Published : 27 Feb 2015 10:44 AM
Last Updated : 27 Feb 2015 10:44 AM

சாக்லேட் பையன் என்று அழைக்காதீர்கள்!- சித்தார்த் நேர்காணல்

பாய்ஸ் படத்தில் விடலைப் பையனாக அறிமுகமாகி ‘காவியத் தலைவன்’ போன்ற படங்களுக்கு நகர்ந்திருப்பவர் சித்தார்த்.

தனக்கென்று தனிப் பாணி கொண்ட அவரைச் சந்தித்தபோது, “ கடந்த 12 வருடங்களில் 25 படங்கள்தான் நடித்திருக்கிறேன். எனக்கு வித்தியாசமான கதைகளில் நடிக்கத்தான் பிடித்திருக்கிறது. அதற்காக நான் பண்ணிய படம்தான் ‘எனக்குள் ஒருவன்’.” தரமான சினிமா தர வேண்டும் என்ற தாகம் வெளிப்படப் பேச ஆரம்பித்தார் அவர்.

‘லூசியா’ கன்னடத்தில் ஹிட். அதன் மறு ஆக்கத்தில் நடித்தால் வெற்றி உறுதி என்பதால்தான் ஒப்புக்கொண்டீர்களா?

இப்படத்தை ‘லூசியா’ ரீமேக் என்ற ஒரு வார்த்தையில் அடக்க முடியாது. அடிப்படைக் கதைக் கருவை மட்டும் வைத்துக்கொண்டு திரைக்கதையில் தமிழ்க் கலாச்சாரத்துக்கு ஏற்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இப்படத்துக்காக இயக்குநர் பிரசாத் எழுதியிருக்கும் வசனங்களைப் பார்த்துப் பிரமித்துப் போய்விட்டேன். ‘லூசியா’ பார்த்தவர்கள் இப்படத்தைப் பார்த்தால், இந்த வேறுபாட்டை உணர்வார்கள். பார்க்காதவர்களுக்கு இரட்டை விருந்து.

முதல் முறையாக ஒரே படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

ஒரேநேரத்தில் இரண்டு கதாபாத்திரங்களிலும் நடிக்க மாட்டேன் என்று இயக்குநரிடம் சொல்லிவிட்டேன்.

முதலில் ஹீரோ கதாபாத்திரத்தை நடித்துவிட்டுப் பிறகு திரையரங்கப் பணியாள் கதாபாத்திரம் செய்தேன். அதற்காக முகத்தைக் கறுப்பாக்கினேன். எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை. இருபது நாட்கள் திரையரங்கு ஒன்றில் படப்பிடிப்பு நடத்தினோம். அது எனக்கே புதிய அனுபவம். அங்கு படப்பிடிப்பு நடக்கும்போது என்னை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை.

மக்களோடு மக்களாக நின்று கொண்டிருப்பேன். ‘ஹீரோ யாருப்பா… எங்க இருக்காருன்னு’ அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ‘இன்னும் வரலை. மேக்கப் போட்டுட்டு நானே இருக்காருப்பா…’ என்று பதிலளித்தேன். அதே போல தீபா சன்னிதி, நரேன் இருவருக்குமே என்னை முதல் முறையாகப் பார்க்கும் போது அடையாளம் தெரியவில்லை. இப்படி நிறைய நிஜ காமெடியை அனுபவித்தேன்.

உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெறும் நேரத்தில் படம் வெளியாகிறதே?

எங்கள் படத்துக்கு முன்னர் ‘காக்கிச் சட்டை’ வெளியாகிறது. அவங்க எந்த நம்பிக்கையில் வெளியிடுகிறார்களோ, அதே நம்பிக்கையில்தான் நாங்களும் வெளியிடுகிறோம்.

போன வருடம் இதே மார்ச் மாதத்தில், ‘எனக்குள் ஒருவன்’ படம் ஜெயிச்சுருக்கு, அந்த நம்பிக்கையில் நம்ம படத்தை வெளியிடலாம் என்று சொல்லி அடுத்த வருடம் நிறைய படங்களை வெளியிடுவார்கள். அந்தப் பெயர் எங்களுக்குக் கிடைக்கும்.

இந்தி, தெலுங்கில் படம் பண்ணுவதை ஏன் குறைத்துக்கொண்டீர்கள்?

இதுவரை மூன்று படங்கள் இந்தியில் பண்ணியிருக்கேன். அதில் இரண்டு வெற்றிப் படங்கள். தெலுங்குப் படம் பண்ணி மூன்று வருடங்கள் ஆகின்றன. இப்பவும் இந்தி, தெலுங்கிலிருந்து நிறையக் கதைகள் வருகின்றன. ஆனால் தமிழில் நல்ல தரமான படங்களைப் பண்ணிவிட்டுப் போகலாம் என்ற முடிவில் இருக்கிறேன்.

எனக்கு இந்த சாக்லேட் பாய், அழகான பையன் என்ற இமேஜ் எல்லாம் போக வேண்டும். சொல்லப் போனால் என்னை சாக்லேட் பாய் என்று சொல்லும்போது கோபம்தான் வருகிறது. அப்படிக் கூப்பிடுவதை நான் வெறுக்கிறேன். ‘எனக்குள் ஒருவன்’ படத்துக்குப் பிறகு இந்தப் பிம்பம் மாறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். இனிமேல் எந்த மாதிரியான கதையிலும் சித்தார்த்தை நடிக்க வைக்கலாம் என்ற முடிவுக்கு வருவார்கள்.

வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும் என்கிறீர்கள். அப்படியென்றால் வணிகப் படங்கள் பண்ண மாட்டீர்களா?

எம்.பி.ஏ. படிச்சிட்டு வருஷத்துக்கு 25 லட்ச ரூபாய் சம்பளத்துல நல்ல வேலையில இருந்தேன். அப்புறம் அந்த வேலை போரடிக்குதுன்னு சொல்லித்தான் வெறும் 2000 ரூபாய் சம்பளத்துல உதவி இயக்குநராக சினிமாவுக்குள் சேர்ந்தேன்.

எங்கப்பா ‘எதுக்குப்பா இது’ன்னுகூடக் கேட்டாரு. ‘ஒரே வேலைய செய்றது போரடிக்குதுப்பா’ன்னு அவர்கிட்ட சொன்னேன். இப்பவும் அதைத்தான் சொல்றேன்.

போதுமான அளவுக்குச் சம்பாதிச்சிட்டேன். இன்னமும் பணம் சம்பாதிக்கணும்னு நினைத்தால், வெளிநாட்டில் போய் டூயட் ஆடி, பூ கொடுத்துக்கொண்டுதான் இருக்கணும். எனக்கு அதுவும் பிடிக்கல… வித்தியாசம் தேடித்தான் சினிமாவுக்குள்ளேயே வந்திருக்கேன். இங்கேயும் ஒரே மாதிரிதான்னா எப்படி..?

அதற்காக வணிகப் படங்களுக்கு நான் எதிரியல்ல. நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன். ‘சிங்கம்’ மாதிரியான கதை எனக்கு வரவில்லை. சூர்யாவுக்கு வந்தது; நடித்தார். எனக்கு எது சரியா வரும் என்று இயக்குநர்கள் நினைக்கிறார்களோ அதில் நடிக்கிறேன். நல்ல வணிகப் படத்துக்கான கதை வரும்போது அதில் கண்டிப்பாக நடிப்பேன்.

‘காவியத் தலைவன்’ படத்துக்கு நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லையே…

வசூல் ரீதியில் வரவேற்பு கிடைக்கவில்லை என்பது உண்மைதான். எனக்கும் வருத்தம் உண்டு. ஆனால் ‘காவியத் தலைவன்’ படம் தப்பான படம் கிடையாது. நான் ரொம்பப் பெருமைப்பட்டுக் கொள்ளும் விதத்தில் எனக்கு அமைந்த படம். வசந்தபாலன் மாதிரியான இயக்குநர்களைத் தமிழ்த் திரையுலகம் கொண்டாட வேண்டும்.

இன்னும் ஒரு பத்து வருடங்கள் கழித்துப் பாருங்கள் அப்படத்தைப் பற்றிப் பேசுவார்கள். இப்போதுகூட நாம் கமல் சார் நடித்த ஓடாத படங்களைப் பற்றித்தானே பேசிக் கொண்டிருக்கிறோம். அவர் நடிப்பில் வெற்றியடைந்த படங்களைப் பற்றி நாம் பேசுகிறோமா? இல்லையே!

மறுபடியும் உங்களைப் பற்றிய காதல், பிரிவு செய்திகள் வலம் வருகின்றனவே?

(சிரித்துக் கொண்டே…) எதுக்கு அதைப் பற்றிப் பேசிக்கொண்டு…? இந்தியா உலகக் கோப்பை ஜெயிக்கட்டும்; என்னுடைய திருமணத்தைப் பற்றிச் சொல்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x