Published : 09 Apr 2017 07:10 AM
Last Updated : 09 Apr 2017 07:10 AM

திரை விமர்சனம்: 8 தோட்டாக்கள்

துப்பாக்கியைப் பறிகொடுக்கும் இளம் போலீஸ் அதிகாரியையும், அந்தத் துப்பாக்கியைக் கொண்டு அசாதாரண சம்பவங்களை அரங்கேற்றும் சாதாரண மனிதனையும் மையமாகக் கொண்ட த்ரில்லர்தான் ‘8 தோட்டாக்கள்’.

புதிதாகப் பொறுப்பேற்கும் சப்-இன்ஸ்பெக்டர் சத்யா (வெற்றி) காவல் துறைக்குப் பொருந்தாத இயல்பு கொண்டவர். பிழைக்கத் தெரியாதவர் எனப் பெயரெடுப்பவர். அவருடைய துப்பாக்கி தொலைந்துபோகிறது. அந்தத் துப்பாக்கி ஒரு கொலைக்கும் கொள்ளைக்கும் காரணமாகிறது. துப்பாக்கியையும் குற்றவாளியையும் தேடும் வேட்டையில் அடுத்தடுத்துப் பல கொலைகள் விழுகின்றன. துப்பாக்கியில் உள்ள எட்டுத் தோட்டாக்கள் யார் யாரை, ஏன் சாய்க்கின்றன? சுடுபவரைக் காவல் துறையால் கண்டு பிடிக்க முடிந்ததா?

இயல்பான பாத்திரங்கள், பெருமளவில் நம்பகத்தன்மை கொண்ட திரைக்கதை, கதாபாத்திரங்களின் பின்னணிகளுக்கும் அவர்களுடைய உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் அணுகுமுறை, விறுவிறுப்பான காட்சிகள் ஆகியவற்றால் புதுமுக இயக்குநர் ஸ்ரீ கணேஷ் கவனம் ஈர்க்கிறார். பாத்திரங்களின் பின்புலங்களை அறிமுகப்படுத்தும் விதமும், புலனாய்வு நகரும் விதமும் பார்வையாளர்களின் கவனத்தைத் திரைக்குள் குவியச் செய்துவிடுகின்றன.

பணமே பிரதானம் எனக் கருதப்படும் சூழலில் பாதிக்கப்படும் சாமானியன் ஒருவன், வெகுண்டு எழுந்து குற்றப் பாதையைத் தேர்ந்தெடுத்தால் நிகழக்கூடிய சாத்தியங்களையும், அதன் விளைவுகளையும் இயன்றவரையில் நம்பகத்தன்மையுடன் தந்திருப்பது பாராட்டுக்குரியது. சினிமா அனுபவத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் சமூக அரசியலை அழுத்தமாகப் பேசிய விதம் நன்று.

முழுமையான திரைக்கதை என்பது கதையில் முக்கியப் பங்கு வகிக்கும் அனைத்துக் கதாபாத்திரங்களுக்குமான முழுமையைத் தர வேண்டும். அதற்கு நம்பத் தகுந்த சம்பவங்களும் திருப்பங்களும் வேண்டும். இந்தப் படத்தில் இவை எல்லாமே வசப்பட்டிருக்கின்றன. எதிர்மறைக் கதாபாத்திரத்தின் மீது பார்வையாளர்கள் இரக்கத்தைப் பொழிவது அத்தனை எளிதாக நடத்துவிடக் கூடியதல்ல. அது இந்தக் கதையில் சாத்தியமாகியிருக்கிறது. கிருஷ்ணமூர்த்தி யின் (எம்.எஸ்.பாஸ்கர்) பாத்திரப் படைப்பும் அதற்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவமும் படத்தைத் தனித்துக் காட்டுகின்றன.

தொடக்கக் காட்சிகள் ஏனோ தானோவென்று நகர்கின்றன. துப்பாக்கி காணாமல்போகும் விதம் நம்பும்படி இல்லை. அதற்குப் பிந்தைய காட்சிகள் பெருமளவில் கச்சிதமாக அமைந்துள்ளன. காதல் காட்சிகள் படத்தோடு ஒட்டவே இல்லை. ரசனையுடன் படமாக்கப்பட்டிருந்தாலும் தேவையற்ற இடத்தில் சொருகப்பட்ட பாடல்கள், நீளமான காட்சிகள் ஆகியவை படத்தின் தாக்கத்தைக் குறைக்கின்றன. தேநீர் குடிக்கும் இடத்தில் பாஸ்கர் பேசும் நீண்ட வசனத்தின் சில பகுதிகளையாவது காட்சி வடிவில் சொல்லியிருக்கலாம். வங்கிக் கொள்ளை காட்சியில் வங்கிக்குள் வந்த பிறகுதான் முகமூடி போட்டுக்கொண்டிருந்திருக்க முடியும். ஆனால், அது குறித்த சிசிடிவி காட்சிகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.

எம்.எஸ்.பாஸ்கரின் திரையுலக வாழ்க்கையில் இது ஒரு மைல் கல். இயல்பு மீறாத நடிப்பாற்றல் மூலம் கதாபாத்திரத்தின் அடர்த்தியைப் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கிறார் பாஸ்கர். அடுக்கடுக்கான சோதனைகளால் புண்பட்டு மனம் வெதும்பும் வேதனையையும் அதன் விளைவான ஆவேசத்தையும் நன்கு வெளிப்படுத்தி யிருக்கிறார்.

மணிகண்டன், லல்லு, ‘மைம்’ கோபி, சார்லஸ் வினோத் ஆகியோர் தங்கள் தேர்வை நியாயப்படுத்தும் வகையில் கச்சிதமாக நடித்துள்ளனர். நாசரின் நடிப்பு படத்துக்குப் பெரிய பலம். விசாரணைகளின்போது அவர் காட்டும் நுட்பமான முக பாவங்களும் அவர் பேசும் விதமும் அபாரம். இளம் காவல்துறை அதிகாரியாக வரும் வெற்றி கனமான பாத்திரத்தை ஏற்று ஓரளவு சமாளித்திருக்கிறார். செய்தி சேனல் நிருபராகச் சிறிய வேடத்தில் அபர்ணா குறைவைக்கவில்லை.

ஜெகதீஸ் ரவிச்சந்திரனின் இயல்பான ஒளிப்பதிவும், நாகூரானின் தொய்வு தராத எடிட்டிங்கும், காட்சிகளோடு உறுத்தாமல் பயணிக்கும் கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசையும் முக்கியப் பங்காற்றியுள்ளன. கேமரா கோணங்களும் நகர்வுகளும் திரைமொழிக்குப் பக்கபலமாக உள்ளன. ஒலி அமைப்பு, கலை இயக்கம், சண்டை, கலை அமைப்பு ஆகியவை படத்தின் யதார்த்தத் தன்மையைக் கூட்டியிருக்கின்றன.

த்ரில்லர் படத்தில் உணர்வுபூர்வமான அனுபவத்தைச் சாத்தியமாக்கியது, நேர்த்தியான திரைமொழி, இயல்பான பாத்திரங்கள், குற்றங்களின் பின்னணி யைச் சொன்ன விதம், தொய்வற்ற கதையோட்டம், எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு ஆகியவற்றால் ‘8 தோட்டாக்கள்’ இலக்கு தவறவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x