Last Updated : 01 Feb, 2016 05:41 PM

 

Published : 01 Feb 2016 05:41 PM
Last Updated : 01 Feb 2016 05:41 PM

எனது முழு சுதந்திரத்தை இன்னும் பார்க்கவில்லை: கமல்

திரைப்படங்களை எடுப்பதில், தான் இன்னமும் முழு சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 28-ம் தேதியன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘சுதந்திரம்’ குறித்து கேள்விகளை அனுப்புமாறு தன் ரசிகர்களிடத்தில் கோரியிருந்தார் கமல்.

அதாவது “நாம் நம்பிக்கை வைத்துள்ள ஒன்றின் மீது நாம் விழிப்புடன் இருப்போம். சுதந்திரம் அழிந்து விடலாம். கேள்விகளை அனுப்புஙக்ள்” என்று ஜனவரி 26-ம் தேதியன்று ட்விட்டர் கணக்கில் இணைந்த கமல்ஹாசன் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் அவர் தனியார் தொலைக்காட்சியில் கூறியிருப்பதாவது:

"உலகின் பிற நாடுகளை ஒப்பிடும் போது எந்த ஓர் இந்திய திரைப்பட கர்த்தாக்களுக்கும் முழு பேச்சு சுதந்திரம் இல்லை என்பதே எதார்த்த உண்மை. எனவே எனக்கும் படங்கள் எடுப்பதில் முழு சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதை நான் புகாராகவே முன் வைக்கிறேன். நான் இன்னும் எனது முழு சுதந்திரத்தைக் காணவில்லை.

சுதந்திரத்தையும் அராஜகத்தையும் காலம் பிரிக்கிறது. சுதந்திரம் என்பது லஷ்மணன் கோடு போல் வரம்புடன் வர வேண்டும். சுதந்திரம் என்பது மாறாதது, நிலையானது. சுதந்திரம் என்பது நம் உடல் போன்றது, அதனை நாம் ஊட்டிவளர்க்க வேண்டும், காக்க வேண்டும்” என்றார்.

இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் மாணவர்கள் தலைவராக நடிகர் கஜேந்திர சவுகான் என்பவரை நியமித்ததை எதிர்த்து நடத்திய போராட்டம் பற்றி கூறிய கமல், “இந்த மாணவர்கள் புதிய வழிமுறையின் முன்னெடுப்பாளர்கள். இவர்களில் சிலர் இந்தியாவின் பெருமை என்றே கூற வேண்டும்” என்றார்.

மகாத்மா காந்தியே காரணம்:

ட்விட்டரில் தான் இணைந்ததற்கு மகாத்மா காந்தியே காரணம் என்று கூறிய கமல்ஹாசன்: "சமூக வலைத்தளத்தில் நுழைய எனக்கு தூண்டுகோலாக இருந்தவர் மகாத்மா காந்திதான். விமர்சனத்துக்கு அஞ்சக்கூடாது, பேசாமலேயே இருக்கக் கூடாது. மகாத்மா காந்திதான் சில வேளைகளில் எதைப் பேசினால் அபாயமாகுமோ அதனை தைரியமாக பேசியவர்.

காந்திஜீதான் மிகப் பெரிய ஹீரோ. அவரைப்போன்று வாழ்வதற்கு கடுமையான தைரியமும் மன உறுதியும் வேண்டும். அவர் தனிச்சிறப்பு வாய்ந்த ஓர் உதாரண புருஷர்" என்றார்.

விமர்சகர்கள் பற்றி கூறிய கமல், “விமர்சகர்கள் இன்னும் சகிப்புத் தன்மையை கடைபிடிக்க வேண்டும். விமர்சனம் என்பது ஆக்கபூர்வமாக இருக்க வேண்டுமே தவிர அழிப்பதாக இருக்கக் கூடாது

சென்னை வெள்ளம் பற்றி..

வெள்ளம் இல்லாமலேயே சென்னை சர்வதேச கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம். நாம் இதனை செய்து காட்ட முடியும், செய்துமிருக்கிறோம். எந்த ஒரு தமிழ் அல்லது மாநில செய்தித் தாளையும் எடுத்துப் பாருங்கள், அது இந்தியாவின் பிற பகுதிகளின் செய்திகள் பற்றி அதிகம் பேசுவதில்லை. இதனால் மிக முக்கியமான செய்திகள் கூட கவனம் பெறாமல் போய் விடுகிறது.

இவ்வாறு கூறினார் கமல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x