுதூரம் உள்ளது. மாணவர்கள் தங்களுடைய கவனம் சிதறாமல், தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்" என்று பேசினார்.

நடிகர் சூர்யா பேசிய போது "கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று சொல்லுவாங்க. 37வருஷமா நடக்கும் இந்த நிகழ்வு அதற்கு ஒரு உதாரணம். இங்கே பரிசு பெற்ற மாணவர்கள் எல்லாரும் சிறப்பான முறையில் கல்வி கற்றவர்கள். அதை சிறப்பு செய்யும் நிகழ்வுதான் இது. குடும்ப விழாவைப் போல ஆண்டுதோறும் அப்பா நடத்திய நிகழ்ச்சிகளைப் பார்த்து, எங்களுக்கும் அதேபோல செய்யும் ஆர்வம் வந்தது. வேறு உதவிகளை விட, கல்விக்கு செய்கிற உதவி ஒருவருக்கு காலத்திற்கும் பயன்படும். அதனால்‘சிவகுமார் கல்வி அறக்கட்டளையின்’ பணியையும் சேர்த்து கல்விப் பணியை விரிவாக்கிக் கொண்டோம்.

அப்பா செய்த பணிகளிலிருந்து சில மடங்காவது அதிகமாக செய்தால் அது வளர்ச்சி. அகரம்ஃபவுண்டேஷன் நம் சமூகத்தில் இருக்கும் அடித்தட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த பணிகளைச் செய்து வருகிறது.1300 – க்கும் அதிகமான மாணவர்களின் கல்லூரிக் கனவை, பல நல்ல உள்ளம் கொண்டவர்களின் உதவியோடு நனவாக்கி இருக்கிறோம். சமூகத்திற்குத் தேவையான பல்வேறு சவால்கள் இருந்தாலும், கல்வி அதில் மிக முக்கியமான ஒன்று. உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்று அடிப்படைத் தேவைகளோடு கல்வியும் சேர்ந்து விட்ட ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். கடந்த ஆண்டு முதல் தை திட்டத்தின் மூலம் படிப்புக்கு மட்டுமின்றி தொழிற்கல்விக்கு முன்னுரிமை தரும் வகையில் பள்ளிக் கல்வியை இடைநின்ற மாணவர்களுக்கு பல்வேறு தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்போடு 40 மாணவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சி அளிக்கிறோம்.

அகரம் கல்வி அறக்கட்டளை, ‘விதை’ திட்டத்தின் கீழ் பண உதவி மட்டுமின்றி மாணவர்கள், நம்சமூகத்தை தன்னம்பிகையோடு எதிர்கொள்ளத் தேவையான பல்வேறு பயிற்சிகளையும், சிறந்த நிபுணர்களின் துணையோடு அளித்து வருகிறது. பல்வேறு திசைகளிலும் பயணப்பட்டு, ஏழை மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை, ஒருங்கிணைக்க முயற்சி எடுத்து வருகிறது அகரம்.

ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளை தங்களுக்குத் தெரிந்த ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த நேரத்தில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நாம் செய்கிற ஒவ்வொரு நல்ல காரியமும், ஒரு விளக்கு கொண்டு இன்னொரு விளக்கை ஏற்றும் முயற்சி. இங்கே சிறப்பு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களால் முடிந்த நல்ல காரியங்களில் கல்வி கற்கும் காலத்தில் இருந்தே ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறினார் சூர்யா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x