Published : 19 Dec 2014 03:00 PM
Last Updated : 19 Dec 2014 03:00 PM

காலங்களைக் கைது செய்தவர்

ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த உயிரினம் டைனோசர். இதைப் பாடப் புத்தகம் சொல்லித் தந்ததோ இல்லையோ... உலகம் முழுவதும் வாழும் குழந்தைகளுக்கு ஸ்பீல்பெர்க்கின் ‘ ஜூராசிக் பார்க்’ திரைப்படம் சொல்லிக் கொடுத்தது. புதைபடிவங்களிலிருந்து டைனோசரை நிகழ்காலத்துக்கு உயிருடன் எழுப்பிக்காட்டிய செல்லுலாய்டு ரட்சகன் என்று ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கை வருணிக்கலாம்.

எழுபதுகளுக்குப் பிறகு கிட்டத்தட்ட குப்பைக் கிடங்காகிப்போன ஹாலிவுட் படவுலகை மனிதம் பொதிந்த தன் பிரம்மாண்ட கற்பனைகளின் வழியே சுத்தம் செய்ய முயன்று அதில் பிரம்மாண்ட வெற்றிகளையும் குவித்த ஆஸ்கர் நாயகன். கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் கைதுசெய்து தன் படங்களில் அடைத்து வைக்கும் இந்த நிகழ்காலத்தின் மாயப் படைப்பாளிக்கு நேற்று 68-வது பிறந்ததினம்.

அப்பாவின் கேமரா

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள சின்சினாட்டி நகரில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார். அப்பா கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் என்ஜினியர். அம்மாவோ ஒரு சிறு உணவு விடுதியை நடத்தினார். கச்சேரிகளில் வாசிக்க அழைக்கப்படும் அளவுக்கு நல்ல பியானோ இசைக்கலைஞர். சமயங்களில் தன் உணவுவிடுதியிலும் வாசித்து வாடிக்கையாளர்களை நெக்குருக வைப்பார்.

தன் பால்யம் முழுவதையும் நியூஜெர்சியில் கழித்த ஸ்பீல்பெர்க் தனது 12-வது பிறந்தநாளில் ஒரு குறும்பைச் செய்தார். அப்பா தன்வசம் வைத்திருந்த 8 எம்.எம். மூவி கேமராவைத் தனக்குப் பிறந்தநாள் பரிசாகக் கொடுத்துவிடும்படி கேட்டு வாங்கிக் கொண்டார். அதில் சின்னச் சின்ன படக் காட்சிகளை எடுக்க ஆரம்பித்தார். அவற்றைப் பள்ளி நண்பர்களுக்குத் தன் வீட்டில் திரையிட்டுக் காட்டினார். அதற்காகத் தலைக்கு 25 சென்ட் பார்வையாளர் கட்டணம் வசூலிக்க, ஸ்பீல்பெர்க்கின் தங்கையோ வீட்டில் தயாரித்த பாப்கார்னை விற்றிருக்கிறார்.

17 வயதில் இயக்குநர்

வீட்டையே திரையரங்காக மாற்றிய ஸ்பீல்பெர்க், தன் 13-வது வயதில் போரின் கொடூரத்தைச் சித்திரிக்கும் ஒரு டாக்கு டிராமாவை இயக்கினார். வரலாற்றுப் பாடத்தில் அவரை அதிர்ச்சியுறச் செய்தது கிழக்கு ஆப்ரிக்கப் போர். அது பற்றிய கூடுதல் தரவுகளைப் பள்ளி நூலகத்தில் திரட்டி ‘எஸ்கேப் டு நோவேர்’(Escape to Nowhere) என்ற பெயரில் 40 நிமிடப் படமாக எடுத்துப் பள்ளிகள் அளவிலான விருதையும் பெற்றார்.

அதன்பிறகு ஸ்பீல்பெர்க்கின் வாழ்க்கையில் ஒரு சோக நிகழ்வு. கருத்து வேறுபாடு காரணமாக ஸ்பீல்பெர்க்கின் பெற்றோர் விவாகரத்து பெற, அம்மாவின் செல்லமான ஸ்பீல்பெர்க், தாயையும் தனது மூன்று சகோதரிகளையும் பிரிந்து அப்பாவுடன் கலிபோர்னியா மாநிலத்தின் சரடோகா நகருக்குக் குடிபெயர்கிறார். அப்பாவுக்குத் தெரியாமல் அம்மாவையும் தங்கைகளையும் பார்க்க அரிசோனாவுக்கு அடிக்கடி எஸ்கேப் ஆனார். இதனால் அம்மாவின் அருகிலேயே இருந்து பள்ளிக் கல்வியைத் தொடர அனுமதித்தார் அப்பா.

அரிசோனாவின் புகழ்பெற்ற பள்ளிகளில் ஒன்றாகிய ‘ஆர்காடியா’ உயர்நிலைப் பள்ளியில் மூன்றாண்டுகள் படித்து முடித்தபோது இனியும் பொறுக்க முடியாது என்று “நான் சினிமா இயக்குநர் ஆகவேண்டும்” என்றார் ஸ்பீல்பெர்க். “ அது சாதாரண காரியம் அல்ல. அதற்கு முதலில் திரைக்கதை எழுதி முடிக்க வேண்டும்” என்று அப்பா சொல்ல, அடுத்த நிமிடம் தனது புத்தகப்பையிலிருந்து ‘ ஃபயர்லைட்’(Firelight ) என்ற திரைக்கதையை எடுத்துக் கொடுக்க ஆடிப்போனார் அப்பா. பெற்றோரின் 500 டாலர்கள் முதலீட்டில் தன் அறிவியல் புனைவுப் படத்தை உருவாக்கினார் ஸ்பீல்பெர்க்.

அவரே கேமரா, அவரே எடிட்டர் எல்லாம். அவரது ஆர்காடியா பள்ளியின் பேண்ட் குழு மாணவர்கள் பின்னணி இசையை அமைத்துக் கொடுக்க, படம் தயாராகி உள்ளூர் திரையரங்குகள் சிலவற்றில் ரிலீஸ் ஆகி போட்ட பணத்தையும் சம்பாதித்துக் கொடுத்தது. விளையும் பயிர் முளையிலேயே தெரிந்தது.

நிராகரிக்கப்பட்ட கலைஞன்

இதன்பிறகு தெற்கு கலிபோர்னியா திரைப்படக் கல்லூரியில் சேர விரும்பியவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மனம் தளராமல், கலிபோர்னியா மாகாணப் பல்கலைக்கழகத்தில் சேர்த்தார். ஆனால் சினிமா ஆர்வம் அங்கேயும் அவரைப் பாடப் புத்தகங்களில் கவனம் செலுத்த விடவில்லை. விளைவு, கலிபோர்னியாவில் கனவுகளை உற்பத்தி செய்யும் யுனிவர்சல் ஸ்டுடியோவின் படத்தொகுப்புப் பிரிவில் பயிற்சி உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார்.

பைசா கூட சம்பளம் பெறாமல், வாரத்தின் ஏழு நாட்களும் பிலிம் சுருள்களோடு சுருண்டு கிடக்கும் வேலையை ஆர்வத்துடன் செய்தார். எந்த நிறுவனம் ஊதியம் தராமல் அவரை வேலைக்குச் சேர்த்துக் கொண்டதோ அதே நிறுவனம் அவரது ஆர்வத்தையும் திறமையையும் துல்லியமாக அளவிட்டது. ‘ஆம்ப்ளின்’ என்ற குறும்படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கியது. 26 நிமிடங்கள் ஓடும் அந்தப் படம் ஸ்டுடியோ வட்டாரங்களைத் தாண்டி ஸ்பீல்பெர்க்கைப் பற்றிப் பேச வைத்தது.

ஒரு யூதன் என்ற காரணத்துக்காகப் பல சந்தர்ப்பங்களில் புறக்கணிக்கப்பட்ட ஸ்பீல்பெர்க்கைப் பெற்றோரின் பிரிவும் அழுத்த அதையும் மீறி தன் குறும்படத்தில் நகைச்சுவையை ஓரு நீரோடைபோல வழியச் செய்தார். கவலைகள் ஏதுமற்ற ஹிப்பி இளைஞனொருவன் ஒரு தன் தோழியோடு பாலைவனத்தைக் கடப்பதுதான் அந்தக் குறும்படத்தின் கதை. மருந்துக்கும் வசனத்தைப் பயன்படுத்தாமல் கிடார் இசைப் பின்னணியில் அழகியல் ததும்ப சிரிக்க வைத்திருந்தார் ஸ்பீல்பெர்க். அப்போது தொடங்கிய இவரது கலைப் பயணம். 40 ஆண்டுகளைக் கடந்து பொழுதுபோக்கையும் மனிதநேயத்தையும் இணைக்கும் தீராநதியாகக் கட்டற்று பயணிக்கிறது.

திரைப்படம் ஒரு மேஜிக்

தனது “ஒவ்வொரு படமும் ஒரு மேஜிக் என்று ரசிகர்கள் உணர வேண்டும். படம் பார்ப்பதை ஒரு பரவசமாக மாற்றிக்காட்ட வேண்டும்” என்று சொல்லிக்கொண்டே இருக்கும் ஸ்பீல்பெர்க், பெரியவர்கள் வியக்கும் அரசியலையும் குழந்தைகளுக்கான அழகியலையும், எல்லோருக்குமான சாகசங்களையும் கொண்டதாகத் தனது படங்கள் இருக்க வேண்டும் என்று எண்ணியே ஜுராசிக் பார்க், ஈ.டி, ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ், டின் டின் ஆகிய படங்களைக் கொடுத்தவர். யூதர்களின் இன அழிப்புக்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டாக ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ எனும் கண்ணீர் காவியத்தைப் படைத்த ஸ்பீல்பெர்க் அதையும் குழந்தைகளுக்குப் பிடிக்கும் வகையில் காட்சிப்படுத்தினார். குழந்தைகளுக்காகவே டிரீம்ஸ் ஒர்க் பட நிறுவனத்தைத் தொடங்கினார்.

ஆனால் யதார்த்தத்தில் இல்லாத உலகத்தைக் காட்டி கமர்ஷியல் வண்டியோட்டுகிறார் என்று விமர்சனம் வந்தபோது, ஸ்பீல்பெர்க் வெறும் கமர்ஷியல் இயக்குநர் இல்லை என்பதை ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ படத்துக்குக் கிடைத்த முதல் ஆஸ்கர் நிரூபித்தது. அந்தப் படத்தின் மூலம் கிடைத்த வருமானத்தை நாஜிக் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் அறக்கட்டளைக்குக் கொடுத்து உதவினார்.

ஃபாண்டஸியும் யதார்த்தமும்

ஒரு பக்கம் கடந்த காலம், எதிர்காலத்தின் ஃபாண்டஸிகள், போர்கள், அறிவியல் புனைவுகள் என்று தனது பிரம்மாண்ட சினிமா மொழியின் வழியே மனிதநேயம் பேசும் ஸ்பீல்பெர்க், இன்னொரு பக்கம் வரலாற்றை நிகழ்காலத் தலைமுறைக்கு மீட்டுத்தர தவறவில்லை. அடிமைமுறையை ஒழிக்க ஏழ்மையிலிருந்து எழுந்த புரட்சி நாயகன் லிங்கனது வாழ்வின் கடைசி நான்கு மாத காலத்தை உயிர்ப்புடன் சித்தரித்த ‘லிங்கன்’ படத்தைக் கொடுத்தார்.

தரமான சினிமா முயற்சிகளுக்குத் தானே முன்வந்து கைகொடுக்கும் ஸ்பீல்பெர்க் தன்னைக் கவர்ந்த குரோசோவாக்கு ஒரு மானசீக மாணவன் செய்ய வேண்டிய கடமை என்றெண்ணி அவரது ‘ ட்ரீம்ஸ்’ படத்தை இணைந்து தயாரித்தார். காட்சிமொழியின் ஆகச் சிறந்த சாத்தியங்களை உலக சினிமாவுக்கு சமர்ப்பித்த குரோசோவாவின் அந்தப் படத்தில் ஓவியர் வான்காவின் கதாபாத்திரத்தில் அமெரிக்காவின் மற்றொரு மாபெரும் கலைஞர் மார்ட்டின் ஸ்கோர்சஸியை நடிக்க வைத்ததில் ஸ்பீல்பெர்க்குக்கு முக்கியப் பங்கிருக்கிறது.

இத்தனை சிறப்புகளைக் கொண்ட இந்த மாபெரும் கலைஞன் மீது ஒரு கதைத் திருட்டு குற்றச்சாட்டும் உண்டு. குற்றம்சாட்டியவர் சத்திய ஜித்ரே. ஹாலிவுட்டில் தனது ‘ எலியன்’ படத்தை எடுக்க முயன்றார் சத்யஜித் ரே. ஆனால் அது கைவிடப்பட்ட நிலையில் அதன் திரைக்கதைப் பிரதிகள் ஹாலிவுட் எங்கும் வலம் வந்தன. அது ஸ்பீல் பெர்க்குக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே அவரது ‘ஈ. டி.’ திரைப்படம் என்பது குற்றச்சாட்டு.

ஏலியன் திரைக்கதை சாரம், ஈ டியின் மையக் கதையாக இருந்தாலும், குற்றச்சாட்டை மறுத்துவிட்டார் ஸ்பீல்பெர்க். பின்னர் சத்தியஜித் ரேவுக்கு வாழ்நாள் சாதனையைப் பாராட்டி ஆஸ்கர் விருது வழங்கப்பட்டதில் ஸ்பீல்பெர்க்குக்கு முக்கியப் பங்குண்டு என்று சொல்லப்பட்டது.

தொடர்புக்கு jesudoss.c@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x