Last Updated : 27 May, 2016 12:13 PM

 

Published : 27 May 2016 12:13 PM
Last Updated : 27 May 2016 12:13 PM

மலையாளக் கரையோரம் - மடோனாவின் இன்னொரு முகம்!

கேரளத்தில் பிறக்கும் பெரியாறு (நதி) 244 கிலோ மீட்டர் பயணிக்கும் மிகப் பெரிய தென்னிந்திய ஆறுகளில் ஒன்று. இதற்காகத் தனது மற்றொரு முகத்தைக் காட்டியிருக்கிறார் ‘பிரேமம்’, ‘காதலும் கடந்துபோகும்’படங்களின் கதாநாயகியான மடோனா செபாஸ்டியன்.

பெரியாற்றைக் காப்போம்

இந்தியா எதிர்கொண்டுவரும் எரியும் பிரச்சினைகளில் முக்கியமானது நதிநீர் மாசு. கேரளத்தின் பெரியாற்றில் எக்கச்சக்கமாக மாசு கலந்துவருகிறது என்று அபாய மணி அடித்து வெகுகாலம் ஆகிவிட்டது. கேரளத்தில் முப்பதுக்கும் அதிகமான ஆறுகள் இருந்தாலும், பெரியாறு பெரியது. அதில் கலக்கும் மாசின் அளவும் தூக்கலாக இருக்கிறது. திடீர் திடீரென்று ஆற்று மீன்கள் அதிக அளவில் செத்து மிதக்கும். பெரியாறு கரையின் ஓரம் இருக்கும் தொழிற்சாலைகளின் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே ஆற்றில் கலப்பதால்தான் இந்த விபரீதம் அடிக்கடி நடந்துவருகிறது என்கிறார்கள்.

பெரியாறு விஷ ஆறாக மாறாமல் தடுக்க ‘சேவ் பெரியாறு’ என்ற அமைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் சமீபத்தில் கொச்சியில் நடத்தியது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த ஆர்வலர்களுக்கு ஒரே ஆச்சரியம்! தொடக்க நிகழ்ச்சியில் மெல்லிசை பாட வந்தது வேறு யாருமல்ல... மடோனா செபாஸ்டியன்! காதுகளில் தேன் பாயச் செய்யும் குரலுக்குச் சொந்தக்காரர். நிகழ்ச்சியில் ரசிகர்கள் கூக்குரல் எழுப்பாமல், விசில் அடிக்காமல் மடோனா பாடிய விழிப்புணர்வுப் பாடலை ரசித்து மடோனாவுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தனர்.

அழகும் நடிப்பும், ‘பாவம்’ குறையாமல் பாடும் திறமையும் அதற்கேற்ற குயில் குரலும் ஒன்றாகச் சங்கமிப்பது மிகவும் அபூர்வம். அது மடோனாவிடம் தேவையான அளவு இருக்கிறது என்று அவரது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் புகழ்ந்து தள்ளுகிறார்கள் நெட்டிசன்கள்.

சமூகத் தாக்கம், சமூகப் பிரக்ஞை கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் துணிச்சலும் பங்களிப்பு செய்யத் துடிக்கும் பன்முகத் திறமையும் கொண்ட நவயுக கேரளப் பெண்கள் கூட்டத்தில் மடோனா சேர்ந்திருப்பது அவரது ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.

அவரைப் பொதுநிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்கும்படி வற்புறுத்துகிறார்கள். முக்கியமாக, திரையுலகில் அதிகம் பாடும்படி அவருக்குக் கோரிக்கை வைக்கிறார்கள் அவரது ‘பிரேமம்’ ரசிகர்கள். அவர் சினிமாவுக்கு நடிக்க வரும் முன் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாடகியாகவும் தொகுப்பாளினியாகவும் வலம்வந்தவர். நதிமீட்பு நிகழ்ச்சியின் முடிவில் நமக்காகக் கொஞ்சம் நேரம் ஒதுக்கி ஒரு தோழியைப்போல இனிமையாகப் பேசினார்.

பாட்டு எனக்குப் புதிதல்ல!

புகழ்பெற்ற பிறகு காக்கை குரல் கொண்ட கதாநாயகி என்றாலும் அவரைக் கத்த வைத்து சாதனை படைக்கும் திரையுலகில் தனது பாடகி முகத்தைத் தான் வலியத் திணிக்கவில்லை என்கிறார். திரைக்கு வரும் முன்பே தனது பாடகி முகத்தைத் தொலைக்காட்சி வழியே பிரபலப்படுத்திய பெருமை மலையாள இசையமைப்பாளர் ராபி ஆப்ரஹாமையே சேரும் என்றவர்,

“‘யூ டூ புரூட்டஸ்’ படத்தில் என்னைப் பாட வைத்துப் பாடகியாகவும் என் கணக்கைத் தொடங்கி வைத்த ராபிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” என்கிறார். இந்தப் படத்தில் மடோனா பாடிய ‘ராவுக்கள்ளி’ என்ற பாடல் கேரள ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். ராபியுடன் இணைந்து ‘எவர் ஆப்டர்’ என்ற இசைக் குழுவை நடத்திக்கொண்டிருக்கிறார்.

“ஒன்பது வயதிலிருந்து பாடிவருகிறேன். கர்னாடிக், வெஸ்டர்ன் இரண்டையும் கற்றுக்கொண்டிருக்கிறேன். தமிழ்,தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்துவந்தாலும் இப்போதைக்கு அழுத்தமான கதைகளைக் கொண்ட தரமான படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்திருக்கிறேன். எனக்கு நடிப்பைவிடப் பாடுவதுதான் அதிகம் பிடிக்கும். சிறு வயதிலிருந்தே நல்ல பாடகியாக வர வேண்டும் என்ற ஆசையுடன் வளர்ந்தவள்.

விரைவில் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்திருக்கிறேன். இதை முன்னமே செய்திருக்க வேண்டும்” என்று சொல்லும் மடோனா, தன்னை சினிமாவுக்கு அடையாளம் காட்டிய தொலைக்காட்சி உலகுக்கு நன்றியை மறக்காமல் “டிவி ஷோக்களில் பாடிவருகிறேன்” என்கிறார். இவரைப் பற்றிய சமீபத்திய பரபரப்பு, ‘மடோனா ஒரு ஆங்கிலப் படத்தில் நடித்திருக்கிறார்’ என்ற செய்தி. ஆனால், “மடோனா ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் என்று தவறாக வந்துவிட்டது.

நான் நடித்தது ஒரு இந்திய-ஆங்கிலத் தயாரிப்பு. திரைவிழாக்களில் கலக்கப்போகும் அந்தப் படம் தமிழ்நாட்டிலும் விரைவில் வெளியாகவிருக்கிறது. படம் பற்றிய தகவல்களை நான் அறிவிப்பது சரியாக இருக்காது” என்று அடக்கம் காட்டுகிறார்.

எனக்கு நடிக்க வராது!

‘பிரேமம்' படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது, “எனக்குப் பாட வரும். ஆனால் நடிக்க வராதே ...” என்று மடோனா சொல்ல, “எனக்கு நடிக்கத் தெரிந்த பெண் வேண்டாம்” என்று அந்தப் படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் ஒப்பந்தம் செய்தாராம். “அந்தச் சம்பவத்தை இப்போது நினைத்தாலும் சிரிப்பில் வெடிப்பேன்” என்று சொல்லும் மடோனா தற்போது அந்தப் படத்தின் தெலுங்கு மறு ஆக்கம் மூலம் அங்கே கால் பதிக்கிறார்.

“சில படங்களில் மேக்கப் தூக்கலாக இருக்கிறது” என்று ரசிகர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள். எனக்கு மேக்கப் இல்லாமல் அல்லது பட்டும் படாமல் மேக்கப் போடவே விருப்பம். ‘பிரேமம்’படத்தில் நான் மேக்கப் போடவே இல்லை” என்று வார்த்தைகளில் ஒப்பனை இல்லாமல் பேசி விடைபெற்றார் மடோனா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x