Last Updated : 27 May, 2016 12:19 PM

 

Published : 27 May 2016 12:19 PM
Last Updated : 27 May 2016 12:19 PM

சினிமா ஸ்கோப் 2 - கதை திரைக்கதை வசனம் இயக்கம்

படமாக்கம் பற்றி எதுவுமே அறியாமல் திரைப்படம் குறித்து விமர்சிக்கிறார்கள் எனத் திரைத் துறையினருக்குக் கோபமும் வருத்தமும் உள்ளன. அது இயல்புதான். ஏனெனில் சினிமா என்பது பற்றி அறிந்துகொள்ளும் முன்னரே புத்திசாலி இயக்குநர்கள் பலர், படங்களையே இயக்கிவிடுகிறார்கள். ஆகவே அப்படியான திறமைசாலிகளுக்கு இத்தகைய ஆற்றாமை எழத்தான் செய்யும்.

கோபம் அவர்களது தார்மிக உரிமை. ஆனால் ஒரு விஷயத்தை நினைத்துப் பார்க்க வேண்டும் துயில் கொள்ளும்போது கனவு காணும் அனைவருமே ஏதோ ஒரு படத்தை இயக்கியவர்தான். கனவென்பது மிகவும் புதுமையான, ஆத்மார்த்தமான, அந்தரங்கமான படம். ஒரு திரைப்படத்துக்குத் தேவையான ஒன்றுமே அதில் இல்லாதபோதும் அது தரும் ருசியுணர்வை நம்மால் அனுபவிக்க முடிகிறது. கனவின் ருசி அறிந்த ஆர்வத்தில் இயக்குநர்கள் அதைப் போன்ற சுவாரசியமான திரைப்படத்தை உருவாக்கக் களத்தில் இறங்குகிறார்கள்.

நல்ல சினிமாவின் பொதுப் பண்பு

கனவில் வரும் படங்களில் கதை இல்லை, பாடல்கள் இல்லை, சென்டிமெண்ட் இல்லை, எந்த லாஜிக்கும் இல்லை என்றாலும் அவை சுவாரசியமாக உள்ளன. ஆக, கனவில் இல்லாத இவற்றை எல்லாம் சேர்த்தால் அது எவ்வளவு ருசிகரமானதாக இருக்கும் என்று கனவு காண்கிறார்கள்;

தங்கள் கனவுப் படத்தையும் உருவாக்குகிறார்கள். ஆனால் திரைப்படத்துக்கான அம்சங்கள் இல்லாத கனவு சுவாரசியமாக இருக்கிறது. அத்தனை அம்சங்களையும் பார்த்துப் பார்த்து மெருகேற்றிய சினிமா அலுப்பூட்டுகிறது. காரணம் என்ன? ஒன்று கனவின் கால அளவுக்கும் சினிமாவின் கால அளவுக்கும் உள்ள மாறுபாடு. முன்னது சில நிமிடங்களில் முடிந்துவிடுகிறது, பின்னது இரண்டு மணி நேரம்வரை தாக்குப்பிடிக்க வேண்டியதிருக்கிறது.

அடுத்தது, ஒரு கனவுபோல் இன்னொரு கனவு இருப்பதில்லை. கடலலையைப் போல. அடுத்தடுத்து அலை மோதினாலும் ஒவ்வொன்றும் புதியது, முன்னர் அறிந்திராதது. ஒரே மூளை அல்லது ஒரே மனம் கனவுகளைப் பிரசவிக்கும்போதும் வெவ்வேறு வகைகளான கனவு சாத்தியமாகிறது. ஆகவே எல்லாக் கனவுகளையும் எப்போதும் ரசிக்க முடிகிறது. நல்ல சினிமாவுக்கும் இதுதான் பொதுப் பண்பு என்றே தோன்றுகிறது. ஏதோ ஒரு வகையில் புதுமையாக உள்ள, முன்னுதாரணமற்ற ஒரு படம் எளிதில் ரசிகர்களை ஈர்த்துவிடுகிறது.

மூன்று படங்கள்

நல்ல கதையைக் கொண்ட படம் என விளம்பரப்படுத்துவதே வழக்கத்திலிருக்கும் சூழலில் கதையே இல்லாத படம் என்று விளம்பரப்படுத்தப்பட்ட படமும் கதையுடன்தான் தொடங்கியது, கதையைக் கொண்டிருந்தது. ஆனாலும் அது ரசிகர்களைக் கவர்ந்தது. காரணம் படத்தில் புதுமை இருந்ததோ இல்லையோ, அது விளம்பரப்படுத்தப்பட்ட விதம் புதுமையானது.

முன்னோடித் தன்மை இல்லாதது. இதே உத்தியைக் கொண்டு இனியொரு படம் வந்தால் அது ரசிகர்களை ஈர்க்குமா என்பது கேள்விக்குறி. ஏனெனில் ஒரு குழந்தையின் மனம் போன்றது திரைப்பட ரசிகரின் மனம். அதற்குப் புதிது புதிதான பொம்மைகள் வேண்டும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் மாறுபட்டிருக்க வேண்டும். எனவே உத்திகளை மாற்றிக்கொண்டேயிருக்க வேண்டும். புதுப்புது உத்திகளைக் கண்டறிய வேண்டிய சவாலை எதிர்கொண்டே யாக வேண்டும்.

ஒரு காதல் படம் எடுபட்டால் ஓராயிரம் காதல் படம் எடுக்கிறார்கள் என்றாலும் சலிக்காமல் பார்க்கிறார்கள் ரசிகர்கள். எதுவரை? ஏதாவது ஒரு மாறுபாடு, புதுமை உள்ளவரை. இல்லையென்றால் அதை எளிதில் நிராகரித்துவிடுகிறார்கள். கே.பாக்யராஜின் ‘அந்த 7 நாட்கள்’, மணிவண்ணனின் ‘இங்கேயும் ஒரு கங்கை’, மணிரத்னத்தின் ‘மௌன ராகம்’ மூன்றுமே கிட்டத்தட்ட ஒரே கதைதான்.

சூழ்நிலைகளின் காரணமாகக் காதலனை விடுத்து மற்றொருவனைக் கணவனாக ஏற்றுக்கொண்ட பெண்ணின் மனப் போராட்டமே இப்படங்களின் மையக் கதை. ஆனால் சொல்லப்பட்ட விதத்தில், கதாபாத்திரச் சித்தரிப்புகளில் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை.

வாசகரை மறக்கடித்தல்

ஒரு கதையைச் சுவையான திரைக்கதையாக்குவது குயவர் ஒருவர் களிமண்ணிலிருந்து பானையை உருவாக்குவது போல் கவித்துவமானது, கலைமயமானது, கண்கட்டி வித்தை போன்றது. அதற்குக் கற்பனைத் திறன் அவசியம். ஓர் இயக்குநர் அவர் எழுதிய கதைக்குத் திரைக்கதை எழுதுவதே கடினம் எனும்போது நாவலை அடிப்படையாக வைத்துத் திரைக்கதை அமைப்பது என்பது மிகவும் கடினம்.

நாவலின் கதாபாத்திரங்களுக்கு அதை வாசிக்கும் ஒவ்வொரு வாசகரும் ஒவ்வோர் உருவத்தையும் உணர்வையும் அளித்திருப்பார். அவர்களது மனத்தில் ஏற்கெனவே உருக்கொண்டுள்ள கதாபாத்திரங்களை மறக்கடிக்கும் வகையில் திரையில் இயக்குநர் கதாபாத்திரங்களை உலவவிட வேண்டும். இல்லையென்றால் படம் கவனிக்கப்படாமல் போகும் வாய்ப்பு உள்ளது. ஒரு கதாபாத்திரம் கடும் மன அவஸ்தையிலோ பெரும் மகிழ்ச்சியிலோ இருந்தது என்பதை நாவலில் பக்கம் பக்கமாக விவரித்துவிடலாம். ஆனால் திரையில் அவற்றைக் காட்சிகளாக மாற்ற வேண்டும்.

அது இயக்குநரின் படைப்பாற்றலுக்குச் சவால் விடுவது. இந்தச் சிரமங்களை எல்லாம் பார்க்கும்போது ஒரு படத்தைப் பார்த்து அதை அப்படியே படமாக்கிவிடலாமே என்ற முடிவுக்கு ஓர் இயக்குநர் வருவதைத் தவறென்று பார்க்க முடியாது.

ஏன் இந்த முடிவு?

ஆக ஒரு கதையைப் படித்து அதிலிருந்து திரைக்கதையை உருவாக்குவதைவிடத் திரைக்கதையிலிருந்து திரைக்கதை உருவாக்குவது எளிதென்ற முடிவுக்கு வருகிறார்கள் நம் காலத்து இயக்குநர்கள். மறு ஆக்கப் படங்கள் தொடக்கம் முதலே தமிழில் இருந்துவந்தன. அகிரா குரோசோவாவின் ‘ரொஷோமான்’ பாதிப்பில்தான் வீணை எஸ். பாலசந்தர் ‘அந்த நாளை’ உருவாக்கினார் என்கிறார்கள்.

ஆனால் அவர் அப்படியே அந்தப் படத்தை நகலெடுக்கவில்லை. அந்தப் படத்தின் பிரதான உத்தியை மட்டும் கையிலெடுத்துக்கொண்டார். அதே உத்தியில் அமைந்த மற்றொரு படம் ‘விருமாண்டி’. ஆனால் மறு ஆக்கப் படங்கள் என்ற பெயரில் மூலப் படங்களை மொழிபெயர்த்து, ஷாட்களைக்கூடப் பிரிக்காமல், அந்தப் படத்தில் எப்படியெப்படிக் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றனவோ அப்படியப்படிக் காட்சிகளை அமைத்துவிட்டால் போதும் என்ற மனப்பாங்கு கற்பனை வளமற்றது.

இது பல சந்தர்ப்பங்களில் பலிப்பதுமில்லை. உதாரணங்கள் மிஷ்கினின் நந்தலாலா, சுப்ரமணிய சிவாவின் யோகி. இப்படியான படங்களின் மூலப் படங்கள் அவை உருவாக்கப்பட்ட நிலத்தின் பண்பாட்டுச் சாயலைக் கொண்டிருக்கும். அது நம் நிலத்தின் பண்பாட்டுச் சாயலுக்கு ஏதாவது விதத்தில் பொருந்தும் வகையில் இல்லாவிட்டால் படம் அந்நியப்பட்டுவிடும்.

ஓர் இயக்குநர் அவர் எழுதிய கதைக்குத் திரைக்கதை எழுதுவதே கடினம் எனும்போது நாவலை அடிப்படையாக வைத்துத் திரைக்கதை அமைப்பது என்பது மிகவும் கடினம்.

தொடர்புக்கு: Chellappa.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x