Published : 22 May 2015 01:15 PM
Last Updated : 22 May 2015 01:15 PM

கோடம்பாக்கத்தின் சகோதர யுத்தம்!

ஒரு பிரச்சினைக்காக ஒட்டுமொத்தத் திரையுலகமும் ஓரணியில் இணைந்து போராடுவது ஆபூர்வமாகத்தான் நடக்கும். அனைவரும் ஓரணியில் திரண்டிருக்கிறார்கள். டிஜிட்டல் சினிமா திரையிடல் நிறுவனங்களுக்கு எதிராக அஸ்திரம் எடுத்திருக்கிறார்கள். இந்த யுத்தத்தின் பின்னணியைப் புரிந்துகொள்ளும் முன் ஒரு சின்ன ப்ளாஷ்பேக்.

சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தக் காட்சி ஊருக்கு ஊர் அரங்கேறியது. தங்கள் அபிமான நாயகனின் திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சியன்றே பார்த்துவிட பேனர் கட்டி, கட் அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்து பெரும் ஆரவாரத்துடன் காத்திருப்பார்கள் ரசிகர்கள்.

ரயிலிலோ, பேருந்திலோ ஊர் வந்துசேரும் படப்பெட்டியை வசதியிருந்தால் யானையில்கூட ஊர்வலமாக எடுத்து வருவார்கள். தாரை தப்பட்டை முழங்க, குத்தாட்டம் போட்டபோடி ஊர்வலம் திரையரங்கை எட்டும்போது “பெட்டி வந்தாச்சு” என்ற வெற்றி முழக்கம் விண்ணை எட்டும். திரையரங்கம் இருக்கும் அந்தப் பகுதி தள்ளு முள்ளுகளால் அல்லோகல்லோலப்படும்.

தமிழர்களது அன்றாட வாழ்வின் கலாச்சாரக் கூறுகளில் ஒன்றாகவே மாறிவிட்டிருந்த இந்தக் காட்சியை இல்லாமல் செய்துவிட்டது டிஜிட்டல் சினிமா. கார்பன் குச்சியைக் கொளுத்தி எரியவிட்டு அந்த வெளிச்சத்தை அகண்ட திரையில் பரவவிட்டுப் படம் காட்டிய இங்கிலாந்து நாட்டின் தயாரிப்பான விக்டோரியா புரஜெக்டர்கள் பெரும்பாலான திரையரங்குகளின் திரையிடும் அறையை அடைத்துக்கொண்டிருந்தன. இன்று அவற்றை அருங்காட்சியகத்தின் அபூர்வங்களாக மாற்றிவிட்டது டிஜிட்டல் புரொஜெக்டர்.

திரையரங்கு சென்று சினிமா பார்க்கும் அனுபவத்தையே மாற்றியமைத்துவிட்டது இந்த டிஜிட்டல் திரையிடல். அதை வழங்கிவரும் நிறுவனங்கள் மீதுதான் கடுமையான சகோதர யுத்தத்தைத் தொடங்கியிருக்கிறார்கள் சினிமா தயாரிப்பாளர்கள்.

தமிழ்நாட்டில் டிஜிட்டல் சினிமா சேவையை வழங்கிவரும் நிறுவனங்கள் பட வெளியீட்டுச் செலவைக் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அதிகரித்துவிட்டதாகவும் தமிழ் சினிமா டிஜிட்டல் நிறுவனங்களின் பிடியில் சிக்கித் தவிப்பதாகவும், இந்த நிறுவனங்களை மாநில அரசே ஏற்று நடத்தித் தமிழ் சினிமாவைக் காப்பாற்ற வேண்டும் என்பதாகவும் கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள். இவற்றோடு டிஜிட்டல் நிறுவனங்கள் திரையரங்குகளின் மூலம் ஈட்டும் விளம்பர வருவாயில் தயாரிப்பாளர்களாகிய எங்களுக்கும் பங்கு வேண்டும் என்ற அதிரடி கோரிக்கையை வைத்திருக்கிறார்கள்.

டிஜிட்டல் நிறுவனங்கள் மீது தயாரிப்பாளர்கள் முன்வைக்கும் புகார்கள் சரியா? இவற்றுக்கு டிஜிட்டல் சினிமா நிறுவனங்களின் பதில்தான் என்ன என்பதை ஆராய வேண்டியது அவசியம். அதற்கு முன்னர், மூடுமந்திரமாகவே இருந்துவரும் டிஜிட்டல் சினிமா திரையிடல் சேவையின் முழுமையான பின்னணியைத் தெரிந்துகொண்டால்தான் பிரச்சினையை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

பிலிம் சுருளுக்கு விடை தந்த டிஜிட்டல்

இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை சினிமா தயாரிப்புச் செலவில் கணிசமான பகுதியை விழுங்கி ஏப்பம்விட்டது பிலிம் சுருள். படப்பிடிப்பு முடிந்ததும் காட்சிகள் பதிவுசெய்யப்பட்ட பிலிம் சுருள்கள் ‘லேப்’களுக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கே அவை பதனிடப்பட்டு, எக்ஸ்போஸ் செய்யப்பட்ட பின் நெகட்டிவ்களாக மாற்றப்படும். அதனுடன் இசையும் சிறப்பு ஒலிகளும் சேர்க்கப்பட்ட சவுண்ட் நெகட்டிவ் இணைக்கப்பட்டு ‘மேரிட் பிரிண்ட்’எனப்படும் முதல் பிரிண்ட் தயாராகும்.

முதல் பிரிண்ட் தயாராக லேப் கட்டணம் செலுத்த வேண்டும். எத்தனை திரையரங்குகளில் படம் வெளியிடப்படுகிறதோ அத்தனை பிரிண்ட்கள் லேபில் போட்டுத்தரப்படும். ஒரு பிரிண்டுக்கு 60 முதல் 65 ஆயிரம்வரை செலவாகும். ஒரு படத்தைக் குறைந்தது 50 திரையரங்குகளில் வெளியிட்டால் தயாரிப்பாளர் பிலிம் பிரிண்டுகளுக்கே 25 முதல் 30 லட்சம்வரை செலவு செய்ய வேண்டும். படப்பிடிப்பு, திரையிடல் இரண்டிலிருந்தும் பிலிம் சுருளை அடியோடு ஒழித்துத் தயாரிப்பாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தது டிஜிட்டல் சினிமா.

விளைவு, தரமான டிஜிட்டல் கேமராவும் ஒரு நல்ல தொழில்நுட்பக் குழுவும் இருந்தால் யாரும் படமெடுக்கலாம் என்ற சூழல் உருவாகிவிட்டது. 90களில் ஆண்டுக்கு 80 முதல் 100 படங்கள் மட்டுமே வெளியாகிவந்த தமிழ்த் திரையில் இன்று ஆண்டுக்கு 200 முதல் 250 படங்கள்வரை வெளியாகப் பாதை அமைத்துக் கொடுத்துவிட்டது அதிநவீன டிஜிட்டல் கேமராக்களின் வரவு. இனி பிலிம் சுருளே தேவையில்லை என்று ஆகிவிட்டது.

2கே 1கே

கமல், மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம், சேரன் எனப் பிரபலங்களே டிஜிட்டல் படப்பிடிப்பில் பட்டையைக் கிளப்ப ஆரம்பித்தனர். இதனால் ஐரோப்பாவில் தயாராகும் டிஜிட்டல் சினிமா கேமராக்கள் சுடச்சுடக் கோடம்பாக்கத்தில் அறிமுகமாயின.

பிலிம் சுருள் இல்லாமல் டிஜிட்டலில் படம்பிடித்தாலும் அதைத் திரையிட மீண்டும் பிலிம் பிரிண்ட்களிடமே சரணடைய வேண்டிய நிலை இருந்தது. இதற்கான தீர்வாக வந்ததுதான் டிஜிட்டல் திரையிடல் சேவை (Digital Screening).

ஐரோப்பிய நாடுகளில் டிஜிட்டல் சினிமா அசுர வேகத்தில் வளர்ந்து நின்றபோது அதன் சர்வதேசத் தரத்தை ஒழுங்குபடுத்த ஹாலிவுட்டில் 2002-ம் ஆண்டில் டி.சி.ஐ. (DCI- Digital Cinema Initiatives) என்ற தர நிர்ணய அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஹாலிவுட்டின் மிகப் பெரிய நிறுவனங்களான மெட்ரோ கோல்டன் மேயர், பேராமவுண்ட், வால்ட் டிஸ்னி, சோனி எண்டெர்டெயிண்மெண்ட், ட்வெண்டியத் சென்சுரி ஃபாக்ஸ், யுனிவர்செல் ஸ்டூடியோ உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து இதை உருவாக்கின. டிஜிட்டல் சினிமாவின் படப்பிடிப்பு தரம், வண்ணத் தரம், அது திரையிடப்படும் ரெசொல்யூஷன் தரம் உட்பட டிஜிட்டல் சினிமா தயாரிப்பு மற்றும் திரையிடலில் அகில உலகிலும் கடைப்பிடிக்க வேண்டிய அளவுகோல்களையும் இந்த அமைப்பு நிர்ணயித்தது.

தயாரிப்பு மற்றும் சேவைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்று தரப்படுவதுபோலத்தான் டிஜிட்டல் சினிமாவுக்கு டி.சி.ஐ.

இந்த டி.சி.ஐ. தர அளவுகோலைப் பின்பற்றி இந்தியாவில் பல நிறுவனங்கள் டிஜிட்டல் திரையிடல் சேவையை 20 ஆண்டுகளுக்கு முன் தொடங்கின.

தமிழ்நாட்டில் க்யூப் (QUBE), யூ.எஃப்.ஓ (UFO), பி.எக்ஸ்.டி (PXD) ஆகிய மூன்று நிறுவனங்கள் டிஜிட்டல் திரையிடல் சேவையில் பிரபலமாக இருக்கின்றன. இவற்றில் க்யூப் நிறுவனம் 60 சதவீதத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் டிஜிட்டல் புரொஜெக்டர்களை நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் நிறுவித் தனது சேவையை வழங்கிவருகிறது.

இந்த நிறுவனங்கள் இரண்டு வகையான புரொஜெக்டர்களைத் திரையரங்குகளில் அமைத்துக் கொடுத்திருக்கின்றன. 2கே தரம் கொண்ட புரொஜெக்டர்கள் 35 லட்சம் விலையென்றால் 1கே புரொஜெக்டர்கள் 12 லட்சம். இந்த புரஜெக்டர்களில் ஒரு டிஜிட்டல் பிளேயரும் இருக்கிறது. ஒரு கம்ப்யூட்டராகவும் இது வேலை செய்கிறது.

வான் வழி, தரை வழி

இந்த டி.சி.ஐ. தர புரொஜெக்டர்கள் வழியே பிரபலமாகியிருக்கும் டிஜிட்டல் சேவை திரையிடலை நவீனமாகவும் எளிதாகவும் மாற்றியதா!? “ஆம்” என்கிறார் தமிழ்நாடு திரையங்க உரிமையாளர்கள் சங்கச் செயலாளரான திருச்சி தர். “எங்களுக்கு வெள்ளிக்கிழமைகள்தான் புனித நாட்கள். டிஜிட்டல் திரையிடல் காரணமாகச் சிறு கிராமம் முதல் பெரிய நகரம்வரை ஒரே நேரத்தில் படத்தைத் திரையிடும் வசதி கிடைத்தது.

முதல் நாள் முதல் காட்சியில் இருக்கும் ஒளி, ஒலியின் துல்லியமும் தரமும் கடைசிவரை உறுதியாகத் தொடர்கிறது. பட வெளியீட்டுக்குச் சில நாட்கள் முன்பாகவே எங்களுக்கு வான் வழியாகவோ தரைவழியாகவோ படம் வந்து சேர்ந்துவிடும். இதைவிட முக்கியமானது ஒரே திரையில் ஒரு நாளில் நான்கு வெவ்வேறு திரைப்படங்களைத் திரையிட்டு ரசிகர்களுக்குத் தீனி போடும் சாத்தியத்தை உருவாக்கியதும் டிஜிட்டல் சினிமாதான்” என்கிறார்.

இப்படிப்பட்ட டிஜிட்டல் சினிமா எப்படித் திரையரங்குகளுக்கு வந்து சேர்கிறது? படப்பிடிப்பு முடிந்து படத்தொகுப்பு முடிந்ததும் டி.ஐ எனப்படும் கலரிங், கிரேடிங், கிராஃபிக்ஸ் போன்ற பலவும் சேர்க்கப்பட்டு டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கு டிஜிட்டல் ஃபைலாக வந்து சேர்கிறது திரைப்படம்.

இப்படி வரும் ஒரு படம் 12 டெரா ஃபைட் அளவு கொண்டது. இதை டிஜிட்டல் நிறுவனங்கள் 300 ஜிகா பைட்டுகளாக அமுக்கி ‘கம்ப்ரஸ்’ செய்து அளவில் சின்ன ஃபைலாக டி.சி.ஐ. தரத்துக்கு மாற்றுகின்றன. இதைத்தான் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் ‘ மாஸ்டரிங்’ என்று சொல்கின்றன.

இந்த பிரிண்டே தணிக்கைக் குழுவுக்குக் காட்டப்பட்டு சான்றிதழ் பெற்றதும் படம் வெளியாகும் திரையரங்குகளுக்குச் செயற்கைக் கோள் வழியாகவும், நேரடியாகவும் (ஊழியர்கள் மூலம்) அனுப்பப்படுகிறது. திரையரங்கில் உள்ள டிஜிட்டல் புரொஜெக்டரில் உள்ள ஹார்ட் டிரைவில் திரைப்படமானது தரவிறக்கம் செய்து சேமிக்கப்படுகிறது.

திரைப்படத்தைத் திரையில் காட்ட ‘ லைசென்ஸ் கீ’ எனப்படும் பாஸ்வேர்டை டிஜிட்டல் நிறுவனங்கள் தருகின்றன. அதை உள்ளீடு செய்ததும் படம் திரையில் ஒளிரும். இந்த ‘லைசென்ஸ் கீ’ உரிமையைக் கையில் வைத்துக் கொண்டிருப்பதால்தான் டிஜிட்டல் நிறுவனங்கள் இஷ்டத்துக்குக் கட்டணத்தை நிர்ணயித்துத் தங்களைக் கட்டுப்படுத்துவதாகக் கதறுகிறார்கள் சினிமா தயாரிப்பாளர்கள்.

அவர்களது கூற்று எந்த அளவுக்குச் சரியானது? டிஜிட்டல் திரையிடலால் திரையுலகிற்கு நன்மையா, தீமையா? இப்போதுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுதான் என்ன? அடுத்த வாரம் பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x