Last Updated : 20 Dec, 2013 09:25 AM

 

Published : 20 Dec 2013 09:25 AM
Last Updated : 20 Dec 2013 09:25 AM

இயக்குநர்களை மட்டுமே நம்புவேன் - மோகன்லால் சிறப்பு பேட்டி

தமிழிலும், மலையாளத்திலும் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய இரு நட்சத்திரங்களின் கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கும் ‘ஜில்லா’ படத்தை ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட்டாக அளிக்க அனைத்து பணிகளையும் தீவிரமாக கவனித்து வருகிறார், படத்தின் இயக்குநர் நேசன்.

சிவனாக மோகன்லாலும், சக்தியாக விஜய்யும் இணைந்து அவதரித்து மிரட்டும் இந்த படத்தின் கதாபாத்திரங்களின் பெயர்களே தனி இமேஜ் புள்ளியை முன் வைக்கிறது. ‘ஜில்லா’ படத்தில் டப்பிங்காக சென்னை ‘போர்ஃப்ரேம்’ ஸ்டுடியோ வந்திருந்திருந்த மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை சந்தித்து பேசதிலிருந்து…..

ஜில்லா.... தமிழ் படம், விஜய் தான் ஹீரோ.. புது இயக்குநர்.. இப்படி ஒரு படத்துல, நீங்க நடிக்க ஒத்துக்கற அளவுக்கு அப்படி என்ன வலுவான கதாபாத்திரம் அது?

இயக்குநர் நேசன் என்னை சந்தித்து ‘‘இந்தக் கதையை ரெடி பண்ணும்போதே உங்களை நினைத்துக்கொண்டுதான் உருவாக்கினேன். நீங்க இல்லைன்னா இந்தப்படத்தை தொடர முடியாமல் போகும்!’’ என்றார். அதோடு அவர் கதையின் மீது முழு நம்பிக்கையோடும் இருந்தார். பின், நடிகர் விஜய்யும் இந்த படத்தைப் பற்றி சொன்னார். விஜய்க்கூட படம் பண்ணுவது நல்ல விஷயம். நான் தொடர்ந்து மலையாளப்படங்கள் பன்ணும் ஆள். கால்ஷீட் தேதிகள் எல்லாம் கொஞ்சம் பிரச்சினையாக இருந்தது. எல்லாவற்றையும் சமாளித்துக்கோண்டு நேசன் மேல் முழு நம்பிக்கையானேன். எங்க இருவரின் கேரக்டரையும் பேலன்ஸ் பண்ணிக் கொண்டு போனது நேசனின் திறமைதான். நல்ல கதை. சிவா கேரக்டரில் வர்றேன். வெரி பவர்ஃபுல் கேரக்டர். ஒரு பர்ஃபெக்ட் எண்டெர்டெயினர் படம். மதுரையில் இருக்கும் ஒரு ஆள். பவர்ஃபுல் ஆள். அந்த பவர் எப்படி மிஸ் யூஸ் ஆகுது என்பது என் கேரக்டர். இதுக்கு முன் பண்ணின உன்னைப்போல் ஒருவன், பாப்கார்ன் படங்களிலிருந்து இந்த ‘ஜில்லா’ சிவா ரொம்பவே சேஞ்ச்சான ஆள்.

விஜய் பற்றி?

எல்லாருக்கும் பிடித்த ஆக்டர். கேரளாவிலும் அவர் பாப்புலர். எளிமையான மனிதர். அவரிடம் தனித்தன்மை இருக்கு. காதாபாத்திரம் பற்றி நிறைய பகிர்ந்துகொள்வார். வேறொரு மொழி, வேறொரு ஆக்டர் என்றால் சிலர் சமயத்தில் கோபப்படுவாங்க. அவர் அவ்வளவு தன்மையானவர். படத்தின் பாடல்கள் எல்லாம் பார்த்தேன். அற்புதமா வந்திருக்கு. அவரே பாடியிருக்கார். அதுவும் அழகா வந்திருக்கு. நடிகர்கள், இயக்குநர் உள்ளிட்ட குழுவினர்கிட்ட மொத்தமா ஒரு கெமிஸ்ட்ரி அமையும். அது ரொம்பவே அழகா அமைத்திருக்கு. எங்களோட வேலை எப்படி? என்ன? என்பது படத்தில் தெரியும்.

'ஜில்லா’ படத்தோட கேரள உரிமையை வாங்கியிருக்கீங்களா? ஏன் ?

ரொம்ப காலமாக தயாரிப்பு, டிஸ்ட்ரிப்யூட் பணிகளையும் செய்துக்கிட்டிருக்கேன். இதுமாதிரி ஒரு படம் வரும்போது அதை வேறு யாரும் பண்ணக்கூடாது. எல்லா விதமான புரமோஷன்ஸையும் நம்மால் செய்ய முடியும். வேறொருத்தர் எங்க அளவுக்கு பப்ளிசிட்டிக்கு செலவு செய்ய மாட்டாங்க. எங்களுக்கு என்ன தோணுதோ, எங்க விருப்பத்தோடவே அதை செய்வோம். அதனால்தான்.

ஜில்லாவைத் தொடர்ந்து நிறைய தமிழ்ப்படங்களில் நடிக்க சொல்லி கேட்பார்களே.. நேரம் இருக்கா?

மணிரத்னம் படத்தில் என்னை நடிக்க கேட்டபோது, ‘எதுக்காக என்னை அழைக்கிறீங்க?’ என்று கேட்டேன். ‘‘ஏன்னா, நீ எனக்கு வேண்டும்!’’ என்று சொன்னார். அப்படித்தான் நான் இங்கு செய்த ஒவ்வொரு படமும். ‘உன்னைப்போல் ஒருவன்’ படம் செய்ததில் எல்லாம் ஒரு காரணம் இருந்துச்சு. அப்படி கதை அமையாமல் எப்படி ஒப்புக்கொள்வது. சும்மா எப்படி ஒரு பண்ண முடியுமா? அதுக்கு மலையாளப்படங்கள் தொடர்ச்சியாக செய்து விடுவேனே.

கேரளாவுல விஜய்க்கு நல்ல மாஸ் இருக்கு. நீங்க அங்க சூப்பர் ஸ்டார்... மலையாள ரசிகர்களுக்கு ஜில்லா எந்த மாதிரி ட்ரீட்டா இருக்கும்?

பெரிய திருவிழா மாதிரிதான் இருக்கும். இதுல என்ன ஒண்ணுன்னா, எங்க ரெண்டு பேரோட ரசிகர்கள், மற்ற சிலரோட கதாபாத்திரங்களையும் விரும்புவாங்க இல்லையா. அந்த எதிர்பார்ப்பு ரசனையையும் மனதில் வைத்து நேசன் படத்தை மூவ் பண்ணியிருக்கார். விஜய்க்கும், எனக்கும் அப்படி ஒரு ரிலேஷன்ஷிப். எங்களோட பேரே சிவன், சக்தி. அழகா, திறமையா பேலன்ஸ் பண்ணியிருக்கார். ரசிகர்கள் எல்லோரும் கண்டிப்பா விரும்புவாங்க.

மலையாளம் தவிர்த்து, பிறமொழிப் படங்களில் நடிக்கும்போது, எதை நம்பி களத்தில் இறங்குகிறீர்கள்? இயக்குனரை நம்பியா அல்லது கதாபாத்திரத்தை நம்பியா?

எப்போதும் இயக்குநர்களை மட்டுமே நம்புவேன். கதை சொல்லிட்டு வேறமாதிரி படத்தை எடுத்துட்டா என்ன செய்வது. அதனால்தான் ‘ரெஸ்பெக்ட் மை டைரக்டர்’. அப்படி கவனம் இல்லாமல் போனால் சமயத்தில் தவறான ரிசல்ட் கிடைச்சிடும். இயக்குநர் கதை சொல்லும் தருணத்தில் ஒரு தனித்த உணர்வு ஏற்படனும். அந்த நிலை, நம்மை உள்ளுக்குள் கொண்டாடச் செய்ய வேண்டும். இயக்குநருக்கும் நடிகனுக்கும் இடையே ஒர் பெரும் நம்பிக்கை ஓட வேண்டும். அதுதான் கொண்டாட்டம். அதுதான் படத்தின் வெற்றி. ‘ஜில்லா’ நேசனும் அப்படித்தான்.

ஃபகத், வினீத், துல்கர்... இவங்களோட சீசனை எப்படிப் பார்க்கிறீங்க?

எக்ஸலண்ட் நடிகர்கள். இவர்களோடு நானும் நடித்திருக்கிறேன். இப்போ எல்லாம் நல்ல கதை கிடைக்கணும். எல்லாருக்கும் நான் சொல்வது என்னன்னா, நல்ல கதை கிடைப்பது ‘லக்’ தான். அதைத்தான் ரசிகர்கள் எதிபார்க்கிறாங்க. நான் 20 ஆண்டுகளுக்கு முன் எல்லாம் அப்படியான கதையை தேர்வு செய்து நடித்ததால்தான் இன்றைக்கும் ஆக்டிவா ட்ரவால் ஆகிறேன். அதெல்லாம் சேர்ந்தாதான் ஒரு நல்ல நடிகர் என்று பேர் வாங்க முடியும். இப்பவும் அப்படித்தான், இவர்களுக்கு நல்ல கதை கிடைக்கிறது. மலையாள சினிமாவில் இப்போ நடப்பது ஒரு புரட்சி மாதிரிதான் தெரியுது. எல்லா படங்களும் நல்ல படங்கள் என்று சொல்ல முடியாது. சில படங்கள் நல்ல சீன்ஸ் உள்ள படங்களாக வருகிறது. அப்படி கிடைத்தால்தான் இவர்கள் நன்றாக டிராவல் ஆக முடியும். அந்த ‘லக்’ இவங்களுக்கு தொடர்ந்து கிடைச்சிக்கிட்டே இருக்கணும்.

குறைவான பட்ஜெட்ல சோதனை முயற்சி படங்கள் நிறைய வருதே... சீனியரா இதுல உங்களோட பங்களிப்பு?

சினிமாவை பொறுத்தவரை ‘பட்ஜெட் ’ என்று சொல்வதை விட ‘கன்டன்ட்’ என்று சொல்லலாம். அது நல்லா இருந்தால்தான் நல்ல படம் என்று பேர் வாங்க முடியும். சில படங்களை எடுத்துக்கிட்டா இப்படித்தான் ஷூட் பண்ணனும்னு இருக்கு. இப்போ ‘ஜில்லா’ வை ஜப்பான்ல எல்லாம் ஷுட் பண்ணியிருக்காங்க. காரணம் ‘இன்டர்நேஷனல்’ ரசிகர்கள். ஒரு நல்ல படம் 40 லட்சத்திலும் கிடைத்து விடுகிறது. படத்தை பார்க்கும் 1000 நபர்களில் 900 நபர்களுக்கு சின்ன ‘பட்ஜெட்’ படம் பிடிக்கவும் செய்கிறது. அங்கே ‘கன்டன்ட்’ தானே முக்கியமான மாறுது. படத்தில் ஒரு விஷுவல் ட்ரீட் இருக்கணும் அது ஹை, லோ என்பது எல்லாம் இல்லை. நல்ல கதைக்கு ஒரு இயக்குநரே முக்கியமான காரணமாக அமைகிறார்.

சச்சின் ஓய்வு பெற்றபோது, மூணு பக்க அளவுல ப்ளாக்ல அவரைப் பத்தி எழுதித் தள்ளிட்டீங்க. உங்களோட ஸ்போர்ட்ஸ் பேக்ரவுண்ட்?

கல்லூரி நாட்களில் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமாக இருந்தவன், நான். ‘ரெஸ்லின்’ ல ஸ்டேட் ஜாம்பியன். பேட்மிட்டன், செட்டில் எல்லாம் கலக்கியிருக்கேன். ‘டாய்க்வுண்டோ’ பிளாக்பெல்ட் மாணவனாக இருந்த பருவமும் இருக்கு. அதையெல்லாம் வைத்து நிறைய ஆக்ஷன் படங்கள் பண்ணியிருக்கேன். இப்போது எல்லாம் எனக்கு வேலை நிறைய இருப்பதால் விளையாட்டுக்கு நேரமில்லை. சச்சின், இறுதியாக ஆற்றிய பேச்சு என்னை ரொம்பவே கவர்ந்தது. அவரோட பங்களிப்பு, சாதனை எல்லாம் வியக்க வைக்கிற விஷயம். அதை தொடர்ந்து 25 ஆண்டுகளாக தக்க வைத்துக்கொள்வதற்காக அவர் எவ்வளவு கடினமாக உழைத்திருப்பார். அவருக்கு அளித்த ‘பாரத ரத்னா’ விருதைக்கூட அம்மாக்களுக்கு சமர்ப்பித்தார். அவரோட பேச்சு வளரும் இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. அந்த உண்மையான உணர்வுள்ள உரையாடல், என்னை நெகிழ்ச்சியோடு எழுத வைத்ததுதான் அந்த பக்கங்கள்.

மலையாளத்துலயும் வெயிட்டான சப்போர்ட்டிங் ரோல் பண்ண ஆரம்பிச்சிட்டீங்க, வேறு மொழிகளிலும் தொடர்ந்து பண்ணிட்டு வர்றீங்க? இந்த அணுகுமுறை அமிதாப் பச்சனை நினைவூட்டுதே?

நடிகர்கள் அப்படித்தானே. நடிப்பில் சவுத், நார்த் என்று இல்லை. எல்லா மொழிகளிலும் பங்களிக்க வேண்டும். உடல் 100 ஆண்டுகள் ஈடுகொடுத்தால் அந்த வயதிற்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும்தானே. இங்கே உள்ள ஒரு ஆள் அங்கு போய் வேலை பார்ப்பது, அங்கு இருப்பவர் இங்கு வந்து வேலை பார்ப்பது எல்லாம் ஒரு குடும்பம் மாதிரிதான். பிடித்த கதாபாத்திரங்களை செய்துகொண்டே இருக்க வேண்டியதுதான். தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவுதானே.

இந்தியாவின் முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடிச்ச அனுபவம் மிக்கவர் என்ற முறையில், யாருடைய இயக்கத்தில் மீண்டும் மீண்டும் நடிக்கணும்னு விருப்பம்... அதுக்கு என்ன காரணம்?

பிரேம் நசீர், சிவாஜி, நாகேஷ், அபிதாப் என்று முக்கியமானவர்களோடு நடித்துவிட்டேன். ராஜ்குமாருடன் சேர்ந்து நடிக்கும் சூழ்நிலையில் அவரது உடல்நிலை ஒப்புக்கொள்ளாமல் போனது. இவர்கள் எல்லோரும் சினிமாவின் தூண்கள். ஒரு சின்னம். பெருமைக்குரிய நடிகர்கள். சேர்ந்து நடித்த எனக்கு சந்தோஷம் இல்லாமல் இருக்குமா என்ன. இங்கே இயக்குநர்களும் அப்படித்தான். எல்லாரும் நன்றாகவே செய்திருக்கிறார்கள். தனியாக பிரித்து சொல்ல முடியாது. எல்லா இயக்குநர்களும் எனக்குப் பிடித்தவர்கள்தான். அவர்களுடன் மீண்டும் வேலை செய்ய விரும்புகிறவன்தான் நானும்.

லாலேட்டனும் மம்முக்காவும் அடிக்கடி சந்திப்பது பேசுவது உண்டா? நட்பின் நிலை?

இருவரும் கிட்டத்தட்ட ஒரு பகுதியில் இருந்துதான் சினிமாவுக்கு வந்தோம். இருவரும் இணைந்து 54, 55 படங்கள் நடித்திருக்கோம். மற்ற மொழிகளில் யாரும் இப்படி சேர்ந்து நடித்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இப்போ எங்க ரெண்டு பேரையும் வைத்து ஒரு படம் பண்ணுவது கஷ்டம். அப்படி ஒரு கதை அமையுமா என்று தெரியவில்லை. அப்படி இருக்க 55 படங்கள் இணைந்து நடித்திருப்பது பெரிய விஷயமாக தோணுது. சின்ன வயதில் இருந்தே இரு வீட்டினரும் பழக்கம். அதுக்காக தினமும் தொலைபேசியில் பேசிக்கொள்வது எல்லாம் இல்லை. நிகழ்ச்சிகளில் பார்க்கும்போது பகிர்ந்துகொள்வோம். சினிமா அசோசியேஷன் சந்திப்பில் கலந்து பேசுவோம். நாங்க சொல்லும் நல்ல விஷயங்களை ஏற்றுக்கொள்வார். என்னிடம் மட்டும் என்று அல்ல. எல்லோரிடமும் அன்பாக பேசிப்பழகும் குணம் மம்முட்டிக்கு.

தமிழ், மலையாளம், இந்தி... இந்த மூணு சினிமாவுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

மொழிதான்(சிரிக்கிறார்) ‘எவ்டா போரே’ என்ற வார்த்தை ‘எங்க போறீங்க’ என்று சொல்லும் அந்த வித்தியாசம்தான். நம்ம பண்ணும்போது அந்த கேரக்டர் வித்தியாசப்படும். மற்றபடி சிரிப்பு, ஆக்ஷன், எமோஷன், சினிமா இலக்கணம் எல்லாம் ஒண்ணுதானே.

என்னதான் மலையாள ரசிகர்கள் தீவிரமானவங்களா இருந்தாலும், தமிழ் ரசிகர்கள் அளவுக்கு ஒருவித வெறித்தனம் இல்லை. இவ்விரண்டு மொழி ரசிகர்களிடமும் நெருக்கம் காட்டியவர் என்ற வகையில் இவர்களை எப்படி வேறுபடுத்தி பாக்கிறீங்க?

கேரளா சின்ன ப்ளேஸ்தான். தமிழ்நாட்டில் பாப்புலேஷன் அதிகம். கேரள ரசிகர்களுக்கு எப்படி பிரேம் நசீர், மது, மம்முட்டி, மோகன்லால் என்று தெரியுமோ அதேபோல தமிழ்நாட்டி நடிகர்களையும் தெரியும். அங்கு, கேரள சினிமாவும் பார்ப்பார்கள். தவிற தமிழ், ஹிந்தி படங்களும் விரும்பி பார்ப்பார்கள். தமிழ் சினிமா லெவல் இண்டர்நேஷன்ல் மார்க்கெட் லெவல். இங்கே மேன் பவர் அதிகம். அதிகமா இங்கே சினிமாவை விரும்புறாங்க. கேரளாவில் ஒரு மாதம் சினிமா இல்லாமல் கூட ரசிகர்கள் இருந்துவிடுவார்கள். அதிலும், தெலுங்கில் எல்லாம் சினிமாதான் ஆக்ஸிசன்.

இன்டர்நெட்ல ஆக்டிவா இருக்குற மலையாள நட்சத்திரங்களில் நீங்களும் ஒருத்தர். ட்விட்டர் யுகத்துல ஸ்டாருக்கும் ஃபேன்ஸுக்குமான இடைவெளி குறைஞ்சி இருப்பதை எப்படி பார்க்கிறீங்க?

நினைக்கும், விரும்பும் விஷயத்தை நேரடியாக பகிர்ந்துகொள்ள நல்ல சந்தர்ப்பம் இது வழியா எனக்கு கிடைச்சிருக்கு. தினமும் இதில் ஆக்டிவா இருக்கிறேன். மனதில் தோன்றும் எதையும் பகிந்துகொள்ள கிடைத்த இந்த வசதி ஒரு அழகான பிளாட்பார்ம். சொந்தமாக 3, 4 புத்தகங்களையும் மலையாளத்தில் எழுதியிருக்கிறேன். என்னை இந்தத் தளத்தில் தொடரும் பலரும் ரசிகர்கள் என்பதோடு நின்றுவிடாமல் சீரியஸாக பின் தொடர்கிறவர்கள், நிறைய பேர் இருக்காங்க. அவர்களில் சிலர் அட்வைஸ் பண்ணவும் செய்றாங்க. இதுக்கெல்லாம் நிறைய இடம் இருக்கும்போது, அது நல்லதுதானே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x