Last Updated : 29 Apr, 2016 06:52 PM

 

Published : 29 Apr 2016 06:52 PM
Last Updated : 29 Apr 2016 06:52 PM

அஜித், விஜய்க்கு ஆலோசனை வழங்க மாட்டேன்: கமல் ஹாசன்

நடிகர் சங்க விவகாரத்தில் அஜித், விஜய்க்கு ஆலோசனை வழங்க மாட்டேன் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கமல் ஹாசன் தெரிவித்தார்.

ராஜீவ்குமார் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் படத்தின் பூஜை சென்னையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. கமல், ஸ்ருதி ஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட படக்குழுவினரோடு நடிகர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.

இப்படத்திற்கு தலைப்பு 'சபாஷ் நாயுடு' என்று படப்பூஜையில் அறிவித்தார் கமல். தமிழ் மற்றும் தெலுங்கில் கமலுடன் பிரம்மானந்தம் முக்கிய பாத்திரத்திலும், இந்தியில் கமலுடன் செளரஃப் சுக்லாவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதையை கமல் எழுதியிருக்கிறார்.

படப்பூஜையைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கமல் ஹாசன் பேசியது, "தமிழ் மற்றும் தெலுங்கு படங்களின் தலைப்பாக 'சபாஷ் நாயுடு' இருக்கும். இந்தியில் 'சபாஷ் குந்து' என்று இருக்கும். காமெடி த்ரில்லராக உருவாக்க இருக்கிறோம். தமிழில் நான் திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறேன்.

ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தத்திற்கான காரணம்

சினிமாவில் இரண்டு மகள்களோடும் பணியாற்றுவேன் என்று நினைத்துப் பார்த்திருக்கிறேன். இப்படி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. யார் எப்படி வருவார் என்பது எனக்கு தெரியாது. ஸ்ருதி ஹாசன் இசையுலகிற்கு சென்றிருக்க வேண்டியது. ராஜீவ் குமார் இயக்கத்தில் 25 வருடங்களுக்கு பிறகு நடிப்பதில் சந்தோஷம். நடுவில் நிறைய விஷயங்கள் பேசினோம். அப்படியே தள்ளிப் போய் இந்தப் படத்தில் இணைந்தது சந்தோஷம்.

ஸ்ருதி ஹாசனைப் பொறுத்தவரை கமல் பெண் தானே, அதான் நடிக்கிறார் என்று யாரும் சொல்லிவிடக் கூடாதே என்று நினைப்பு இருந்தது. அதனால் தான் அவருடன் நடிக்காமலே இருந்தேன். ராஜ்கமல் நிறுவனம் ஒரு ஸ்டாரை ஒப்பந்தம் செய்வது போலத் தான் இப்படத்தில் ஸ்ருதியை ஒப்பந்தம் செய்திருக்கிறோம். எனக்கு மகளாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ரஹ்மானின் 'பாம்பே ட்ரீம்ஸ்' இசை நாடகத்தில் நாயகனாக நடித்த மனுப் நாராயணன் இப்படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

தெருவில் இருந்து ஜாதிப் பெயரை எடுங்கள்

ஒரு குடிகாரனைப் பற்றி படமெடுத்தால் தான் மதுவிலக்கு பற்றி எடுக்க முடியும். என்ன சொல்ல வருகிறோம் என்று தெரியாமல் ஜாதிப் பெயர் இருக்கிறதே என்றால், முதலில் ஜாதிப் பெயரை தெருவில் இருந்து எடுங்கள். பெயருக்கு முன்னாள் இருந்து ஜாதிப் பெயரை எடுங்கள். நான் எடுத்துவிட்டேன்.

இப்படத்திற்கும் 'துப்பறியும் சாம்புவிற்கும் சம்பந்தமில்லை. அப்படத்தைப் போல இருந்தாலும் இது வேறு மாதிரியான ஒரு சுவை. பல்ராம் நாயுடு பாத்திரத்திற்கும் இதற்கும் தொடர்புண்டு. பல்ராம் நாயுடுவின் தனிவாழ்க்கை தான் இந்தப் படம்.

பாடல்களின் பின்னணி

4 பாட்டு முடிவு பண்ணியிருக்கிறோம். அமெரிக்காவில் 'DISTRICT 72' என்ற குழு இருக்கிறார்கள். அவர்கள் இளையராஜாவோடு இப்படத்தில் பணிபுரிய இருக்கிறார்கள். வித்தியாசமான் ஒலி சேர்க்கை இருக்கும் என நம்புகிறோம். வேலைப் பளு, நாயுடு வேஷம் போடும் போது அதற்கான நேரம் ஒதுக்க வேண்டும். அதனால் பொறுப்பாக இயக்குவதற்கு ஆள் வேண்டும். அதற்காக ராஜீவ் குமாரைத் தேர்வு செய்தேன்.

நகைச்சுவைப் படங்கள் மட்டுமல்ல என்னுடைய சீரியஸ் படங்களின் கதைகளைக் கூட அவரிடம் சொல்வேன். மெளலி, கிரேசி மோகன், சுதா, ஜெயமோகன் இப்படி என்னுடைய நண்பர்கள் அனைவருக்குமே என் கதைகளை படித்துக் காட்டுவதுண்டு. தேவைப்பட்டால் அவர்களுடைய பங்களிப்பையும் ஏற்றுக் கொள்வேன்.

படப்பிடிப்பு திட்டங்கள்

மே 16-ம் தேதி அமெரிக்காவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறோம். 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை தான் இந்தியாவில் படமாக்க இருக்கிறோம். நாங்கள் அமெரிக்க படப்பிடிப்பை ஜூன் இறுதியில் முடிக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறோம். இங்கு ஜூலையில் பாக்கி வரும் படப்பிடிப்பை முடிக்க இருக்கிறோம்.

எனக்கு ஓட்டு இல்லை

மே 16-ல் நான் இங்கு இல்லை. என்னுடைய வாக்கை யாராவது போட்டு விடுவார்கள். இதற்கு முன்பு எனக்கு ஓட்டு இல்லை என்றார்கள். அப்போது நான் கெஞ்சிக் கேட்டு, "இல்லீங்க... நான் இன்னும் இந்திய பிரஜை தான் என்று சொன்னேன்". பாவம்...தேர்தல் ஆணையத்தில் இருப்பவர்கள் எல்லாம் எனக்கு நண்பர்கள் தான். நானும் முடிந்தால் இங்கு வந்து வாக்களித்துவிட்டு செல்வேன்.

என்னுடைய படங்களில் ப்ரெஞ்ச் படங்கள், சிவாஜி படங்கள் உள்ளிட்ட நான் பார்த்த படங்களின் தாக்கம் இருக்கும். எந்தப் படமாக இருந்தாலும் அதன் உரிமையை வாங்கிப் பண்ணும் பழக்கம் உண்டு. இந்தப் படத்திற்கு நான் உரிமை வாங்கும் பழக்கம் கிடையாது. இது என்னுடைய ஒரிஜினல் ஐடியா.

ஆலோசனை வழங்க மாட்டேன்

விஜய், அஜித்திற்கு நான் ஆலோசனை வழங்க மாட்டேன். அவர்கள் ஒதுங்கி இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கும். அதைப் பற்றி நான் பேசக் கூடாது. அவர்கள் என்னுடைய சகோதரர்கள், இது ஒரு குடும்பம். கதவு எப்போது வேண்டுமானாலும் திறந்திருக்கும், அவர்கள் வரலாம்.

லைக்கா நிறுவனத்தினர் 'மருதநாயகம்' எங்களுக்கு தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு முன்பு ஒரு படம் பண்ணலாம் என்று இதைப் பண்ணியிருக்கிறோம். நம்பகமானவர் மட்டுமல்ல நம் மீது நம்பிக்கை வைப்பவரும் கூட.

எனக்கு ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். நற்பணி இயக்கத்தில் சேரும் போது கூட அரசியலைக் கொண்டு வராதீர்கள் என்று சொல்லியிருக்கிறேன்." என்று பேசினார் கமல்ஹாசன்.

இவ்விழாவில் பேசிய ஸ்ருதிஹாசன் "எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. பயம் கூச்சம் எல்லாம் இல்லை. எனக்கு இந்தப் படத்தின் கதை பிடித்திருக்கிறது. அதனால் தான் இப்படத்தை ஒப்புக் கொண்டேன்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x