Published : 29 Apr 2016 12:45 PM
Last Updated : 29 Apr 2016 12:45 PM

கலக்கல் ஹாலிவுட்: காலத்தால் அழியாத பெயர்!- பீலே

கால்பந்து உலகின் ‘காட் ஃபாதர்’ பீலேவின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு விரைவில் வெளியாகவிருக்கும் ‘பீலே: பெர்த் ஆப் அ லெஜன்ட்’ திரைப்படம் உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரசிகர்களிடம் இந்தப் படம் மேலும் ஒரு படி எதிர்பார்ப்பை உருவாக்கியிருப்பதற்குக் காரணம் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். ஆமாம்! இத்திரைப்படத்துக்கு இசையமைத்திருப்பது அவர்தான். ஸிம்பலிஸ்ட் சகோதரர்கள் இயக்கியுள்ள இப்படம் மே மாதம் 13-ம் தேதி இந்தியாவில் திரைக்கு வரவிருக்கிறது.

நிஜ வாழ்வில் நாம் கண்டு வியந்த விளையாட்டு வீரர்களின் கதைகள் படமாக்கப்படுவது இப்போது பிரபலமாகிவருகிறது. ‘மேரி கோம்’, ‘தோனி’, ‘சச்சின்’ ஆகிய விளையாட்டு வீரர்களின் பட வரிசையில் இப்படமும் இடம்பெற்றுவிடும்.

பிரேசில் நாட்டைத் தாயகமாகக் கொண்டவர் பீலே. 10 வயது முதல் 17 வயது வரையிலான அவரின் இள வயது நிகழ்வுகளையும் பீலே தன் தந்தையிடம் கொண்ட உறவையும் பிரதிபலிக்கும் படமாக உணர்ச்சிகரமான நாடகப் பாங்கில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாடு கால்பந்து உலகக் கோப்பையில் உருகுவே நாட்டிடம் தோல்வி அடைந்த நிகழ்வையும் இப்படம் சித்தரித்துள்ளது.

1950-ஆம் ஆண்டு பிரேசில் தோல்வி அடைந்ததைக் கண்டு பீலே கால்பந்து விளையாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறார். அதனால் அவர் சந்திக்கும் பல சவால்களும் இப்படத்தின் முக்கியக் கூறுகள்.

இப்படத்தில் பீலேவின் சிறு வயதுக் கதாபாத்திரங்கள் நடித்துள்ள கெவின் டி பவுலா, லியானார்டோ லீமா ஆகிய இருவரும் சிறப்பாக நடித்துள்ளதாகப் பிதாமகன் பீலேவே கூறியுள்ளார். ‘பீலே’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அவரது சொந்த ஊரான பிரேசிலில் நடைபெற்றன.

‘பீலே’ என்றால் ஹீப்ரு மொழியில் ‘அதிசயம்’ என்று பொருள். சிறு வயதிலேயே அவர் நண்பர்கள் கொடுத்த பெயர் அவரின் திறமைக்கு நன்கு பொருந்தியது. பீலே சிறு வயதில் ஏழ்மையில் வாடியது, பணம் சம்பாதிக்க ஒரு டீ கடையில் வேலை செய்தது, கால்பந்து விளையாடக் காலணி இல்லாமல் வறுமையில் வாடியபோது அவரை அனைவரும் கேலி செய்தது என அவர் கடந்து வந்த கடினமான பாதை காட்சிகளாக விரியவிருக்கிறது. பீலே தாண்டி வந்த தடைகளை சிம்பாலிஸ்ட் சகோதரர்கள் எவ்வாறு சித்தரித்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x