Published : 19 Apr 2014 09:55 AM
Last Updated : 19 Apr 2014 09:55 AM

எங்களை எல்லோரும் கறிவேப்பிலையா நினைக்கிறாங்க: யுவராஜ் வேதனை

தேசிய விருதுகள் பட்டியலில் ‘தங்க மீன்கள்’, ‘தலைமுறைகள்’ மற்றும் ‘வல்லினம்’ ஆகிய படங்களில் பணியாற்றிய தமிழக கலைஞர்களுக்கு விருது கிடைத்ததற்காக நாம் மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த மகிழ்ச்சியை நாம் இன்னும் பெருக்கிக்கொள்ளும் விதமாக மேலும் ஒரு தமிழரும் இந்த ஆண்டு தேசிய விருதை பெற்றிருக்கிறார். அவர் பெயர் யுவராஜ். சென்னையைச் சேர்ந்த யுவராஜ், ‘ஸ்வபானம்’ என்ற மலையாளப் படத்திற்காக ‘Best Re-Recordist of the Final Mixed Track’ விருதை பெற்றிருக்கிறார்.

சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோ 70எம்.எம் தியேட்டரில் பணியாற்றி வரும் அவரைச் சந்தித்தோம்.

தேசிய விருது கிடைத்த தகவலை உங்களுக்கு முதலில் யார் சொன்னார்கள்?

எனக்கு தேசிய விருது கிடைத்த தகவலை முதலில் மலையாள மனோரமாவில் இருந்துதான் சொன்னார்கள். பிறகு பல மலையாள சேனல்களில் இருந்தும் போன் செய்தார்கள். என்னைப் பலரும் மலையாளி என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் முழுக்க முழுக்க சென்னைக்காரன்.

நான் பணியாற்றிய இந்தப் படம், மலையாளத்தில் வெளியான முதல் ஆரோ 3டி படம். இயக்குநர் ஷாஜ் கருண் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அதற்காக நான் அவருக்கு நன்றி சொல்லியே ஆகணும்.

மலையாளத்தில் நான் வேலை பார்த்த பல படங்கள் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியிருக்கிறது. ‘இந்தியன் ருப்பி’, ‘ஸ்ப்ரிட்’ இப்படி பல படங்களைச் சொல்லலாம். மலையாளத்தில் முக்கிய இயக்குநரான ரஞ்சித்தின் படங்களில் நான் பணியாற்றியுள்ளேன். அவர் எனக்கு நிறைய ஊக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ்ல என்னென்ன படங்களில் பணியாற்றி இருக்கிறீர்கள்?

‘முந்தானை முடிச்சு’, ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’ உள்ளிட்ட பல ஏவிஎம் படங்களுக்கு நான் தான் டப்பிங் என்ஜினியர். கொஞ்ச நாள் பணியாற்றிய பிறகு, ஒரு வருஷம் ஆடியோவுக்கான படிப்பு படிச்சேன். ‘அவ்வை சண்முகி’, ‘காக்க காக்க’, ‘ஆட்டோகிராப்’ இப்படி நிறைய படங்களுக்கு ரெக்கார்டிங் பண்ணியிருக்கேன். முழுக்க நான் ஃபைனல் மிக்ஸ் பண்ணிய முதல் தமிழ் படம் ‘பந்தா பரமசிவம்’.

எத்தனை வருடங்களாக இந்தத் துறையில் இருக்கிறீர்கள்? உங்கள் குடும்பம் பற்றி?

30 வருடங்களாக நான் சினிமாத் துறையில் இருக்கிறேன். என் அப்பா ஏவிஎம் நிறுவனத் துல ஒரு சாதாரண புரொடக்‌ஷன் பாய் தான். அப்பாவிற்கு சாப்பாடு கொண்டு போவேன், அப்போது ஸ்டூடியோவைப் பார்த்து அந்த ஆசை வந்துச்சு. ஒரு கேமிராமேன் ஆக வேண்டும் என்பதுதான் என் முதல் ஆசை. 12ம் வகுப்பு முடிஞ்ச உடனே குடும்ப சூழ்நிலை காரணமா வேலைக்கு வந்துட்டேன்.

எங்கப்பா இறக்கும் நாளில்கூட, “ நீ வேலைக்கு போடா. தயாரிப்பாளர் கஷ்டப்பட கூடாது”னு சொன்னாரு. நான் வேலைக்கு வந்துட்டேன், மதியம் 12 மணிக்கு அவர் இறந்து போயிட்டாரு. அது தான் எனக்கு உறுத்திக்கிட்டே இருக்கு. இறக்கும்போது அவருடன் நான் கூட இல்லையே என்ற வருத்தம் இன்றைக்கும் எனக்கு இருக்கிறது.

நீங்க பணியாற்றுவது சினிமாத்துறை என்றாலும், உங்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகமாமே?

ஆமா. என்னோட பசங்க ரெண்டு பேருமே இந்திய அளவில் ஸ்கேட்டிங்கில் மெடல் வாங்கியிருக்காங்க. எனக்கு விளையாட்டுல ஆர்வம் ரொம்ப அதிகம். என் மகன் காமன்வெல்த் போவான் அப்படிங்குற நம்பிக்கை இருக்கு. நான் தேசிய விருது வாங்கப் போவேன், அந்த சமயம் இங்க என்னோட இரண்டாவது பையன் கின்னஸ் சாதனை பண்ணப் போறான். 100 பசங்க சேர்ந்து தொடர்ச் சியா 4 நாட்கள் ஸ்கேட்டிங் பண்ணப் போறாங்க.

இந்த துறைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்குதுன்னு நினைக்கறீங்களா?

இதுபத்தி நான் ரொம்ப கவலைபட்டிருக்கேன். நாங்கெல்லாம் திரைக்கு பின்னாடி பணியாற்று கிறோம். எல்லாருமே கறிவேப்பிலையா நினைக்கி றாங்க. நிறைய இளைஞர்கள் இந்த துறைக்கு வரணும். நிறைய டிவி சேனல்கள்கள் மற்றும் பத்திரிகைகள் சினிமா துறைக்கு விருது கொடுக்கிறாங்க, அதுல ஆடியோ கிராபருக்கு ஒரு விருது கூட கொடுக்க மாட்டேங்கறாங்க. எல்லாருக்கும் கொடுக்கிறீங்க, நாங்களும் திறமை காட்டுறோம்.. கொடுங்களேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x