Published : 19 Jun 2015 12:14 PM
Last Updated : 19 Jun 2015 12:14 PM

சினிமா ரசனை 3: முப்பதே ஷாட்களில் ஒரு திரைப்படம்!

பொதுவாகவே உலகம் முழுக்க இருக்கும் திரைப்பட ரசிகர்களுக்கிடையே ஒரு கருத்து நிலவுவதைப் பார்க்கலாம். ‘திரைப்படம் என்பது வேகமாக இருக்க வேண்டும்' என்பதே அது. வணிகத் திரைப்படங்கள் இப்படி இருந்தால்தான் ஆடியன்ஸால் ரசிக்கப்படும் என்பது ஒரு விஷயம். உலகத் திரைப்பட ரசிகர்களுக்கேகூட இப்படி ஒரு எண்ணம் இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

இந்தியாவில் - குறிப்பாகத் தமிழகத்தில், கலைப்படங்களைப் பற்றி எப்போது எழுதப்பட்டாலும், நகைச்சுவையான உதாரணமாக ‘மரத்தையே அரைமணி நேரம் காட்டுதல்', ‘கேமராவை நகர்த்தாமல் நீண்ட ஷாட்கள் எடுத்தல்' என்றெல்லாம் எழுதப்படுவதைக் காண்கிறோம். ஆ

னால், வாழ்க்கை என்பதை எடுத்துக்கொண்டால், நிஜத்தில் அப்படியா இருக்கிறது? மெதுவாக நகரும் பல சம்பவங்களைக் கொண்டதே நம் வாழ்க்கை. இதில் இப்படிப்பட்ட சம்பவங்களைக் காண்பதால்/அனுபவிப்பதால் நமக்குள் ஏற்படும் எண்ணங்கள், நிகழும் மாற்றங்கள் ஆகியவற்றை எப்படி விளக்குவது?

ஒரு குதிரை ஒரு தத்துவவாதி

‘ஜெர்மனியைச் சேர்ந்த தத்துவவாதி ஃப்ரீட்ரிஃக் நீட்ஸ்ஸே (Friedrich Nietzsche - நீட்ஷே என்று நாம் தவறாக உச்சரிக்கும் பெயர், ஜேர்மன் மொழியில் இப்படித்தான் சொல்லப்படுகிறது), 1889 ஜனவரி மூன்றாம் தேதி, டுரின் நகரில் ஆறாம் எண்ணுள்ள வீட்டில் இருந்து வெளியே வருகிறார். அப்போது, அங்கே ஒரு கோச் வண்டியில் பிணைக்கப்பட்டுள்ள குதிரை திமிறிக்கொண்டே இருப்பதைப் பார்க்கிறார்.

நகர மறுக்கும் அந்தக் குதிரையை, வேறுவழியில்லாமல் அந்தக் குதிரைக்காரர் அடிக்க முயல்கிறார். இதைக் கண்டதும் பொறுக்க முடியாமல் நீட்ஸ்ஸே ஓடிச்சென்று குதிரையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழத் துவங்குகிறார். அவரது நண்பர் உடனடியாக வந்து நீட்ஸ்ஸேவை உள்ளே அழைத்துச் சென்றுவிடுகிறார்.

வீட்டுக்குள் இரண்டு நாட்கள் அசையாமல் படுத்திருக்கும் நீட்ஸ்ஸே, கடைசியாக, ‘Mother, I am stupid' என்று சொல்கிறார். இதன் பின் பத்து வருடங்கள் பேசாமலும் மனநிலை பாதிக்கப்பட்டும் உயிர் வாழ்ந்த நீட்ஸ்ஸேவை அவரது தாயும் சகோதரிகளும் கவனித்துக்கொண்டனர். அந்தக் குதிரையின் கதி தெரியவில்லை'.

இவை The Turin Horse (A torini l) என்ற படத்தின் ஆரம்ப வரிகள். நீட்ஸ்ஸேவால் காப்பாற்றப்பட்ட குதிரையின் கதை இது. இந்த வரிகளுக்குப் பின்னர் திரை வெளிச்சம் பெறுகிறது. வண்டியில் பூட்டப்பட்ட குதிரையை மிக அருகே காண்கிறோம். ஓட்டுபவரின் கையில் ஒரு சாட்டை. சற்றே வேகமாக நடக்கும் அந்தக் குதிரையின் கடிவாளம், கஷ்டப்பட்டு வண்டியை இழுக்கும் அதன் வலி ஆகியவை தெளிவாகப் புரிகின்றன.

இதன்பின் அதே ஷாட்டில் பின்னால் அமர்ந்திருக்கும் குதிரைக்காரரைக் கவனிக்கிறோம். கடிவாளத்தை இழுத்துப்பிடித்திருக்கும் அவரது முகத்தில் ஒருவித இயந்திரத்தனத்தோடு கூடிய சலிப்பும் வலியும் தெளிவாகத் தெரிகிறது. அவரையே கவனித்துக்கொண்டிருந்துவிட்டுப் பின்னர் மறுபடியும் குதிரைக்குச் செல்கிறது கேமரா. அந்தக் குதிரையுமே இயந்திரத்தனமாகவே செல்வதுபோன்ற பிரமை ஏற்படுகிறது.

பின்னணியில் வரும் இசை, உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருக்கும் நமது மனதை அறுக்கிறது. இதன் பின் கேமரா மெதுவே பின்னால் வருகிறது. வண்டியைப் பனி சூழ்கிறது. ஒருவிதக் காட்டுப் பகுதியில் வண்டி செல்கிறது. துவக்கத்தில் இருந்து ஒரேபோன்ற இசை. பின்னர் மறுபடியும் குதிரைக்கு வருகிறோம். அதன் முகத்தைக் கவனிக்கிறோம். மெல்ல இசை குறைந்து வண்டியின் சத்தம் கேட்க ஆரம்பிக்கிறது. வண்டி நிற்கப்போகிறது என்பதை அறிகிறோம். கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் ஓடும் ஒரே ஷாட் இது.

மறக்கவே முடியாது

வண்டிக்காரரின் வீட்டில் அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள். இந்த மகள், குதிரை, குதிரைக்காரர் ஆகியவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதுதான் முழுப்படமும். நீட்ஸ்ஸேவைத் தீராத துயரில் தள்ளிய குதிரை இது. இந்தக் குதிரை அந்தக் குதிரைக்காரரின் வாழ்க்கைக்கு எப்படித் துணை புரிகிறது? அந்தக் குதிரை இல்லாமல் அவராலும் அவரது மகளாலும் வாழ்க்கையைத் தொடர முடியுமா?

வீட்டில் அந்த மகளின் தினசரி வாழ்க்கை எப்படிச் செல்கிறது? குதிரை இறந்துவிட்டால் அதன்பின் அவர்களின் வாழ்க்கை என்ன ஆகும்? இதுபோன்ற கேள்விகளுக்குப் பதிலாகவே இந்த முழுப்படமும் எடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தப் படத்திலும் முப்பதே ஷாட்கள்தான். படம் முழுதும் தொடரும் அருமையான இசையும் (Mihly Vg), படத்தின் நீளமான ஷாட்களும் இந்தப் படத்தை அவசியம் நம்மால் மறக்கவே முடியாத ஒரு படமாக ஆக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எதைப் பற்றிப் பேசுகிறது?

மனித வாழ்க்கையின் அழுந்தும் பாரம் பற்றிய வெளிப்பாடுதான் இந்தப் படம் என்பது இயக்குநர் பேலா தாரின் (Bla Tarr) கருத்து. ஒவ்வொரு நாளும் ஒரே விதமான வேலைகளை- கிணற்றுக்குச் சென்று தண்ணீர் எடுப்பதை - செய்துவருவது எத்தனை கடினம்? எத்தனை கொடுமை? ஒரேவிதமான இந்த வேலைகளைத் தினமும் முடிவே இல்லாமல் செய்வது, இவர்களின் உலகத்தில் எதுவோ தவறு இருக்கிறது என்பதைக் காட்டுகிறது என்பது பேலா தாரின் வாதம்.

Slow Cinema என்ற கருத்துக்கு இப்படம் ஒரு உதாரணம். இது ஒரு கறுப்பு வெள்ளைப் படமும் கூட. ‘மெதுவான திரைப்படம்', ‘கறுப்பு வெள்ளை' என்றதும் இது பழைய படம் என்று நினைத்துவிடவேண்டாம். இது 2011-ல் வெளிவந்த படம். இயக்குநர் பேலா தாரின் இறுதிப் படமும்கூட.

இதுவொரு இயக்கம்

முப்பதே ஷாட்களில், திரும்பத் திரும்ப ஒரே விஷயங்கள் நடக்கும் கதையாக இருந்தாலும், உள்ளது உள்ளபடி கவனித்தால் இந்தப் படத்தில் பல கருத்துகளை நாம் அறியலாம். படம் பார்த்து முடித்தபின் மனித வாழ்க்கையின் துயரம் பற்றி நம் ஒவ்வொருவருக்கும் பல கருத்துகள் எழும்.

இதுபோன்ற கருத்துகள்தான் வாழ்க்கையைப் பற்றிய பல எண்ணங்களை நமது மனதில் அழித்து இன்னும் செம்மையாக எழுதுகின்றன. இதுபோன்ற படங்கள்தான் பிற உயிர்களின்மீது கருணை கொள்ளவும், அவர்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும் நமக்கு உதவுகின்றன.

Slow Cinema Moment பற்றிய ஒரு அறிமுகம்தான் இந்தக் கட்டுரை. இன்னும் ஏராளமான விஷயங்கள் இதில் உள்ளன. அவற்றை அறிய, Theo Angelopoulos, Bla Tarr, Albert Serra, Aleksandr Sokurov, Lisandro Alonso, Tsai Ming-liang, Sharunas Bartas, Pedro Costa, Jia Zhang-ke, Carlos Reygadas, Gus Van Sant, Hou Hsiao-hsien ஆகிய இயக்குநர்களின் படங்களைக் கவனிக்கலாம். நிஜ வாழ்க்கையின் பரிணாமங்களை உள்ளது உள்ளபடி நமக்கு உணர்த்தும் இந்த ரீதியிலான படங்கள் நம் திரை ரசனையை மேம்படுத்திக் கொள்ள அவசியம். இதுபோன்ற படங்களைப் பார்க்கப் பார்க்க அதை கண்டிப்பாய் உணர்வீர்கள்.

தொடர்புக்கு: rajesh.scorpi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x