Published : 04 May 2016 06:37 PM
Last Updated : 04 May 2016 06:37 PM

என் தனித்துவத்தால் ரசிகர்கள் மனதில் பதியவே விரும்புகிறேன்: சூர்யா சிறப்பு பேட்டி

ஒவ்வொரு படத்திலும் தனிச்சிறப்பாக ஏதேனும் செய்து ரசிகர்கள் நெஞ்சில் நிலைத்திருக்கவே விருப்பம் என்று நடிகர் சூர்யா தெரிவித்தார்.

'24' படத்தை விளம்பரப்படுத்த பம்பரமாக சுழன்று வருகிறார் நடிகர் சூர்யா. நாயகன், தயாரிப்பு என பல விஷயங்களை தன் தோளில் சுமந்தாலும், அவருடைய பேச்சில் பதற்றம் எதுவும் இல்லை. அவருடன் உரையாடியதில் இருந்து..

இயக்குநர் விக்ரம் குமார் பற்றி உங்களது கருத்து என்ன?

இயக்குநர் விக்ரம் குமார் படைப்பாற்றல் மீது நான் மிகுந்த மரியாதை கொண்டுள்ளேன். அவரது முந்தைய படங்களையெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒவ்வொன்றும் ஒரு தனித்துவ களம் கொண்டதாகவே இருக்கும். நானும், ஒரு நடிகனாக இந்த மாதிரி கதாபாத்திரங்களை மட்டுமே நடிக்க வேண்டும் என எனக்கு எவ்வித கட்டுப்பாடும் வைத்துக் கொண்டதில்லை. நான் கமல் சாரைப் போல் ஒரு நல்ல படைப்பாளி இல்லை. என் படங்களுக்கு நானே கதையை உருவாக்குவது எனக்கு சாத்தியமற்றது. அதேவேளையில் நல்ல கதைக்கரு இருக்கிறது என்பதற்காகவே படங்களை ரீமேக் செய்யவும் நான் விரும்புவதில்லை.

பெரிய முதலீட்டு படங்களில் மட்டுமே சூர்யாவை காண முடிகிறதே..

'24' போன்ற முழுக்க முழுக்க கதைக்களத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படும் படங்கள் தமிழில் 3 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே வருவதாக நான் உணர்கிறேன். ஏனெனில் பெரிய பட்ஜெட் படங்களை ஒப்புக்கொள்ளும் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் வெறும் கதையை மட்டுமே நம்பி முதலீடு செய்ய முன்வருவதில்லை. ஆனால், பாலிவுட் திரையுலகம் அப்படி அல்ல. அந்த வகையில் இந்தி நடிகர்கள் கொடுத்து வைத்தவர்கள். அங்கு ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற இயக்குநர்கள் பெரிய பட்ஜெட்டில் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் படங்களை உருவாக்கக்கூடிய சுதந்திரம் இருக்கிறது. இங்கு தமிழிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வருகின்றன. ஆனால், அவை எல்லாம் பெரும்பாலும் லோ-பட்ஜெட் படங்களாகவே இருக்கின்றன.

'24' திரைப்படம் பெரிய பட்ஜெட் படம் என்ற அடையாளத்தை மட்டுமே பெறாமல் ரசிகர்களுக்கு ஒரு பிரத்யேக அனுபவத்தை அளிக்கும் படமாகவும் இருக்க வேண்டும் என விரும்பினோம். '24' எங்கள் அனைவரும் மிகவும் நெருக்கமான, முக்கியமான திரைப்படம்.

'24' படத்தை ஒப்புக் கொள்ளும் அளவுக்கு அக்கதையில் உங்களை ஈர்த்தது எது?

'24' முழுக்க முழுக்க விக்ரம் குமாரின் படம் என்றுதான் நான் சொல்வேன். ’24’ அவருடைய சிந்தையில் விளைந்த குழந்தை. 6 வருடங்களாக அந்தக் கதையை அவர் செதுக்கியிருக்குறார். ஒரு நல்ல கதையை யாரும் அங்கீகரிக்காமல் இருக்க முடியாது. ஆத்ரேயா (படத்தில் சூர்யாவின் பாத்திரத்தின் பெயர்) கதாபாத்திரம் விக்ரம் குமாரால் வடிவமைக்கப்பட்டது. அதேபோல் மணி கதாபாத்திரம் மிகவும் அழகானது. மணி கதாபாத்திரத்துக்காகவும் சில சிரத்தைகளை நான் மேற்கொண்டிருக்கிறேன்.

கமலிடம் நீங்கள் கற்றுக் கொண்ட பாடம் என்ன?

எல்லா நடிகர்களுமே மக்கள் மனதில் நீங்கா இடம் பெறும் படத்தில் நடிக்க வேண்டும் எனவே விரும்புகின்றனர். ஏதாவது தனிச்சிறப்பாக செய்து ரசிகர்கள் நெஞ்சில் நிலைத்திருக்கவே விரும்புகின்றனர். அந்த வகையில் கமல் சாரின் படங்கள் எனக்கு அதிக உத்வேகத்தை அளிக்கின்றன. ஒவ்வொரு முறையும் புதிய படத்துக்காக திட்டமிடும்போதும் அவருடைய படங்களை பார்ப்பேன். அவர் பல வித்தியாசமான கதைக் களங்களை கொடுத்திருக்கிறார். வேற்று மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் அவர் எப்போதுமே நல்ல கதை களத்துக்கு பஞ்சம் இருப்பதாக புகார் கூறியதில்லை. அவர் தனக்கான இலக்கை எப்போதுமே சற்று உயர்வாக வைத்துக் கொள்வார். திரைப்படங்களை உருவாக்குவது என்பது மகிழ்ச்சிக்கு வித்திடுவது, கூடவே நல்ல நினைவுகளுக்கான அஸ்திவாரத்தை அமைப்பது போன்றதாகும்.

நீங்கள் புதிய களத்தில் செய்த படங்கள் வசூல் ரீதியில் பெரிய வரவேற்பை பெறவில்லையே..?

'மாற்றான்', 'ஏழாம் அறிவு' போன்ற படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும், ரசிகர்களுக்கு வித்தியாசமான படங்களை கொடுத்ததற்காக பெருமிதம் கொள்கிறேன். பொழுதுபோக்கு படம், ஹிட் படம், நல்ல படம் இவற்றுக்கு வித்தியாசம் இருக்கிறது. ஹிட் படங்கள் எல்லாம் நல்ல படங்களாக இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. அந்த வகையில் நான் எனது படத் தேர்வினை சுருக்கிக் கொண்டேனோ என சந்தேகிக்கின்றேன். '24' போன்ற நிறைய வித்தியாசமான திரைப்படங்களில் நடிக்க வேண்டும். 'மாற்றான்' படத்தில் வந்ததுபோல் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் கொண்ட கதை தமிழில் புதிது. அதேபோல் 'ஏழாம் அறிவு' வருவதற்கு முன்னதாக யாருக்கும் போதி தர்மனை தெரிந்திருக்கவில்லை. எனவே வெற்றிப் படங்களாக இல்லாவிட்டாலும் வித்தியாசமான படங்களில் நடித்ததில் எனக்கு மகிழ்ச்சி. எனது முயற்சிகள் எப்போதுமே நேர்மையாக இருக்கும்.

ஒரு நடிகராக இருக்க விருப்பமா இல்லையென்றால் நட்சத்திரமாக இருக்க விருப்பமா?

சில நேரங்களில் நான் சாதாரணமான கதைகளையும் தேர்வு செய்திருக்கிறேன். ஆனால், அப்போதெல்லாம் என் நலன் விரும்பிகள் திருப்தி அடையவில்லை. எனவே கமர்ஷியல் ரீதியாகவும் ஹிட்டாகக் கூடிய அதே வேளையில் நல்ல கதையும் கொண்ட படங்களில் நடிப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். ஆனால், அதற்காக எப்போதுமே சிக்கலான கதைகளில் மட்டுமே தேர்வு செய்வேன் என்று அர்த்தமில்லை. சில எளிமையான கதைக்களம் கொண்ட 'பசங்க-2', '36 வயதினிலே' போன்ற படங்களையும் செய்வேன். நட்சத்திரம் - நடிகர் என்ற பாகுபாடெல்லாம் எனக்குக் கிடையாது. இது வெறும் பொழுதுபோக்கு. ஒரு நடிகராக மட்டுமே கதையைக் கேட்டால் நீங்கள் சுயநலத்தோடு முடிவெடுக்க வேண்டியிருக்கும். அதுபோல் ஒரு நட்சத்திரமாக மட்டுமே கதையை அணுகினால் வேறு எதையும் கவனிக்காமல் நட்சத்திர அந்தஸ்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கும்.

படத்தயாரிப்பில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன?

படத்தயாரிப்பு, விநியோகிஸ்தம் செய்வதில் உள்ள சவால்கள் குறித்து எனக்கு அச்சமில்லை. நான் எப்போதுமே பணத்தை பற்றி கவலைப்பட்டதில்லை. ஒரு படத்தில் பணத்தை இழந்தால் அடுத்த படத்தில் அதை அடைந்துவிடலாம். ஒரு தயாரிப்பாளர் ஒரு படத்தில் கிடைக்கும் லாபத்தை அடுத்த படத்திற்கான முதலீடாகவே பார்ப்பார். ஒரு நடிகனாக நான் என் நேரத்தை முதலீடு செய்திருக்கிறேன். அதற்காக என்ன கிடைத்தாலும் எனக்கு லாபமே. ஒரு நல்ல திரைப்படத்தை தயாரித்த பெருமிதம் எனக்கு இருக்கும்

மற்ற நடிகர்களோடு இணைந்து நடிப்பதை நிறுத்திவிட்டீர்களே..

ஒரு படத்தின் நிஜ ஹீரோ அப்படத்தின் கதைதான். எனவே பல நட்சத்திரங்களோடு இணைந்து மல்டி ஸ்டாரர் திரைப்படங்களில் நடிப்பது தவறல்ல. மல்டி ஸ்டாரர் திரைப்படத்துக்கான அப்படிப்பட்ட நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்.

மீண்டும் ஹரியோடு 'சிங்கம் 3'?

’சிங்கம் 3’ படத்தில் முதல் இரண்டு பாகங்களின் சிறப்பம்சங்கள் மீண்டும் சேர்க்கப்பட்டிருந்தது. முதல் பாகம் செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்ததாக இருந்தது. இரண்டாவது பாகத்தில் ஆக்‌ஷன் அதிகமாக இருந்தது. ’சிங்கம் 3’ல் இரண்டுமே கலந்திருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x