Last Updated : 29 Aug, 2014 12:04 PM

 

Published : 29 Aug 2014 12:04 PM
Last Updated : 29 Aug 2014 12:04 PM

மடல்: வைகைப் புயல் மறுபடி வீசுமா?

அன்புள்ள வடிவேலுவுக்கு...

‘வந்துட்டாரய்யா வந்துட்டாரு' என நீங்கள் யாரையோ பார்த்துப் பேசிய வசனத்தை நாங்கள் உங்களைப் பார்த்து எப்போது பேசுவது? அதற்கான நாளைக் குறிக்கச் சொல்லி வற்புறுத்தும் கடிதமே இது.

வாஞ்சையும் கேலியும் கலந்துகட்டும் மதுரை வட்டாரத் தமிழைத் திரைக்குள் ஆறாகப் பாய்ச்சி நீங்கள் நடத்திய காமெடி ரகளை அத்தனை சீக்கிரம் மறக்கக்கூடியதா? திரையில் நீங்கள் இப்போது தெரியாவிட்டாலும், தங்களின் நகைச்சுவை நாற்காலி காலியாகிக் கிடக்கும் கவலையைத் சின்னத் திரைகள்தான் தீர்த்துவருகின்றன.

வெறுமனே கதாநாயகனின் நண்பனாக உலவிவிட்டுப் போகாமல் படத்துக்குப் படம் பல விதமான மனிதர்களின் பாத்திரமாக மாறி, அவர்களின் வாழ்வியலையும் பேச்சு வழக்கையும் நீங்கள் உணர்த்திய அளவுக்கு வேறு யார் செய்கிறார்கள்? போலீஸ் கான்ஸ்டபிளாக, சாணை பிடிப்பவராக, வீட்டு வேலைக்காரராக, பெயிண்டராக, பூசாரியாக, முடி வெட்டுபவராக, வேலை வெட்டி இல்லாமல் திரிபவராக எத்தனை எத்தனை பாத்திரங்கள்...

அத்தனையிலும் சம்பந்தப்பட்ட மனிதர்களாகவே மாறி அவர்களின் பேச்சு வழக்கை மட்டும் அல்லாது உடல் மொழியையும் பிரதிபலித்த கலைஞன் அல்லவா நீங்கள். வெறும் காமெடியாக மட்டும் அல்லாமல் போகிற போக்கில் சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளைப் பரிகசித்து விமர்சித்த உங்கள் பொறுப்புணர்வு நுட்பமான ரசிகர்களால் நன்கு உணரப்பட்ட ஒன்று.

‘தேவர் மகன்' படத்தில் உங்களின் நடிப்பைப் பார்த்து வியந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், “இந்தப் பயலுக்குப் பிரமாதமான எதிர்காலம் இருக்குடா... நல்லா வருவாண்டா இவன்!” என வாஞ்சையோடு வாழ்த்தியது நிச்சயம் உங்களின் நினைவில் இருக்கும்.

‘சந்திரமுகி' கதையை இயக்குநர் பி. வாசு ரஜினிகாந்திடம் சொன்னபோது, “முதலில் வடிவேலுவிடம் கால்ஷீட் வாங்கிவிட்டு வாருங்கள்'' என ரஜினி சொன்னதைத் தமிழ்த் திரையுலகமே நன்கறியும்.

ஜாம்பவான்களாலேயே பாராட்டப்பட்ட உங்களின் திறமை இன்று ஒரு அறைக்குள் அடைபட்டுக் கிடப்பதை அறிந்து துயரம் கொள்ளும் ரசிகர்களில் நானும் ஒருவன். சமீபகாலமாக நீங்கள் படங்களில் நடிக்காதது தனிப்பட்ட உங்களுக்கான இழப்பு மட்டுமல்ல. தமிழ்த் திரையுலகத்துக்கான - நகைச்சுவை ஆர்வலர்களுக்கான - தமிழ்க் குடும்பங்களுக்கான மாபெரும் இழப்பு.

கடந்த வருடம் ஒரு நில விவகாரத்தில் உங்கள் பெயர் பெரிதாக அடிபட்டபோது, வடிவேலு தலைமறைவு எனச் சில இணையதளங்களில் செய்தி வெளியானது. அதற்கு நீங்கள் கொடுத்த விளக்கம் உங்கள் நினைவில் இருக்கிறதா? “இன்னும் எத்தனை காலம் ஆனாலும் என்னோட தலை மறையவே மறையாது. நான் மறைஞ்சாலும் பெரிய திரையிலும் சின்ன திரையிலும் என் முகம் தெரிஞ்சுகிட்டே இருக்கும்” எனப் புன்னகையோடு சொன்னீர்கள்.

அந்த வார்த்தைகள் சத்தியமானவைதான். அதற்காக இன்னும் எத்தனை காலத்துக்கு விலகியே இருக்கப் போகிறீர்கள்?

சறுக்கல்களும் சங்கடங்களும் திரைக் கலைஞர்களுக்குப் புதிதல்ல. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சந்திக்காத கவலைகளா, கஷ்டங்களா? கொலை வழக்கில் சிக்கி ஜெயில் தண்டனை அனுபவித்துவிட்டு வந்த பிறகும் தனது நகைச்சுவையால் சாகும் காலம் வரை ரசிகர்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்தவர் கலைவாணர்.

இடையில் திரையில் அவ்வப்போது நீங்கள் தலைகாட்டினாலும் அவை உங்கள் தனி முத்திரையுடன் இல்லை. இனி கதாநாயகனாகவே நடிப்பேன் எனக் கறாராக இருப்பது உங்களைப் போன்ற தேர்ந்த நகைச்சுவைக் கலைஞர்களுக்கு உகந்ததல்ல.

மனம் விட்டுச் சிரிக்க வைக்கும் மதுரை மைந்தனே... நகைச்சுவைப் புயலே... மீண்டும் உங்கள் நகைச்சுவைப் பயணத்தைத் தொடங்குங்கள்.‘மாப்பு, வைச்சுட்டான்யா ஆப்பு', ‘வேணாம், அழுதுடுவேன்', ‘அது நாற வாயி, இது வேற வாயி' என ரைமிங்கும் டைமிங்குமாய் நீங்கள் அடித்து நொறுக்கும் வசனங்களைக் கேட்டு மூன்றாண்டுகள் ஆச்சு.

உங்கள் நகைச்சுவைக்கு ரசிகனாக இருந்து மட்டும் இதனைக் கேட்கவில்லை. அன்றாட வாழ்வின் அவஸ்தைகளில் நெறிபடும் ஒருவனாக இருந்து கேட்கிறேன். விலைவாசி தொடங்கி காதல், கத்தரிக்காய், ஃபேஸ்புக் டார்ச்சர், கடன், வட்டி எனக் கழுத்தை நெறிக்கும் கவலைகள் நாளுக்கு நாள் அதிகமாகிவரும் நிலையில், அனைத்தையும் மறந்து சிரிக்க அவசியமாய்ப்படுகிறது உங்கள் நகைச்சுவை.

சீக்கிரம் வாங்க. சிரிக்க வைக்க வாங்க..!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x