Last Updated : 31 Oct, 2014 02:36 PM

 

Published : 31 Oct 2014 02:36 PM
Last Updated : 31 Oct 2014 02:36 PM

திருடாதே!

தமிழ் சினிமாவைப் பற்றி இன்று வெளியாகும் செய்திகளில், படத்தின் தரம், வணிக வெற்றி, திருட்டு டி.வி.டி போன்ற செய்திகளுக்குச் சமமான அளவில் படத்தின் கதை திருடப்பட்டது பற்றிய செய்திகளும் இடம்பெறுகின்றன.

முன்பெல்லாம் பாடலின் மெட்டு, கதைக் கரு போன்றவை எந்தப் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்பதை எளிதில் கண்டுபிடிக்க இயலாது. இப்போது இணையமும், பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களுக்கு நிகரான பங்கு வகிக்கும் சமூக வலைதளங்களும் இந்தத் திருட்டுகளைக் கண்டுபிடிப்பதை எளிதாகவும் விரைவாகவும் ஆக்கிவிட்டன.

பல வங்காள, மராத்திக் கதைகள் நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் தமிழ்ப் படங்களாகியிருக்கின்றன. ஆங்கிலப் படங்களிலிருந்து கதையை எடுப்பது என்பதைப் பலரும் செய்திருக்கிறார்கள். தன் கலை, அரசியல் வாழ்க்கையையே மாற்றியமைத்த படமான ‘நாடோடி மன்னன்’ படத்தின் கதை, அதை எடுப்பதற்கு சுமார் 20 வருடம் முன்னால் தான் கொல்கத்தாவில் பார்த்த கால்மன் நடித்த ‘இஃப் ஐ வேர் கிங்’ படத்தின் கதையிலிருந்து உருவாக்கியதுதான் என்று எம்.ஜி.ஆர். கட்டுரையே எழுதியிருக்கிறார்.

திருட்டுகளின் புதிய முகம்

கடந்த இருபது வருடங்களில்தான் இரண்டு முக்கியமான திருட்டு முறைகள் அதிகரித்திருக்கின்றன. ஒன்று அசல் படத்தின் திரைக்கதை, காட்சியமைப்பு, ஷாட் டிவிஷன், லைட்டிங், அவ்வளவு ஏன் விளம்பர போஸ்டர் டிசைன்வரை எல்லாவற்றையும் காப்பியடிக்கும் போக்கு இளம் தலைமுறையால் அறிமுகமாகியிருக்கிறது.

இரண்டாவது திருட்டு, வாய்ப்புக்காக முயன்றுகொண்டிருப்பவரிடமிருந்து திருடுவதாகும். முதல் பாணி திருட்டுகள், இணையத்தின், சமூக வலைத்தளங்களின் கண்காணிப்பால் உடனுக்குடன் அம்பலமாகிவிடுகின்றன.

இரண்டாவது வகைத் திருட்டுதான் நம் உடனடி அக்கறைக்கும் கவலைக்கும் உரியது. இது நடப்பதற்கான சூழல் தமிழ் சினிமாவில் ஏன் இருக்கிறது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். முழுப் படத்தின் ஸ்கிரிப்ட்டை முன்கூட்டியே எழுதிவைத்திருந்தால் அதை காப்பிரைட் சட்டத்தின் கீழ் பதிவுசெய்துவைக்க முடியும்.

அந்த ஸ்கிரிப்ட்டை ஒரு கார்பரேட் கம்பெனியிடம் கொடுத்தால், அதற்கான ஆதாரத்தை மின்னஞ்சல் வழியாகவே உருவாக்கிக்கொள்ள முடியும். இதெல்லாம் முறையாகச் செய்யாதபோதுதான் முழு ஸ்கிரிப்ட்டைக் கொடுத்ததை நிரூபிக்க முடியாமல் போகிறது.

பல சமயங்களில் கதைத் திருட்டோ சீன் திருட்டோ ஐடியா திருட்டோ நடந்ததா இல்லையா என்பதையே தீர்மானிக்க முடியாத குழப்பமான நிலையே நிலவுகிறது. இதற்குக் காரணம் இந்தப் புகார்கள் உதவி இயக்குநரிடமிருந்தோ, கதை விவாதத்தில் பங்கேற்றவரிடமிருந்தோ திருடப்பட்டதாகச் சொல்லப்படுபவை. இவற்றில் எவ்வளவு உண்மை, எவ்வளவு பொய் என்பதெல்லாம் கண்டறியக் கடினமானவை.

கதைத் திருட்டின் ஊற்றுக்கண்

இப்படிப்பட்ட புகார்கள் இனியும் தொடருமே ஒழிய, குறையும் வாய்ப்பில்லை. அதற்குக் காரணம் தமிழ் திரையுலகில் பின்பற்றப்படும் தவறான அணுகுமுறைகள்தான். இயக்குநர், ஸ்கிரிப்ட் ரைட்டர் என்ற இரு பணிகள் இங்கே துல்லியமாகப் பிரிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்படாமல் இருப்பதே அடிப்படைச் சிக்கலாகும்.

இந்த அவலத்தின் ஊற்றுக் கண் டிஸ்கஷன் என்ற வடிவம். தமிழ் சினிமாவில் மட்டுமே இருக்கும் இம்முறை இந்தி சினிமா உலகில் இல்லை. இயக்குநரின் ஒரு வரிக் கதையை டிஸ்கஷனில் விவாதித்து சீன் சொல்லி அதை வளர்த்துச் செழுமைப்படுத்த டிஸ்கஷன் ஸ்பெஷலிஸ்ட்டுகள் பலர் அழைக்கப்படுகிறார்கள்.

இவர்களில் பல ரகத்தினர் உள்ளனர். சுவையாகப் பேசவும், பல மின்னல் கீற்று போன்ற பளிச் ஐடியாக்களை சொல்லிவிட்டுப் போகவும் மட்டுமே திறமையுடையவர்கள் ஒரு ரகம். ஒரு நாள் தானும் இயக்குநராவோம் என்ற கனவுடன் நிறைய சீன் ஐடியாக்களை மட்டும் மனதில் உருவாக்கிக்கொண்டே இருப்போர் இன்னொரு ரகம்.

இவர்களில் சொந்தமான கற்பனைகளைச் செய்பவர்கள் சிலர். படித்த நாவல், சிறுகதை, பார்த்த உலக சினிமா இதிலிருந்தெல்லாம் ரெஃபரென்ஸ் எடுத்து அதற்குக் கண் காது மூக்கு வைத்து சீன் பண்ணுகிறவர்கள் சிலர்.

இப்படியானவர்களெல்லாம் இயக்குநர் நடத்தும் டிஸ்கஷனில் விதவிதமான ஐடியாக்களை உதிர்க்கிறார்கள். அவற்றைத் தனக்குத் தெரிந்த அளவில் தொகுத்து ஒழுங்குபடுத்தி திரைக்கதை வசனம் எழுதிக்கொள்வதே இயக்குநரின் ஸ்கிரிப்ட் ரைட்டிங் பணியென்றாகிவிடுகிறது.

முழுப் படம் வெளிவரும்போது அதில் எந்த டிஸ்கஷனில் யார் உதிர்த்த எந்த ஐடியா சிறப்பாக வேலை செய்திருக்கிறது என்பதைப் பொறுத்து, அவருடைய சந்தை வேல்யூவும் கூடலாம். அல்லது அவர் தன் கதைதான் திருடப்பட்டுவிட்டது என்று கூட நிஜமாகவே நம்பலாம். படத்தின் கிரெடிட் கார்டில் இந்த டிஸ்கஷன் டீமின் பலரின் பெயர்கள் எந்தப் பிரிவிலும் வராது. வரும் சில பெயர்கள் உதவி இயக்குநர் பட்டியலில் இருக்கலாம்.

தேவை அங்கீகாரம்

ஸ்கிரிப்ட்டைத் தானே எழுதும் திறமையுடைய இயக்குநர்கள் எந்த மொழியிலும், டிஸ்கஷனில் உட்கார்வதே இல்லை. முழு ஸ்க்ரிப்டும் முடிந்த பிறகு அதைப் படத்தின் முக்கியமான டெக்னீஷியன்களுடன் உட்கார்ந்து விவாதிக்கும் டிஸ்கஷன் முறையே இந்தி சினிமாவில் பின்பற்றப்படுகிறது. டிஸ்கஷனில் இருந்துதான் கதையும் திரைக்கதையும் உருவாக வேண்டும் என்ற நிலை தமிழில் மட்டுமே இருக்கிறது.

இந்த முறையைக் கைவிட முடியாதென்றால், குறைந்தபட்சம் இந்த டிஸ்கஷன் டீமுக்கு ஒரு முறையான அங்கீகாரம் தேவை. திரைக்கதை இலாகா என்று பட்டியலிடலாம். அதற்குரிய பணத்தை முறையாகக் கொடுக்கலாம். எழுபதுகள்வரையில் இருந்த ஸ்கிரிப்ட் ரைட்டர் என்ற பிரிவை மறுபடியும் புதுப்பித்து மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஜெமினி, தேவர் பிலிம்ஸ், மாடர்ன் தியேட்டர்ஸ், எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் போன்றவை தமக்கெனக் கதை இலாகாவை வைத்திருந்தன. அவற்றில் திரைக்கதை அறிவுடையவர்கள் இருந்தார்கள்.

இன்றும் நம்மிடையே வாழும் ஆரூர் தாஸ் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பின்னர் இயக்குநரான தர், பாலசந்தர், வி.சி.குகநாதன் போன்றோரும், இயக்குநராகாமல் ரைட்டராகவே தொடர்ந்து பணியாற்றிய ஜாவர் சீதாராமன், பாலமுருகன், தூயவன், ஏ.எல்.நாராயணன் என்று இன்னும் பலரும் உண்டு.

சிறுகதை, நாவல் எழுதிப் புகழ்பெற்ற எழுத்தாளரை ஸ்கிரிப்ட் ரைட்டராக்கிவிட்டால் இந்தப் பிரச்சினை தீரும் என்பது தவறான கருத்து. வணிக சினிமாவின் தேவைக்கேற்பத் தங்களை நல்ல ஸ்க்ரிப்ட் ரைட்டர்களாகச் செதுக்கிக்கொண்ட விதிவிலக்குகள் பாலகுமாரனும் சுஜாதாவும் மட்டுமே.

அதே சமயம் மேலே சொன்ன வெற்றிகரமான ஸ்க்ரிப்ட் ரைட்டர்கள் யாரும் சிறுகதையோ நாவலோ எழுதி வெற்றி பெற்றவர்களே அல்ல. ஆனால் திரைக்கதை என்ற அமைப்புக்குள் படத்தின் இயக்குநர் தேவைக்கேற்ப எழுதும் திறமையுடையவர்கள் அவர்கள். இன்று தமிழ் சினிமாவுக்கு அப்படிப்பட்ட ஸ்கிரிப்ட் ரைட்டர்கள்தான் மிக அவசரமாகத் தேவைப்படுகிறார்கள்.

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற சினிமா பாடல், இன்று அதே துறைக்கு மிகவும் பொருத்தமாய் இருக்கிறது. தன் வழிமுறைகளை தன் அணுகுமுறைகளை தானே திருத்திக்கொள்ள வேண்டிய பெரும் கட்டாயத்தில் தமிழ் சினிமாஇருக்கிறது. அதில் ஒன்றுதான் ஸ்க்ரிப்ட் திருட்டை ஒழிப்பதற்கான வழிமுறை.

தொடர்புக்கு:
gnanisankaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x