Published : 21 Nov 2014 03:35 PM
Last Updated : 21 Nov 2014 03:35 PM

ஆர்யாதான் எனக்கு ரோல் மாடல்: நடிகர் கிருஷ்ணா நேர்காணல்

அடுத்தடுத்து இரண்டு வெற்றிகள் கொடுத்துவிட்ட கிருஷ்ணா இப்போது கவனத்துக்குரிய நாயகனாக வலம்வர ஆரம்பித்திருக்கிறார். அண்ணன் விஷ்ணுவர்தனின் இயக்கத்தில் ‘யட்சன்’ படத்தில் முதல்முறையாக நடித்தாலும் விரைவில் வெளியாக இருக்கும் ‘வன்மம்’ படத்தைப் பெரிதும் எதிர்பார்க்கிறார். “மாஸ் ஹீரோவாக ஆவதைவிட மக்களுக்குப் பிடிச்ச ஹீரோவா இருக்கணும் பாஸ்..” என்று அடக்கமாகப் பேச ஆரம்பிக்கிறார்...

அஜித், ஆர்யா என்று மாஸ் ஹீரோக்களை வைத்து வெற்றி கொடுக்கும் உங்கள் அண்ணன் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க ஏன் இத்தனை தாமதம்?

நான் மாஸ் ஹீரோ ஆகாததுதான் ஒரே காரணம். ஆனால் நான் அண்ணனை விடவில்லை. தனுஷுக்கு அவரது அண்ணன் செல்வா, ஜெயம்ரவிக்கு அவரது அண்ணன் ராஜா, இப்படி அண்ணன்கள் எல்லோரும் தம்பிகளைத் தோளில் ஏற்றிக்கொண்டு அலையும்போது நீ மட்டும் எதுக்கு என்னை டீலில் விடுறே என்றேன். உன்னை மக்களுக்குப் பிடிக்கட்டும், அப்புறம் பார்க்கலாம் என்று கறாராகச் சொல்லிவிட்டார். ‘கழுகு’, ‘யாமிருக்க பயமே’ என்று இரண்டு வெற்றிகள் கொடுத்தபிறகு இப்போது ‘யட்சன்’ படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். தகுதியை வளர்த்துக்கொண்டால் தானாக வாய்ப்பு கிடைக்கும் என்பது இதுதான்.

கழுகு படத்தில் சேரா என்ற கதாபாத்திரத்தில் நடித்தீர்கள். அது வடசென்னையில் வாழ்ந்த நிஜமான கதாபாத்திரத்தின் பெயர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அந்தப் பெயரைக் கேட்டால் வடசென்னை மட்டுமல்ல, மொத்தச் சென்னையும் நடுங்கிய காலம் ஒன்று இருந்தது. ஆனால் சே என்றால் நாம் மரியாதை செய்ய வேண்டியது மாவீரர் சேகுவேராவுக்குத்தான். இதையெல்லாம் தாண்டி, கழுகு படத்தில், மலையுச்சியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் உடல்களை, உயிரைப் பணயம் வைத்து மீட்டுத் தரும் வேலையைச் செய்யும் சேரா கேரக்டரை ரசிகர்கள் கைதூக்கி விட்டதை என்றும் மறக்க மாட்டேன். அந்தக் கதாபாத்திரத்துக்காக நிஜமாகவே உடல்களை மீட்கும் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசியதையும் 3000 அடி ஆழத்தில் இருந்த மரணப் பள்ளத்தாக்குக்குப் போய்ப் பார்த்துவிட்டு வந்த அனுபவத்தையும் மறக்கவே முடியாது.

‘யாமிருக்க பயமே‘ படம் வெற்றிபெறும் என்று எப்படி முடிவு செய்தீர்கள்?

பல ஹீரோக்கள் அந்தப் படத்தின் கதையைக் கேட்டு, இதில் ஹீரோவுக்குப் பெரிய முக்கியத்துவம் இல்லை என்று ஒதுக்கியபோதே இந்தக் கதையை நாம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். கதையில் எல்லாக் கதாபாத்திரங்களும் கதையை நகர்த்திச் செல்ல வேண்டும். அப்படி இருந்தாலே அது ரசிகர்களுக்குப் பிடிக்கிற படமாக அமைந்துவிடும். இது என்னுடைய கண்டுபிடிப்பு அல்ல.

இது என் அண்ணன் எனக்குச் சொல்லிக் கொடுத்த டெக்னிக். அதனால்தான் இந்தக் கதையைக் கேட்டதும் நிமிடத்துக்கு நிமிடம் கதை வேகமாக நகர்ந்துகொண்டே இருக்கிறதே என்று சம்பளம் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்காமல் நடிக்கப் போய்விட்டேன். என் நம்பிக்கை என்னைக் காப்பாற்றிவிட்டது.

காதல் காட்சிகள், நகைச்சுவை இவை இரண்டும்தான் உங்கள் ஏரியாவா? கதாநாயகிகளுடன் ஜாலியாகப் பழகுவதில் உங்களை ஜூனியர் ஆர்யா என்கிறார்களே?

கிருஷ்ணா என்று பெயர் வைத்த காரணமோ என்னவோ ரொம்ப ஜாலியாக இருப்பேன். போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ கோ எஜுகேஷனில் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. இதனால் பெண்களிடம் தயக்கம் எதுவுமின்றி மரியாதையுடன் எப்படிப் பழக வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன். ஜேமி (ஆர்யா) எப்போதுமே ஆண் பெண் என்ற பேதம் பார்க்காமல் பழகுவான். ஆனால் எல்லை மீறமாட்டான். அவன் எனக்கு இந்த விஷயத்தில் நல்ல ரோல் மாடல். ஆர்யாவை ஒரு ரோமியோ போலச் சித்திரிப்பதெல்லாம் மீடியா நண்பர்களின் கலாய்ப்பு. அதையும் அவன் ஸ்போர்டிவாகத்தான் எடுத்துக் கொள்வான்.

தற்போது ஆர்யாவுடன் இணைந்து ’யட்சன்’ படத்தில் நடிப்பதை எப்படி உணர்கிறீர்கள்?

ஆர்யா இன்று ஒரு பவர்ஃபுல் ஆக்டர். அண்ணனின் பட்டியல் படத்திலிருந்து அவன் எனக்கு நண்பன். யட்சன் படத்தின் படப்பிடிப்புக்குச் செல்லும்போது அண்ணன் வீட்டுக்குச் செல்வது மாதிரிதான் இருக்கிறது. படத்தின் கதை பற்றியோ அதில் என் கேரக்டர், ஆர்யா கேரக்டர் பற்றியோ நான் இப்போது மூச்சுகூட விடமுடியாது. ஆனால் எனக்கு மிக முக்கியமான படம். ஆர்யாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும் படம் என்று மட்டும் உறுதியாகச் சொல்லமுடியும்.

வன்மம் படத்தில் உங்களுடன் விஜய்சேதுபதியும் இணைந்திருக்கிறாரே?

இந்தப் படத்தில் விஜய்சேதுபதி இணைந்தது ஏதோ வியாபாரத்துக்கான ஒரு டெக்னி என்பதுபோலச் சில நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள். எனக்குப் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. படத்தின் கதையைக் கேட்ட விஜய்சேதுபதி வியந்துபோய், இந்தப் படத்தை முடித்துவிட்டு நான் அடுத்த படங்களுக்குப் போய்க் கொள்கிறேன் என்று முழுமூச்சாக நின்று ஈடுபாட்டுடன் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

அத்தனை உணர்வுபூர்வமான கதை இது. மனிதர்களுக்கு இடையிலான உறவை ஆரோக்கியமாக வைத்திருப்பது சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசும்போதுதான். வார்த்தைகள் பிசகினால் வாழ்க்கையே பிசகிவிடும் என்பதுதான் இந்தப் படத்தின் கதை. வார்த்தைகளால் உருவாகும் சகமனித வன்மம், நட்பு, காதல், குடும்பம், ஊர் என எல்லா இடங்களிலும் எப்படி ஊடுருவிப் பாய்கிறது என்பதை அழுத்தமான சம்பவங்கள் மூலம் காட்டியிருக்கிறோம். விஜய்சேதுபதிக்கு இந்தப் படத்தின் மூலமும் நல்ல பெயர் கிடைக்கும். எனக்கு இன்னும் அதிகமாகக் கிடைக்கும்.

உங்களை எந்தப் படத்திலும் கதாநாயகியைத் தொட்டுப் பேசவும் காதலிக்கவும் விடாமல் செய்கிறார்கள்?

இந்தச் சோகத்தை நானே சொல்லி அழவேண்டும் என்று நினைத்தேன். நீங்களே நினைவுபடுத்திவிட்டீர்கள். முதல்முறையாக வன்மத்தில் சுனைனாவைத் தொட்டுப் பேசிக் காதலிக்கிறேன். அவருடன் ஒரு யதார்த்தமான டூயட் இருக்கிறது. இந்தப் படத்தின் காதல் காட்சிகள் தனியே இல்லாமல் கதையின் முக்கிய அங்கமாக இருக்கும். இன்னொரு ரகசியமும் உங்களுக்குச் சொல்ல வேண்டும்.

வன்மத்தில் எனது ஜோடியாக நடித்திருக்கும் சுனைனா என்னைவிடப் பல வயது மூத்தவர். ஆனால் என்னைவிட இளமையாகத் தெரிவார். கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தாலும் அங்கேயே உடற்பயிற்சி செய்வார். தனக்கான உணவை அவரே ஸ்பாட்டில் சமைத்துச் சாப்பிடுவார். இப்படியெல்லாம் இருந்தால் அவர் 50 வயதுவரைக்கும் கூடக் கதாநாயகியாக நடிக்கலாம் போல. சுனைனா அவ்வளவு அழகு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x