Published : 09 Oct 2016 09:34 AM
Last Updated : 09 Oct 2016 09:34 AM

திரை விமர்சனம்: ரெமோ

ஒரு இளைஞன், ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலிக்கவைக்கும் அதே கதைதான். நாயகனின் பெண் வேடமும் காதலுக்கு உதவுகிறது என்பது ‘ரெமோ’ காட்டும் வித்தியாசம்.

நாயகன் சிவா (சிவகார்த்திகேயன்), பெரிய நடிகனாகும் கனவுகளுடன் இருக்கும் வெட்டி ஆபீஸர். காவ்யா (கீர்த்தி சுரேஷ்) தனியார் மருத்துவமனையில் டாக்டர். சிவாவுக்கு கீர்த்தியைப் பார்த்ததும் (வழக்கம்போல) காதல் பற்றிக்கொள்கிறது. ஆனால், அவருக்கு நிச்சயம் ஆகிவிட்டது தெரிந்ததும் நொந்துபோகிறார்.

நடிப்புக்கான தேர்வுக்காக சிவா பெண் வேடமிட வேண்டியிருக்கிறது. நர்ஸாக வேடமிட்டிருக்கையில் தற்செயலாகச் சந்திக்கும் கீர்த்தியுடன் நட்பு கிடைக்கிறது. அந்த நட்பைப் பயன்படுத்திக்கொண்டு அவர் மனதில் காதலை வரவழைக்க முயல்கிறார் சிவா. பெண்ணாகவும் ஆணாகவும் மாறி மாறி கீர்த்தியை வட்டமிடும் சிவாவின் காதல் வென்றதா? இந்த இரட்டை வேட நாடகத்தை எப்படி முடிவுக்குக் கொண்டுவருகிறார்?

இன்னொருவருக்கு நிச்சயமான பெண்ணைக் காதலிப்பது, நாயகன் பெண் வேடம் போடுவது ஆகியவை பல படங்களில் பார்த்தவைதான். இருந்தாலும் அதை காதல், நகைச்சுவைக்கான படமாக மாற்றிக்கொள் ளும் இயக்குநர் பாக்யராஜ் கண்ணனின் புத்திசாலித்தனம் பாராட்டுக்குரியது. அதே நேரம், அந்த புத்திசாலித்தனம் திரைக் கதையில் தொடரவில்லை.

காதல் காட்சிகளில் கவனம் செலுத்தாமல் ஆங்காங்கே சிரிக்க வாய்ப்பு தந்திருக்கிறார். ஆனால், காதலின் வலிமையைச் சொல்லத் தவறியிருக்கிறார்.

டாக்டராக இருக்கும் கீர்த்தி, தன்னைக் காதலிப்பவர் பற்றி எதுவும் தெரியாமலேயே பழகுவது எப்படி? நர்ஸ் சொல்லும் எல்லாவற்றையும் அப்படியே பின்பற்றுவாரா? தனியார் மருத்துவமனை டாக்டர் ஏன் தினமும் பேருந்தில் பயணம் செய்கிறார்? நர்ஸ் வேலையே தெரியாமல் தனியார் மருத்துவமனையில் சமாளிக்க முடியுமா? இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன. இதையெல்லாம் மறக்கடிக்கும் மேஜிக்கும் இல்லை. இரட்டை வேட நாடகத்தை முடித்துவைக்க அந்தப் ‘பெரிய மேஜிக்’தான் கைகொடுக்கும் என்பது முதலிலேயே தெரிந்துவிடுகிறது. 5 நிமிடங்களுக்குள் பெண் வேடத்தை மாற்றிக்கொண்டு 3 நாள் சவரம் செய்யப்படாத முகத்துடன் நாயகன் தோன்றுவதெல்லாம் மகா அராஜகம்!

‘‘என்னை மாதிரி சாதாரண பசங்களுக்கெல்லாம் எல்லா வாய்ப்பும் கிடைக்காது. நாங்கதான் ஏற்படுத்திக்கணும்’’ போன்ற வசனங்களை நமது நாயகர்கள் இன்னும் எத்தனை படங்களில்தான் பேசுவார்கள்?

காமெடி கலந்த காதல் படங்களில் நடித்த சிவகார்த்திகேயன், இதில் காதல் கலந்த காமெடி படத்தில் நடித்திருக்கிறார். காதலர், நர்ஸ் என இருவிதத் தோற்றங்களில் வித்தியாசம் காட்டுகிறார். பெண் வேட நடிப்பில் முத்திரை பதிக்கிறார். காதலன் பாத்திரத்தில் சறுக்குகிறார். கீர்த்தியிடம் காதலைச் சொல்லும்போது உதடுகள் மட்டுமே காதலைச் சொல்கின்றன. நகைச்சுவை, மிமிக்ரி, நடனம் ஆகியவற்றைத் தாண்டி, ஒரு காதல் நாயகனுக்கான பன்முக அம்சங்களை வளர்த்துக்கொள்ள வேண்டாமா?

கீர்த்தி சுரேஷ் தனது திறமையை அழகுறக்காட்டிச் செல்கிறார். முகத்தில் நவரசங்களை யும் காட்டி அழுத்தமான தடம் பதிக்கிறார்.

‘‘மேய்க்கிறது எருமை, அதுல என்ன பெருமை’’ என்பது போன்ற சதீஷின் வசனங்களுக்கு தியேட்டரில் கைதட்டல்கள் விழுகின்றன. வழக்கமான அப்பாவி அம்மாவாக சரண்யா பொன்வண்ணன். முழுக்க முழுக்க ‘சிவ’மயமான படத்தில் ராஜேந்திரன், யோகி பாபு, நரேன், கல்யாணி நட்ராஜன் உள்ளிட்டோர் வந்துபோகின்றனர்.

சென்னை மாநகரத்தின் அழகை ஒளி ஓவியமாகத் தீட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். கச்சிதமான ஃபிரேம்கள் மூலம் காட்சிகளை அழகுணர்ச்சியுடன் நம் கண்களுக்குக் கடத்துகிறார். ‘ரெமோ’, ‘சிரிக்காதே’ போன்ற பாடல்களில் மட்டுமில்லாமல் பின்னணி இசையிலும் கவனிக்க வைக்கிறார் அனிருத். துருத்திக்கொண்டிருக்கும் ‘காவ்யா’ பாடலுக்குக் கத்தரி போட்டிருக்கலாம்.

ரசூல் பூக்குட்டியின் ஒலி வடிவமைப்பு சிவகார்த்திகேயனின் ஆண் - பெண் குரல்களை நேர்த்தியாக வேறுபடுத்திக் காட்டுகிறது.

‘‘பொண்ணுங்களை கன்ட்ரோல் பண்றதுதான் கஷ்டம். கன்ஃபியூஸ் பண்றது ஈஸி’’, ‘‘ஆம்பளைங்க அழக்கூடாது. ஆனா, அவங்களை அழ வைக்கக் கூடாதுன்னு பொண்ணுங்ககிட்ட சொல்லுங்க’’, ‘‘பார்த்தா லூஸு மாதிரி தெரியலை. ஆனா, பேசினா தெரியுது’’ போன்ற வசனங்கள் எதற்கு? கைதட்டல் பெற வேண்டும் என்பதற்காகப் பெண்களைச் சீண்டுவது என்ன நியாயம்?

கதையின் மையமான காதல் வலுவாகக் சொல்லப்படவில்லை. நகைச்சுவையும் போதுமான அளவு இல்லை. சிவகார்த்தி கேயனின் பெண் வேடம் என்பதைத் தவிர படத்தில் எந்தப் புதுமையும் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x