Published : 21 Nov 2014 12:12 PM
Last Updated : 21 Nov 2014 12:12 PM

சாங் ஆஃப் ஸ்பாரோஸ்: அரிதாரம் பூசாத அன்பு

ஒரு இரானியப் படம். பாரசீக மொழி. படம் புரியுமா என்று சந்தேகம். ஆங்கில சப்-டைட்டில்களை நம்பிப் பார்க்க ஆரம்பித்தால் அவை தேவையில்லை என முதல் காட்சியே உறுதிப்படுத்துகிறது. படம் பார்க்கையில் கண்ணீர் கசிவதைத் தடுக்க முடியவில்லை. நெருங்கிய உறவினர் ஒருவரது சோகம் போல நம்மைத் தாக்குகிறது. படம் நம்பிக்கையுடன் முடிகையில் திருப்தியாகக் கலைந்து செல்கிறோம்.

சாங் ஆஃப் ஸ்பாரோஸ். இயக்குநர் மஜித் மஜிதியின் படம். உலகம் முழுதும் திரும்பிப் பார்க்கும் உன்னத இயக்குநர் மஜித் மஜிதி. எளிய மனிதர்களின் ஈரமான வாழ்க்கையை அழகு மிளிரக் காட்சிப்படுத்தும் மாபெரும் கலைஞன்.

கதை நாயகன் கரீம் டெஹ்ரான் நகருக்கு அப்பால் ஒரு சிறிய கிராமத்தில் நெருப்புக்கோழிப் பண்ணை ஒன்றில் வேலை பார்க்கிறான். மனைவி நர்கீஸ் மற்றும் மூன்று குழந்தைகளுடன் ஓர் எளிய வீட்டில் நிறைவாக வாழ்ந்துவருகிறான். ஒரு நாள் மகளின் காது கேட்கும் கருவி தொலைந்துவிடுகிறது. குடும்பமே தேடிக் கடைசியில் கண்டுபிடிக்கப்படுகையில் அது பழுதாகிவிடுகிறது. இலவச மருத்துவமனையில் மூன்று மாதங்கள் காத்திருக்கச் சொல்கிறார்கள். இல்லாவிட்டால் டெஹ்ரான்தான் போய் வாங்க வேண்டும் என்கிறார்கள்.

இதற்கிடையில் கரீம் பராமரிப்பில் இருந்த நெருப்புக் கோழி ஒன்று பண்ணையிலிருந்து தப்பி ஓடிவிடுகிறது. எவ்வளவு முயற்சி செய்தும் பிடிக்க முடியவில்லை. இதனால் கரீமின் வேலை போய்விடுகிறது. குடும்பத்தைக் காப்பாற்றவும் மகளின் செவிக்குக் கருவி வாங்கவும் இப்போது டெஹ்ரான் செல்ல முடிவு செய்கிறான்.

டெஹ்ரானில் மோட்டர் பைக்குக்கும் ஓட்டுநர்கள் உண்டு. இரு சக்கர வண்டியில் பிரயாணிகளையும் பொருட்களையும் ஏற்றிச் செல்லும் வேலை கிடைக்கிறது. நகர வாழ்க்கை முதலில் மூர்க்கத்தனமாகவும் இயந்திரத்தனமாகவும் கரீமை எதிர்கொள்கிறது. ஆனால் அதன் தொடர் உரசலால் கரீமும் தன் இலக்குகளை மறந்து போகிறான். தூக்கி எறியப்படும் தட்டுமுட்டுச் சாமான்கள் எல்லாவற்றையும் வீட்டிற்கு வருகையில் எடுத்து வருகிறான். அவை மலை போல் குவிவதைப் பெருமையுடன் பார்த்துவருகிறான்.

ஒரு முறை அவற்றை எடுத்து வைக்கும்போது தவறி விழுந்து கரீமின் கால் உடைகிறது. வேலைக்குப் போக முடியாத நிலையில் மகன் கை கொடுக்கிறான். மகன் வாங்கி வரும் மீன் தொட்டி உடைந்ததால் அவன் அத்தனை மீன்களையும் ஓடும் தண்ணீரில் விட்டுக் காப்பாற்றுவதைப் பெருமையுடன் பார்க்கிறான். தன் வாழ்க்கைக்கான விழுமியத்தை அவன் கற்றதாய் நினைத்துப் பெருமிதம் கொள்கிறான்.

அதேநேரத்தில் தொலைந்துபோன நெருப்புக்கோழி கிடைத்துவிட்டதாக முதலாளி செய்தி அனுப்புகிறார். மீண்டும் வேலை கிடைக்கிறது. திரும்பி வந்த நெருப்புக்கோழியைக் கண்ணீர் மல்கப் பார்க்கப் படம் முடிவடைகிறது!

மொழி, கலாச்சாரம், தொழில், உணவுப் பழக்கம் என அனைத்தும் வேறுபட்ட நிலையிலும் கரீம் குடும்பத்தை நம் பக்கத்து வீட்டுக் குடும்பமாகப் பார்க்கவைக்கிறார் மஜித் மஜிதி. அவரின் பிரச்சினைகளும் எதிர்பார்ப்புகளும் மிக மிகச் சாதாரணமானவை. அவற்றைக் கையாளும் கரீம் எந்தப் பராக்கிரமத்தையும் காட்டவில்லை. வாழ்வாதாரம் குறித்த போராட்டத்தில் பெரிய வில்லன்களும் இல்லை.

நெருப்புக்கோழி முதலாளியும் சுரண்டவில்லை. நகர வாழ்க்கையும் தீயவர் கூடாரமாகக் காட்டப்படவில்லை. அவன் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் நோய், தொலைந்துபோகும் மிருகம், பழுதாகும் கருவி, விபத்துகள், பொருட்கள் சேதம் இவற்றால் வருபவைதான்.

எல்லோரும் நல்லவரே என நினைக்கும் உயர்ந்த மனம் கரீமுக்கு. உண்மையில் அந்த மனம் இயக்குநர் மஜித் மஜிதிக்கு என்றுதான் சொல்ல வேண்டும். சூழ்நிலைகள்தான் துன்பங்களை ஏற்படுத்துகின்றன. அதை ஜெயிக்கும் மனிதர்கள் எதற்காகவும் தங்களது நல்ல தன்மையை விட்டுக் கொடுப்பதில்லை. காலத்தின் எல்லாச் சோதனைகளிலிருந்தும் தங்கள் விழுமியத்தைச் சேதாரப்படுத்திக்கொள்ளாமல் மீண்டு வருகிறார்கள்.

எல்லோரையும் அன்புதான் பிணைக்கிறது. அதுதான் மறக்கவும் மன்னிக்கவும் சொல்லித்தருகிறது. அன்பு எனும் பெரும் சொத்து கொண்டவர்களுக்கு, மற்ற சொத்துகள் ஒரு பொருட்டல்ல. அதே போல மற்ற வாழ்க்கை முறை நெருக்கடிகளையும் சுலபமாக எதிர்கொள்ளும் வலிமையையும் அது தருகிறது.

மஜித் மஜிதியின் மனிதர்கள் நமக்குப் பெரிதும் பரிச்சயமானவர்கள். நிபந்தனையற்று நிஜமான அன்பு செலுத்துபவர்கள். வார்த்தைகளில் இல்லாமல் செயலில் தங்கள் அன்பைக் காட்டுபவர்கள். பிற மனிதர்களின் வலியைப் புரிந்தவர்கள். எளிமையான வாழ்க்கையை வாழ்பவர்கள்.

இந்த அன்பு மயமான உலகை அதீதப்படுத்தாமல், அரிதாரம் பூசாமல் அப்படியே இயல்பாகக் காட்டியதால் மனதில் ஒட்டிக்கொள்கிறது படம். இதமான இசை, செறிவான ஒளிப்பதிவு, உயிர்ப்புடன் உண்மையான வசனங்கள் போன்றவை பலம் சேர்த்தாலும் படத்தை முழுதும் தன் தோளில் சுமக்கிறார் நாயகன் வேடமேற்ற ரேஜா நாஜி. பல திரைப்பட விழாக்களில் சிறந்த நடிகர் விருதையும் தட்டிச் சென்றார்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆங்கில சப்-டைட்டில்களுடன் படம் வசூலையும் அள்ளியது.

நம் ஊரில் இல்லாத சாமானியர் கதைகளா? மிகத் திறமையான நடிகர்களும் நுட்பமான இயக்குநர்களும் தமிழில் உள்ளனர். தொழில்நுட்பத்திலும் திரை மொழியிலும் பிரமிக்கத்தகுந்த முன்னேற்றம் கண்டுள்ள தமிழ் திரையுலகம் கதைத் தேர்வுகளில் இன்னமும் கவனம் செலுத்தலாம்.

இலக்கியவாதிகளை வசனம் எழுத மட்டும் பணிக்காமல், அவர்கள் கதைகளையும் கொஞ்சம் கூர்ந்து வாசிக்கலாம்.

உலகம் நம்மைத் திரும்பிப் பார்க்க நம் மண்ணின் கதைகள் போதும்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x