Last Updated : 22 May, 2015 12:33 PM

 

Published : 22 May 2015 12:33 PM
Last Updated : 22 May 2015 12:33 PM

சினிமாவில் போட்டி கூடாது!- நடிகை கோமல் சர்மா

ஸ்குவாஷ் விளையாட்டுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, இரண்டாவது இன்னிங்ஸில் நடிகையாகக் களமிறங்கிய கோமல் சர்மா நீண்ட நாளாக சைலண்ட் மோடில் இருந்தார். ஷாஜி கைலாஷ் இயக்கும் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தின் மூலம் மீண்டும் பிஸியாகியிருக்கும் கோமல் சர்மா, படப்பிடிப்புக்கு மத்தியில் நம்மிடம் பேசினார்.

இந்தப் படத்தில் உங்களுக்கு என்ன கதாபாத்திரம்?

ரயிலில் நடக்கும் ஒரு த்ரில்லர் படம் இது. இதில் கிரைம் இன்வெஷ்டிகேஷன் செய்யும் நிருபராக நடிக்கிறேன். படத்தில் எனக்கு ஜோடி யாரும் கிடையாது. ஒவ்வொரு கேரக்டரும் ரயில்ல ட்ராவல் பண்ற மாதிரி இயக்குநர் திரைக்கதை அமைச்சிருக்கார். இந்தப் படத்துக்காக நிறைய உழைச்சுருக்கேன்.

ரொம்ப நாளாக உங்களைத் திரையில் பார்க்க முடியலையே, ஏன்?

2011-ம் ஆண்டுல நடிக்க வந்தேன். எஸ்.ஏ.சி. டைரக்‌ஷன்ல வெளியான ‘சட்டப்படி குற்றம்’தான் என்னோட முதல் படம். இந்தப் படத்துக்கு அப்புறம் ’ஊதாரி படத்துல நடிச்சேன். தெலுங்குப் படங்களில் வரிசையாக வாய்ப்புக் கிடைத்ததால் அங்கேயும் கலக்கலாம் என்று ஓய்வில்லாமல் அங்கே நடிச்சேன். அந்த நேரத்துல எனக்கு பாலிவுட்ல வாய்ப்பு வந்துச்சி. அதனாலேயே அங்கே இருக்க வேண்டிய நிலை இருந்துச்சு.

ஒரு வருஷத்துக்கும் மேலே இந்திப் படத்துல் கமிட் ஆகிட்டு காத்திருந்தேன். ஆனால், படத்தை தொடங்கவே இல்லை. இதுக்கப்புறம் அங்க இருக்க இஷ்டமில்லாமல் சென்னைக்குத் திரும்பிட்டேன். அதன் பிறகு அமைதிப்படை 2ல நடிச்சேன். அதனால சின்ன இடைவெளி ஏற்பட்டிடுச்சி. இனி தொடர்ந்து தமிழில் நிறையப் படங்களில் நடிப்பேன்.

இந்திப் படத்துல ஏன் நடிக்க முடியாமல் போனது?

தயாரிப்பாளர் திடீரென்று படத்தை நிறுத்திவிட்டார். அந்தப் படத்துல எனக்கு முக்கியமான கதாபாத்திரம். ஆனால், அந்தப் படத்தை நிறுத்த என்ன காரணம்னு எனக்குச் சொல்லவே இல்லை. தயாரிப்பாளர், டைரக்டர் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. ஆனால், அவுங்க ரெண்டு பேரும் பாலிவுட்டில் மிகப் பெரிய படைப்பாளிங்க.

இனி, தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தப் போறீங்களா?

இனி தமிழ் படங்களில் என்னை நிறைய எதிர்பார்க்கலாம். இந்த வருஷம் ரொம்ப நல்லா இருக்கும்ணு நினைக்கிறேன். நிறைய படங்களில் பேசிக்கிட்டு இருக்கேன். ஆனா, சில சமயம் கதை நல்லா இருந்தாலும் திரைக்கதை பிடிக்காமல் போயிடுது. அதனால நானே சில படங்களை தவிர்த்திட்டேன். ஆனாலும், இனி தொடர்ந்து என்னை நீங்க பார்க்கலாம்.

முன்னனி நாயகர்களுடன் நடிப்பதற்காகப் படங்களைத் தவிர்க்கிறீர்களா?

அப்படியெல்லாம் இல்லை. எல்லாருக்குமே பெரிய ஹீரோக்களோடு சேர்ந்து நடிக்க ஆசைப்படுவாங்க. எனக்கும் நிறைய ஆசை இருக்கு. நல்ல கேரக்டர்ஸ், பெரிய ஹீரோக்கள், இயக்குநர்கள் படத்துலயும் நடிச்சாத்தான் இந்தத் துறைக்கு வந்ததுக்கு ஒரு அர்த்தம் இருக்கும். ஆனால், எதிர்பார்க்காத படங்களையும் நடிச்சு வெற்றி கொடுக்கணும். இதுதானே இன்னைக்கு டிரெண்ட்.

நீங்க ஒரு ஸ்குவாஷ் வீராங்கனை. உங்களோட சேர்ந்து விளையாடிய தீபிகா பள்ளிக்கல், ஜோஸ்னா சின்னப்பா தேசிய அளவுல பாப்புலராயிட்டாங்க. விளையாட்டை விட்டுட்டு வந்தது தப்புன்னு இப்போ நினைக்கிறீங்களா?

தீபிகா, ஜோஸ்னா பத்தி வர்ற செய்திகளைப் பார்த்துட்டு ரொம்ப சந்தோஷமா இருக்கும். என்னைப் பொறுத்தவரை நான் தப்பு பண்ணிட்டேன்னு நினைச்சதேயில்லை. நானே விரும்பி தேர்ந்தெடுத்த துறைதான் சினிமா.

விளையாடுறப்ப நடிப்பைப் பத்தி நான் நினைச்சுக்கூட பார்த்ததில்லை. ஆனா, நடிகையாக மாறியிருக்கேன். இப்போ விரும்பி நடிச்சுக்கிட்டு இருக்கேன். அவுங்க விளையாட்டுல கடினமா உழைக்கிறாங்க. நான் சினிமாவுல என்னோட கடின உழைப்பைக் கொடுக்குறேன். விளையாட்டையும் சினிமாவையும் ஒப்பிட்டுப் பார்த்ததே இல்லை.

விளையாட்டுல யாரையாவது எதிர்த்து விளையாடணும். சினிமாவுல அப்படி யாரும் இருக்காங்களா?

விளையாட்டோட சினிமாவை ஒப்பிட முடியாது. அது வேற; இது வேற. சினிமாவுல யாரும் போட்டி இல்லை. போட்டி வந்தாலே தொழில்ல ஃபர்பெக்‌ஷன் இல்லாமல் போயிடும். ஃபர்பெக்‌ஷன் போனா எல்லாமே நெகட்டிவா மாறிடும். கவனமும் சிதறிடும். அதனால, அதுல நான் கவனமா இருக்கேன்.

முதல்ல நம்ம சினிமாவை சர்வதேசத்துக்கு கொண்டு போகணும். அதுக்கு தகுந்த மாதிரி நானும் நடிப்பை வெளிப்படுத்தணும். அதுக்காக நடிப்பு பயிற்சி எடுக்கிறேன், வெளிநாட்டு நடனங்களைக் கத்துக்குறேன். கடின உழைப்பை வெளிப்படுத்தி சர்வதேச அளவுல ஈர்க்கப்படணும். அதுதான் என்னோட ஒரே ஆசை.

திடீர்ன்னு ஐ.பி.எல். கிரிக்கெட் டி.வி. ஷோவில் தலைகாட்ட ஆரம்பிச்சிடீங்க. அடுத்த மந்த்ரா பேடியாக வர ஐடியாவா?

அய்யய்யோ அப்படியெல்லாம் கிடையாது. எந்த விளையாட்டா இருந்தா என்ன, ஒரு விளையாட்ட மக்களிடம் கொண்டு போறோம். அது மட்டுமல்ல, இது மாதிரி டி.வி. நிகழ்ச்சிகள் மக்களிடம் இன்னும் என்னை அதிகமாக கொண்டு போய் சேர்க்கும். மக்களிடம் பேச அது ஒரு வாய்ப்பு. மற்றபடி எனக்கு நடிப்பு மட்டும்தான் முக்கியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x