Published : 29 Mar 2016 08:44 PM
Last Updated : 29 Mar 2016 08:44 PM

இப்போதும் பாடத் தயார்: கின்னஸில் இடம்பெற்ற பாடகி சுசிலா நெகிழ்ச்சி

இசைக்காகவே என் வாழ்க்கையை அர்ப்பணித்ததில் மகிழ்ச்சி. நல்ல வாய்ப்பு அமைந்தால் இப்போதும் பாடத் தயாராகவே இருக்கிறேன் என்று கின்னஸில் இடம்பிடித்த பாடகி பி.சுசிலா தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்படப் பல இந்திய மொழிகளில் சுசீலா நாற்பதாண்டுகளாக பாடிவருகிறார்.

பத்மபூஷன் , தேசிய விருது, கலைமாமணி விருது, ஆந்திர மாநில அரசினரின் விருது ரகுபதி பெங்கையா விருது, கம்பன் புகழ் விருது உள்ளிட்ட பல விருதுகளை பி.சுசீலா பெற்றுள்ளார்.

திரைப்படத் துறையில் முன்னணிப் பாடகியாக திகழும் பி.சுசிலா 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியதால் அதிக பாடல்களைப் பாடியவர் என்ற அடிப்படையில் கின்னஸ் சாதனை புத்தக்கதில் இடம்பிடித்துள்ளார்.

இதைப் பகிரும் விதமாக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :

கின்னஸ் சாதனை படைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். திரைப்படத்தில் பாடுவதற்கு முன் எச்.எம்.வி இசைத்தட்டில்தான் எனது பாடல்கள் இடம்பெற்றன. என் குரல் நன்றாக இருப்பதாக கூறி ஏவி. மெய்யப்ப செட்டியார்தான் என்னை திரைக்குக் கொண்டு வந்தார்.

அவரால்தான் எனக்கும் பேரும் புகழும் கிடைத்தது. எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ண தாசன், வாலி போன்ற பெரிய கலைஞர்களோடு பணியாற்றி யதை பெருமையாக கருதுகிறேன். எம்.எஸ்.வி இசையில் வெளியான ‘நாளை இந்த வேளை பார்த்து’ பாடலுக்குத்தான் எனக்கு முதல் முறையாக தேசிய விருது கிடைத் தது. இந்தப் பாடலை பதிவு செய்யும்போதே அதற்காக எனக்கு விருது கிடைக்கும் என்று எம்.எஸ்.வி கூறினார். அதேபோல கிடைத்தது மகிழ்ச்சி அளித்தது.

இயக்குநர் கே.எஸ். கோபால கிருஷ்ணன் என்னை நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார். கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். எனக்கு எப்போதுமே நடிப்பில் பிரியம் இருந்ததில்லை. அந்த நாட்களில் இசையமைப்பாளரின் மெட்டுக்கு சரியாக பாடியதால்தான் எனக்கு பாராட்டுகள் குவிந்தன.

இசைக்காகவே என் வாழ்க்கையை அர்ப்பணித்ததில் மகிழ்ச்சி. நல்ல வாய்ப்பு அமைந்தால் இப்போதும் பாடத் தயாராகவே இருக்கிறேன்.

இவ்வாறு பி.சுசிலா பேசினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x