Published : 03 May 2014 12:01 PM
Last Updated : 03 May 2014 12:01 PM

‘எல்லாக் குறும்படங்களையும் பெரிய படமாக எடுக்க முடியும்’

குறும்படங்கள் பெரிய படங்களாக உருமாறி வெள்ளித்திரையில் ஹிட்டடிக்கும் காலம் இது. அந்த வரிசையில் லேட்டஸ்டாக சேர்ந்திருக்கும் படம் ‘முண்டாசுப்பட்டி’. தனியார் சேனல் ஒன்றில் குறும்படமாக ஒளிபரப்பாகி ரசிகர்களின் பலரின் ஆதரவைப் பெற்ற இந்த குறும்படம் இப்போது பெரிய திரைக்கு வருகிறது. போஸ்டர் வடிவமைப்பு, டீஸர், டிரெய்லர் என அனைத்திலும் வித்தியாசம் காட்டியிருக்கும் இப்படத்தின் இயக்குநர் ராம் குமாரை சந்தித்தோம்.

'முண்டாசுப்பட்டி' குறும்படத்தினை எப்படி வெள்ளித்திரை படமாக வடிவமைத்தீர்கள்?

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற குறும்பட போட்டிக்காகத் தான் முதலில் இதை இயக்கினேன். அதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால் நாம் ஏன் இதை பெரிய படமாக எடுக்கக் கூடாது என்று நினைத்தேன். அந்த சமயத்தில் தான் ‘காதலில் சொதப்புவது எப்படி’ படம் குறும்படத்தில் இருந்து வெள்ளித்திரை படமாக வந்து வெற்றியும் பெற்றது. அந்த நம்பிக்கையில் நானும் இதற்கு திரைக்கதை அமைத்தேன்.

‘சூது கவ்வும்’ படத்தின் உதவி இயக்குநரான ரவிக் குமார், தயாரிப்பாளர் சி.வி.குமாரை நான் சந்திக்க உதவியாக இருந்தார். அவரும் கதையை கேட்டுவிட்டு இதை படமாக எடுக்க ஒப்புக்கொண்டார். பிறகு ஃபாக்ஸ் நிறுவனமும் இப்படத்தின் தயாரிப்பில் இணைந்தது. இந்தப் படத்தில் நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.

குறும்படத்தை வெள்ளித்திரை படமாக வடிவமைக்கும்போது கஷ்டமாக இல்லையா?

கஷ்டமாகத்தான் இருந்தது. ஏனென்றால் ‘முண்டாசுப்பட்டி’ குறும் படத்தில் ஒரே ஒரு சம்பவம்தான். அந்த சம்பவத்தில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்று சொல்லி யிருப்பேன். ஆனால் அதை பெரிய படமாக எடுக்கும்போது ஒரு சம்பவத்தை மட்டும் வைத்து பண்ண முடியாது. அதனால் என் நண்பர்களுடன் பேசி கதையை வடிவமைத்தேன். நிறைய கிளைக்கதைகள் வைத்து திரைக்கதை அமைத்ததால் இரண்டரை மணி நேரம் ஓடும் படமாக அதை மாற்ற முடிந்தது.

இப்போது நீங்கள் ஒரு வெள்ளித்திரை இயக்குநர். மீண்டும் குறும்படம் இயக்குவீர்களா?

அதற்கான வாய்ப்புகள் குறைவு. இந்தப் பட ரிலீஸிற்கு பிறகு, என் அடுத்த படத்தின் வேலையை ஆரம்பிக்கவுள்ளேன்.

எல்லா குறும்படங்களையும் வெள்ளித்திரை படமாக்க முடியுமா?

முயற்சி செய்தால் கண்டிப்பாக முடியும். ‘முண்டாசுப்பட்டி’ குறும்படமே ஒரு சின்ன சம்பவம் தானே. அதைச் சுற்றி நான் கதைகள் பண்ணியிருக்கேன். திரைக்கதையில் மெனக்கிட்டால் போதும்; எந்த ஒரு குறும்படத் தினையும் பெரிய படமாக பண்ண முடியும்.

நீங்க ஒரு கார்ட்டூனிஸ்ட். படம் இயக்கும் போது கார்ட்டூனிஸ்ட் எந்த அளவிற்கு உதவியாக இருக்கார்?

கார்ட்டூனிஸ்ட் என்பதால் விஷுவலாக என்னால் யோசிக்க முடிந்தது. எப்படி வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க உதவியது. நான் கார்ட்டூன் வரையும் போதே, ஒரு ஷாட் வைத்துதான் வரைவேன். அதனால் கார்ட்டூனிஸ்டாக இருப்பது எனக்கு பெரிய அளவில் உதவியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x