Last Updated : 27 Feb, 2015 10:52 AM

 

Published : 27 Feb 2015 10:52 AM
Last Updated : 27 Feb 2015 10:52 AM

செங்கல்பட்டில் ஒரு ராஜ்கிரண்

எட்டு வருடங்களுக்கு முன்னர், தெரிந்த இசையமைப்பாளர் ஒருவர் கூப்பிட்டார். நண்பர் ஒருவர் படம் செய்யவிருப்பதாகவும், அப்படத்துக்கு நான் வசனம் எழுத வேண்டுமென, இயக்குநர் அழைப்பதாகச் சொல்ல, பரபரப்பாகக் கிளம்பினேன்.

எழுத்தாளர்களை மதிக்கும் இயக்குநர்களை எனக்குப் பிடிக்கும். கதை, திரைக்கதை, வசனம், எல்லாவற்றையும் ஒருவரே பார்ப்பது இம்சையான வேலை.

இயக்குநரைச் சந்தித்தேன். மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார். “பக்கா பொழுதுபோக்குப் படம். கிராமத்துக் கதை. ராஜ்கிரணுக்கு முக்கிய வேடம். வசனம் பேசுறதாவே தெரியக் கூடாது. ஆனா ஷார்ப்பா வசனமிருக்கணும். பண்ண முடியுமா?” என்று கேட்டார். என் கண்களில் ஆர்வம் பொங்கியது. சரியான வாய்ப்பு. சரியாக இவர் வேலை வாங்குவார் என்று நினைத்துக் கொண்டேன்.

“சரி கதை சொல்லுங்க சார்..” என்றதும் “இன்னைக்கு வேணாம். ரெண்டு நாள் கழித்துச் செங்கல்பட்டு வந்திருங்க. அங்கே ரூம் போட்டுக் கொடுத்திடுறேன். அங்க வச்சிக் கதை சொல்லிடுறேன். நீங்க இருந்து எழுதிக் கொடுத்திருங்க என்றார். திநகரில், சாலிகிராமத்தில், கொடைக்கானலில், ரூம் போட்டுப் பார்த்திருக்கிறேன்.

செங்கல்பட்டில் என்றதும் யோசனையாய் இருந்தது. எங்க உக்கார்ந்து எழுதினா என்ன.. எழுத்துத்தானே என்று மனதைச் சரி செய்துகொண்டு “வந்திடுறேன் சார்.”.

செங்கல்பட்டு ரயில்வே ஸ்டேஷனுக்குப் போன பிறகு போன் செய்தபோது இயக்குநரே வந்து அழைத்துப் போனார். ஒரு கல்யாண மண்டபத்துக்குப் பக்கத்தில் இருந்த ஒரு சின்ன விடுதியில் அறை எடுத்திருந்தார். என்னுடன் அச்சு அசலாக மதுரை வட்டார வழக்கில் மட்டுமே பேசும் உதவி ஒளிப்பதிவாளர் ஒருவரை நேட்டிவிட்டிக்காக அழைத்துச் சென்றிருந்தேன். சுட்டுப் போட்டாலும் அவருக்குச் சென்னைத் தமிழ் வராது. பக்கத்திலேயே ஆந்திரா மெஸ்.

“உங்களுக்கு என்ன வேணுமோ சாப்பிட்டுக்கங்க. நான் கிளம்பட்டுமா?’ என்றார். “சார் .. நீங்க கதை சொல்லுறேன்னு சொன்னீங்களே?” என்றதும் “அட ஆமாமில்லை. இருங்க ஹீரோ சார் வர்றாரான்னு கேட்டுடறேன்?” என்று கைபேசியை எடுத்துப் பேசி, “வர்றாராம்” என்றார்.

வந்தவருக்குச் சுமார் ஐம்பது வயதிருக்கும். நல்ல கட்டுமஸ்தாய் இருந்தார். தலைமுடியும் மீசையும் கருகருவென இருக்க,ராஜ்கிரணின் பாதிப்பை மூளைக்கு ஏற்றிக்கொண்டு, அவரைப் போலவே மூக்கை விடைத்துக் கொண்டு, வேட்டியையும் முட்டிக்குமேலே மடித்துக் கட்டுக்கொண்டு வந்து என் கைகளைப் பிடித்து வலிக்கிற மாதிரி குலுக்கிவிட்டுக் கால் மேல் கால் போட்டு அமர்ந்தார்.

என் கண்களில் இருந்த கேள்வியைப் படித்த இயக்குநர் சட்டென ‘இவர்தான் ஹீரோ, கம் தயாரிப்பாளர்’ என்றார். எனக்கோ பரபரவெனக் கிளம்பிப் போன ஆர்வம் புஸ்சென இறங்கியது. ராஜ்கிரண்னாரே… என்று மனதில் ஓட, அதையும் படித்த இயக்குநர் “ராஜ்கிரணுக்கு இவர்தான் தம்பி” என்றார். முழுசா கதைய சொல்லிருங்க கேட்டுருவோம் என்றேன் பதற்றத்துடன்.

தயாரிப்பாளர் கம் நடிகர், இயக்குநர், என் உதவியாளர் சகிதமாய்க் கதை கேட்க ஆரம்பித்தேன். கிராமத்துக் கதை என்கிற புராதன விஷயங்களான பஞ்சாயத்து, ஊர்த் திருவிழா, சாங்கியங்கள், வேல் கம்பு, அரிவாள் என டெம்ப்ளேட்டாய் அத்தனையும் இருந்தன, கதையைத் தவிர.

பரபர கிளைமேக்ஸ் என்று சொல்லி, எதையுமே சொல்லாமல் நான்கைந்து காட்சிகள் சொல்லாமலேயே தாண்டினார். கடைசியில் ஹீரோ ஜெயிப்பதாகச் சொல்லி முடித்துவிட்டு, என் முகத்தைப் பார்த்தார். நிச்சயம் சூப்பர் என்று சொல்ல வேண்டுமென்ற கட்டளை அந்தப் பார்வையில் இருந்தது. சிறிது நேரம் அப்பார்வையை ஊர்ந்து உணர்ந்து, தயாரிப்பாளர்/ஹீரோ முகத்தைப் பார்த்தபடி “சூப்பர் சார்” என்றேன்.

தயாரிப்பாளர்/ ஹீரோ முகத்தில் சிரிப்புடன் கிளம்பினார். அதுவரை கதையைப் பற்றிய கருத்தை இயக்குநர் பேசவே விடவில்லை. எனக்கு அவரின் மைண்ட் வாய்ஸ் புரிந்தது என்பதால் அமைதியாய் இருந்தேன். ஹீரோவை அனுப்பிவிட்டு வந்த இயக்குநரைப் பார்த்த மாத்திரத்தில் “சார்.. ஒரு சின்ன சந்தேகம். இதுக்கு ஒருவரிக் கதை செய்திருக்கீங்களா? ஏதாவது கரெக்‌ஷன் சொல்லலாமா?” என்றதும் அவரின் முகத்தில் ஓர் அதிர்ச்சியான கேள்வி ஓடியது

“ஏன்?”

“இல்லை, கதை யார் கண்ணோட்டத்துல நகருதுண்ணே தெரியலை. ராஜ்கிரண் இதுல என்ன பண்ணுறாரு? இதுல யாரு தாதா ஆகுறாங்க? க்ளைமேக்ஸுல வேற நாலைஞ்சு சீன்கள் விட்டுட்டு சொல்லிட்டீங்க. வேற ஒண்ணும் புரியலை. அடிப்படையாவே திரைக்கதை கொஞ்சம் (?) குழப்பமா இருக்கு. அதான் கேட்டேன்” என்றேன்.

“சார்.. என் கதைக்கு இதுவரைக்கும் நாலு பெரிய எழுத்தாளர்களைக் கூட்டி வந்திருக்கேன். கிட்டத்தட்ட ஒண்ணரை வருஷமா இந்தக் கதையோட வாழ்ந்திட்டிருக்கேன். இதுல யார் மாற்றம் சொன்னாலும் அவங்க என் படத்துல வேலை செய்ய அனுமதிக்க மாட்டேன். மாத்தணும்னு சொன்னாங்க. அதனாலதான் நீங்க எழுத வந்திருக்கீங்க” என்றார்.

நான் பதில் ஏதும் பேசவில்லை. என் உதவிக்காக வந்திருந்த நண்பரின் முகத்தைப் பார்த்தேன். ஆஹா... இனி என்ன பண்ணப் போறேன் என்கிற பீதி அவர் முகத்தில் தெரிய, அவரது கண்களின் ஓரம் நீர் துளிர்த்ததைப் பார்த்ததும் சுதாரித்துக்கொண்டு “எனக்கொண்ணும் பிரச்சினையில்லை சார். எழுதிருவோம்” என்றேன்.

சினிமாவை எப்படி அணுகக் கூடாது என்பதை இவரைப் போன்றவர்கள்தான் எந்தக் கல்விக் கட்டணமும் இல்லாமல் நமக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள்.

சென்னைக்கு அருகில் செங்கல்பட்டில் எட்டு வருடங்களுக்கு முன் இப்படி ராஜ்கிரண் மாதிரி ஒருவரைப் பார்த்தேன் என்றால், தற்போது திருச்சி, மதுரை, நெல்லை, தேனி, கோவை என்று ஊருக்கு ஊர் உள்ளூர் சினிமாக்களை உருவாக்க பல கில்லிகள் கிளம்பியிருக்கிறார்கள். அவர்களது ஆர்வம் இயக்குவது மட்டுல்ல; அதையும் தாண்டி அபத்தமானது... அது அடுத்த வாரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x