Last Updated : 17 Jun, 2015 10:26 AM

 

Published : 17 Jun 2015 10:26 AM
Last Updated : 17 Jun 2015 10:26 AM

இதுவரை முதல்பாதி.. இனிதான் மறுபாதி: பொங்கிய லிங்குசாமி

என்னுடைய சொத்துக்களை விற்றாவது இந்த 'ரஜினி முருகன்' படத்தை வெளியிட்டே தீருவேன் என்று இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் லிங்குசாமி ஆவேசமாக தெரிவித்தார்.
( வீடியோ இணைப்பு கீழே)

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சூரி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்க பொன்ராம் இயக்கயிருக்கும் படம் 'ரஜினி முருகன்'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் மொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டார்கள்.

இவ்விழாவில் பேசிய அனைவருமே "எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், அனைத்து தடைகளையும் தாண்டி இப்படம் வெளியாகும். அனைவருமே லிங்குசாமிக்கு துணை நிற்போம்" என்று பேசினார்கள்.

இறுதியாக பேசியாக லிங்குசாமி படக்குழுவினரை வாழ்த்தி பேசியவர், கடைசியாக தனது நிறுவனத்திற்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் குறித்து பேசினார்.

அப்பிரச்சினைகள் குறித்து லிங்குசாமி பேசியது:

"சினிமாவே நம்பிக்கையில்தான் இயங்குகிறது. ஊரிலிருந்து இங்கு நான் வந்தபோது என்ன கொண்டு வந்தேன்? நம்பிக்கையை மட்டும்தான் எடுத்துக்கொண்டு வந்தேன். வேறு என்ன அள்ளிக் கொண்டு வந்தேன்?

உதவி இயக்குநராக சென்னையிலிருந்து நான் ஊருக்குப் போகும் போதெல்லாம் நான் மதிக்கும் உறவினரை வைத்து என்னிடம் சமரசம் பேசி மனதை மாற்றுவார்கள்.சினிமாவில் லட்சம் பேர் வருகிறார்கள். ஒருவன்தான் ஜெயிக்கிறான் உன்னால் முடியுமா என்பார்கள்.அப்போது அந்த ஒருவன் நான்தான் என்பேன். நான் சினிமாதான் என்பதில் உறுதியாக இருந்தேன்; நம்பிக்கையாக இருந்தேன்; பிடிவாதமாக இருந்தேன்

ஒருநாள் குடும்ப ஜோதிடர் என்று ஒருவர் வந்தார். உன்னால் சினிமாவில் ஒரு பிரேம் கூட எடுக்க முடியாது என்று கூறினார். அவர் சொன்ன மூன்றாவது மாதத்தில் 'ஆனந்தம் படப்பிடிப்பு தொடங்கி விட்டேன்.

இன்றைக்கு நாலு படங்கள் தயாரிக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். சினிமாவில் நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும் நான் ஒவ்வொரு தடவையும் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி பார்த்து விட்டுத்தான் வந்திருக்கிறேன். 10 கோடி, 20 கோடி, 40 கோடி போன்ற பணம் எல்லாம் என்றைக்குமே அசைத்து விடாது. அது பெரிய விஷயமே கிடையாது.

மஞ்சப்பையோடு தான் வந்தேன், மஞ்சப்பையோடு தான் போவேன் என்ற வார்த்தைகள் எல்லாம் இருக்கு இல்லையா.. என்னய்யா இது.. சாகும்போது என்னத்த கொண்டு போகப் போககிறோம். வாழும் போது நாம என்ன செய்தோம், என்ன சாதித்தோம் என்பது மட்டும் தான் முக்கியம். நான் எவ்வளவு நேர்மையாக இருக்கிறேன், எவ்வளவு உழைக்கப் போகிறேன்.இது போன்று இன்னும் என்னுடைய வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கிறது. இதைவிட சோதனையான காலங்களை எல்லாம் நான் பார்த்திருக்கிறேன்.

இந்தப் படம் வருமா, வராதா என்ற கேள்வி சுற்றிக் கொண்டே இருக்கிறது. இந்தப் படம் வரும். குறித்த நேரத்தில் இசை வெளியீடு ஆன மாதிரி, குறித்த நேரத்தில் இந்தப் படம் வெளியாகும். எனக்கு இந்த சோதனை வந்தது பெரிய சந்தோஷம். நல்லவன் யாரு, கெட்டவன் யாரு நம்ம கூடவே நிற்கிறவன் யாரு அப்படியே என்னை மாதிரி சினிமாவில் எல்லாரும் நம்மள மாதிரி நல்லவங்க என்று நினைத்துக் கொண்டு இருந்த போது சுற்றி பார்ப்பதற்கு, கொஞ்சம் நிதானமா விளையாடுவதற்கும் இது என் முதல் பாதி. மறுபாதி இனிமேல்தான்.

அப்படித்தான் 'சண்டைக்கோழி 2' எனக்கு முக்கியமான படம். அதனால் தான் 'கும்கி 2', 'சதுரங்க வேட்டை 2'. எல்லா பார்ட் 2 என்னுடைய வாழ்க்கையில் இப்போது தான் ஆரம்பிக்கிறது. பணம் வந்ததா, இல்லையா என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் பணியாற்றிய இப்படக்குழுவை என்னுடைய வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன்.

எதை வேண்டுமானாலும் விற்றுக் கூட இப்படத்தை வெளியிடுவேன். அதற்கு பிறகு நிற்போம். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. பிரச்சினை இருக்கிறது இல்லை என்று கூற மாட்டேன். இந்த முறையும் இப்பிரச்சினையில் இருந்து வெளியே வருவோம்" என்று லிங்குசாமி பேசினார்.