Last Updated : 26 Aug, 2016 03:13 PM

 

Published : 26 Aug 2016 03:13 PM
Last Updated : 26 Aug 2016 03:13 PM

இலங்கை தமிழர்கள் மீது சாடலா?- இயக்குநர் சேரனின் பேச்சும் விளக்கமும்

இலங்கை தமிழர்களை தாம் கடுமையாக சாடிப் பேசியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து இயக்குநர் சேரன் விளக்கமளித்துள்ளார்.

'நாளைய இயக்குநர்' குறும்பட போட்டியில் கலந்து கொண்ட தியா நாயகனாக நடித்து இயக்கி இருக்கும் படம் 'கன்னா பின்னா'. முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து இப்படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் இசையை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு வெளியிட்டார். இயக்குநர்கள் பாக்யராஜ், சேரன், தங்கர் பச்சான் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள்.

இவ்விழாவில் பேசிய இயக்குநர் சேரன், "தமிழ்நாட்டில் 18 ஆயிரம் திருட்டு டிவிடி கடைகள் இருக்கின்றன. பர்மா பஜாரில் இருக்கிற அத்தனை கடைகளிலும் திருட்டு டிவிடி விற்கிறார்கள். போலீஸும் அதை தாண்டித்தான் தினமும் போய்வந்து கொண்டிருக்கிறார்கள். நம்மிடம் சட்டங்கள் சரியாக இல்லை. மத்திய மாநில அரசுகள் இதைப்பற்றி கவலைப்படவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.

தமிழ், தமிழன்னு நாம் சொல்றபோது அப்படியே உணர்வுகள் பொங்கி எழுது. ஆனா அந்த தமிழன் தான் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்த்துக்கிட்டிருக்கான். இந்த மாதிரி திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்ன்னு சொல்றாங்க. இலங்கை தமிழர்களுக்காக நாம திரையுலகமே ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்து போராடி இருக்கோம். எங்களுடைய பல விஷயங்களை இழந்துட்டு போய் அவங்களுக்காக போராடி இருக்கோம். ஆனால் அதை சார்ந்த சிலர் தான் இதை பண்றாங்கன்னு கேள்விப்படுகிறபோது, ஏண்டா இவர்களுக்காக இதை பண்ணினோம் என அருவருப்பாக இருக்கிறது” என்று பேசினார் இயக்குநர் சேரன்.

எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து சேரன் விளக்கம்

சேரனின் பேச்சுக்கு இலங்கை தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அதனைத் தொடர்ந்து சேரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இதுவரை திரையுலகில் இருந்து வெளிநாடுகளில் இருந்து திருட்டு DVD வருகிறது. ஆன்லைனில் பதிவேற்றம் செய்கிறார்கள் என்று கதறியபோது இந்த விமர்சகர்கள் ஏன் ஒரு வார்த்தைகூட அவர்களை அவர்களது செயல்களைக் கண்டித்து வெளியிடவில்லை. அப்போ எங்களோட வாழ்க்கை பற்றி அவர்களுக்கு கவலை இல்லையா.

உலகெங்கும் நண்பர்களைக் கொண்டு (அவர்களும் இலங்கைத் தமிழர்கள்தான்) C2H நிறுவனக் கிளைகள் தொடங்க முயன்றபோது அவர்களைத் தடுத்தவர்கள், மிரட்டியவர்கள் இன்றும் திருட்டுத்தனமாக விற்பவர்கள்தான்.

ஒட்டுமொத்த இலங்கைத்தமிழர்களை நான் சொல்லியிருக்கிறேன் என்பது தவறு. நல்ல குணமும் நேர்மையும் கொண்ட ஈழத்தமிழர்களுக்கும் போராளிகளுக்கும் என்னை நன்கு தெரியும். அவர்கள் யாரும் என்னை தவறாக நினைக்கமாட்டார்கள்." என்று தெரிவித்துள்ளார்.