Last Updated : 22 May, 2015 01:02 PM

 

Published : 22 May 2015 01:02 PM
Last Updated : 22 May 2015 01:02 PM

காற்றில் கலந்த இசை 5- பயணத்தில் ஒலிக்கும் பாடல்

பசுமை போர்த்தியிருக்கும் ஏதோ ஒரு மலை வாசஸ்தலத்தை நோக்கிய நீண்ட பயணம். பேருந்தின் ஜன்னல்கள் வழியே சற்று வேகமாகத் தவழ்ந்து வரும் தென்றல் உடலையும் மனதையும் வருடிச் செல்கிறது. சாலையின் இரு புறங்களிலும் படர்ந்திருக்கும் இயற்கைக் காட்சிகள் மனதை அள்ளுகின்றன.

ஏகாந்தமாகக் கண் மூடி அமர்ந்திருக்கும் உங்களைத் தாலாட்டும், தன்னிச்சையாக மனதுக்குள் ஒலிக்கும் பாடல் ஒன்று. ‘எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்…’. சுட்டெரிக்கும் வெயிலில் உங்கள் பயணம் அமைந்தாலும் உங்கள் ஆன்மாவையே குளிர்விக்கும் ஆற்றல் கொண்ட பயணப் பாடல் இது.

சில பாடல்களைக் கேட்கும்போது இருந்த இடத்திலிருந்தே கற்பனை நிலப் பகுதிகளுக்கு மனம் நம்மை அழைத்துச் சென்றுவிடும். எங்கெங்கோ சுற்றியலையும் மனம், நினைவின் அடுக்குகளில் விரவிக் கிடக்கும் மகிழ்ச்சியான தருணங்களைத் திரட்டிச் சேர்த்துக்கொண்டே செல்லும். அப்படியான பாடல்களில் ஒன்று இது.

இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம், ‘பட்டாக்கத்தி பைரவன்’. 1979-ல் வெளியான இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக சிவாஜி கணேசன் நடித்திருந்தார். தனது நாயக சகாப்தத்தின் இறுதிக் கட்டத்தில் அவர் நடித்த படங்களில் ஒன்று இது. ‘எங்கள் தங்க ராஜா’ படத்தில் ‘பட்டாக்கத்தி பைரவன்’ என்ற பெயரில் ஒரு பாத்திரத்தில் வருவார் சிவாஜி. அந்தப் படத்தின் இயக்குநர் வி.பி. ராஜேந்திர பிரசாத் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு அந்தப் பெயரே தலைப்பாகிவிட்டது.

வானத்தை வருடும் பாடல்

ஒவ்வொரு நொடியிலும் இனிமையைத் தேக்கிவைத்திருக்கும் பாடல் இது. மென்மையான கிட்டார் இசையுடன் தொடங்கும் இந்தப் பாடல் காற்றின் அலைகளில் ஒவ்வொரு நிலையாகப் பரவி வயலின் இசைக்கோவை மூலம் வானம் வரை எட்டும்.

கம்பீரமான காதல் குரலில் பாடத் தொடங்குகிறார் எஸ்.பி.பி. ‘எங்கேங்கோ செல்லும் என் எண்ணங்கள்… இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்’ என்று தொடங்கும் எஸ்.பி.பி.யின் குரலுக்கு இனிய துணையாக ஒலிக்கிறது ஜானகியின் குரல். பல்லவியின் முடிவில் ‘என் வாழ்க்கை வானில்… நிலாவே… நிலாவே’ எனும் வரியைப் பாடும்போது காற்றில் மிதந்து மிதந்து தரையிறங்கும் மயிலிறகைப் போல் இருவரின் குரல்களும் கரைந்து மறையும்.

இரண்டு சரணங்களின் தொடக்கத்திலும், “ஹா…” என்றொரு ஹம்மிங்குடன் பாடலைத் தொடரும் எஸ்.பி.பி.க்கும் ஜானகிக்கும் பரிசாக இந்த உலகத்தையே தந்தாலும் இணையாகுமா! காதல் நுண்ணுணர்வின் பாவங்களைக் குரலில் காட்டத் தெரிந்த அற்புதக் கலைஞர்கள் அல்லவா அவர்கள். பாடலில் மெல்லிய மேகங்கள் மிதக்கும் வானத்தின் கீழ் பரவிக் கிடக்கும் நிலப்பரப்புகளில் ஒவ்வொரு இடமாக இன்னிசையை நடவு செய்தபடி கிட்டார் குறிப்புகள் நகர்ந்து செல்லும். அவற்றின் மேற்பரப்பில் பரவசமூட்டும் வயலின் இசைக்கோவை படரும் உணர்வு நம்முள் பரவும்.

இரண்டாவது சரணத்துக்கு முன்னதாக வரும் நிரவல் இசையில் கிட்டாரும் புல்லாங்குழலும் சங்கேத மொழியில் முணுமுணுப்பாய்ப் பேசிக்கொள்ளும். வயலின்களின் சேர்ந்திசை அந்த உரையாடலைக் கலைத்தபடி காற்றில் பரவிச் செல்லும். வானில் சிறகடிக்கும் பறவை ஒரு கட்டத்தில் இறக்கைகளை அசைக்காமல், சிறகுகள் காற்றில் அசைய மிதந்துகொண்டே தரையிறங்கும். அந்தப் பறத்தல் அனுபவத்தைத் தரும் பாடல் இது.

கடலலையைத் தழுவும் காற்று வீசும் கடற்கரை, பரந்த புல்வெளி நிலங்கள், எல்லையற்று விரியும் பாலைவனத்தைக் கடக்கும் சாலை என்று எந்த இடத்தையும் கற்பனை செய்துகொள்ளுங்கள். உங்கள் கற்பனைக்கு ஏற்ற காட்சிகள் இந்தப் பாடலின் ஒலி வடிவத்தில் உறைந்துகிடப்பது தெரியும். ‘கல்லானவன் பூவாகிறேன்… கண்ணே உன்னை எண்ணி’ போன்ற வரிகளில் ஆன்மாவின் காதலைக் கசியவிட்டிருப்பார் கண்ணதாசன்.

வயோதிகத்தை மறைக்க முயலும் பொருந்தா உடைகளுடன், இளம் நாயகியுடன் (ஜெயசுதா) சிவாஜி பாடி ‘ஆடும்’ பாடல் இது. பாடலைக் கேட்டு ரசித்திருந்தவர்கள் இப்பாடல் படமாக்கப்பட்ட விதத்தைப் பார்த்தால் நிச்சயம் அதிர்ந்துவிடுவார்கள். இயக்குநர்களின் கற்பனை வறட்சியால் பாதிக்கப்பட்ட இளையராஜா பாடல்களில் இதுவும் ஒன்று.

வந்து சென்ற தேவதை

எஸ்.பி.பி. - ஜானகி இணை பாடும் ‘தேவதை… ஒரு தேவதை’ பாடலும் இப்படத்தில் உண்டு. நாயகியின் மெல்லிய சிரிப்பைப் போல ஒலிக்கத் தொடங்கும் புல்லாங்குழல் எதையோ கண்டு ரசித்ததுபோல் ஆச்சரியக் குறியிடும்! பிறகு கம்பீரமான வயலின் ஆர்க்கெஸ்ட்ரேஷனுடன் தொடங்கும் அந்தப் பாடல் முழுதும் புல்லாங்குழலின் ராஜ்ஜியம்தான். அற்புதமான இந்தப் பாடலில் தோன்றும் நாயகி தேவி. அவருக்கு ஜோடி ஜெய்கணேஷ் என்பது பாடலின் பெருந்துயரம். படமாக்கப்பட்ட விதத்தைச் சொல்லி அழுவானேன்!

எஸ்.பி.பி. பாடிய ‘யாரோ நீயும் நானும் யாரோ’, ஜானகி பாடிய ‘ஜில் மாலிஷ் பூட் மாலிஷ்’, எஸ்.பி.பி. – சுசீலா பாடிய ‘வருவாய் கண்ணா நீராட’ போன்ற பாடல்களும் படத்தில் உண்டு. ரசிகர்களின் நினைவிலிருந்து மறைந்துவிட்ட இந்தப் படத்திலிருந்து ஜீவன் வற்றாத ‘எங்கெங்கோ செல்லும்’ பாடல் மட்டும் இன்றும் பலரைப் பரவசப்படுத்திக்கொண்டிருக்கிறது.