Last Updated : 21 Oct, 2016 06:29 PM

 

Published : 21 Oct 2016 06:29 PM
Last Updated : 21 Oct 2016 06:29 PM

இணைய வீடியோ விமர்சனங்களுக்கு எதிராக இணையும் திரையுலகம்!

இணையத்தில் வீடியோ விமர்சனங்கள் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை நாடவுள்ளதாக அறிவித்துள்ள விநியோகஸ்தர் கோபிக்கு தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'ரெமோ' படத்துக்கு சமூக வலைத்தளத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பாக, யூடியூபில் பிரபலமான வீடியோ விமர்சகர்கள் இருவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக ஜே.எஸ்.கே கோபி அறிவித்துள்ளார். இவர், ஜே.எஸ்.கே பிக்சர்ஸ் என்ற பெயரில் பல்வேறு முன்னணி படங்களை விநியோகம் செய்திருக்கிறார்.

இவருக்கு ஆதரவாக தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் இரு தரப்புமே அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தற்சமயம் முறைப்படுத்தப்படாது சமூக வலைத்தளங்களில் மேம்போக்கான வெறும் பரபரப்பூட்டுகின்ற ஆழமற்ற வார்த்தை ஜாலங்களைக் கொண்டு விமர்சனங்களாக வெளிவருகின்றன.

பெரும் முதலீட்டோடு உருவாக்கப்படுகின்ற திரைப்படங்கள் இத்தகைய விமர்சனங்களால் பெருமளவில் பொருளாதார ரீதியாக தயாரிப்பாளர்களையும், விநியோகஸ்தர்களையும், திரையரங்கம் நடத்துபவர்களையும் பாதிக்கிறது. விமர்சனங்கள் மக்களின் ரசனையை தூண்டுவதாக இருக்கவேண்டுமேயன்றி விமர்சனங்களே ஒரு பொழுதுப்போக்காகி விடக்கூடாது.

அதுவும் ஒரு நடிகரையோ, நடிகையையோ மற்றும் தொழில்நுட்பக் கலைஞரையோ தனிப்பட்டமுறையில் விமர்சனம் என்ற பெயரில் கேலி வார்த்தைகளை அள்ளித்தெளிப்பது கண்டிக்கத்தக்கது. அதன் அடிப்படையில் ஜே.எஸ்.கே. கோபி அதனை சட்டரீதியாக முறைப்படுத்த முயற்சிக்கிறார்கள். அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் முழு ஒத்துழைப்பையும் நல்கும்" என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இதனையே நடிகர் சங்கமும் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது. திரையுலகின் முக்கியமான இரண்டு சங்கங்கள், சமூக வலைத்தள விமர்சனங்களுக்கு எதிராக களம் இறங்கியிருப்பது மிக முக்கியமானதாக கவனிக்கப்படுகிறது.

இதனிடையே, சமூக வலைதளத்தில் விமர்சனம் வெளியிடுபவர்களும் தனியாக சங்கம் தொடங்குவது குறித்த ஆலோசனையில் களம் இறங்கியிருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x