Last Updated : 26 Feb, 2016 11:42 AM

 

Published : 26 Feb 2016 11:42 AM
Last Updated : 26 Feb 2016 11:42 AM

சூழல் ஒன்று பார்வை இரண்டு: கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம்

வாழ்க்கையின் கவலை மிகுந்த தருணங்களில் நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்ளும் மனநிலையை முடிந்தவரை நாம் மேற்கொள்ள வேண்டும். இந்த மனப்பாங்கைக் குழந்தைகளுடன் இணைந்து ஆடிப் பாடும் பாடல் வரிகளில் காட்டுவது திரைக் கவிஞர்களது மரபு. அம்மரபில் அமைந்த தமிழ், இந்திப் பாடல்களைப் பார்ப்போம்.

இந்திப் பாடல்.

படம்: மிலி (நாயகியின் பெயர்)

பாடல்: யோகேஷ்

பாடியவர்: லதா மங்கேஷ்கர்

இசை: எஸ்.டி பர்மன்.

பாடல்:

மைனே கஹா பூலோன் ஸே

ஹஸோ தோ வோ கில்கிலாகே ஹஸ்தியே

அவுர் யே கஹா ஜீவன் ஹை பாயீ

மேரே பாயீ ஹஸ்னே கேலியே

பொருள்:

பூக்களிடம் நான் சொன்னேன்

புன்னகை செய்வதனால் அவை

பூத்துக் குலுங்கிப் புன்னகைக்கட்டும்.

அப்பொழுது இவர்கள் (குழந்தைகள்) சொன்னார்கள்

வாழ்க்கை என்பதே புன்னகைக்கவே என் சகோதரர்களே

சூரியன் சிரித்தால் (ஒளி) கிரணங்களாகச் சிதறும்

சிரித்தான் சூரியன் சிதறிய செந்நிறக் கிரணங்களால்

அழகாய் ஆகியது இப்பூமி.

அப்பொழுது சொன்னேன் கனவுகளிடம், செம்மையாக்கினால்

சிரித்துக்கொண்டு அதைச் செய் என

இவர்கள், வாழ்க்கையே அலங்கரிப்பதுதானே என்றார்கள்

மாலைப் பொழுது சிரித்தது ஒரு மணப்பெண் போல

நீல வானிற்குப் பொன்னிறம் போர்த்தியது போல

நிறைத்தது அச்சூழலை.

நிறங்களுடன் செல்வதாயின் இந்த உலகம் முழுதும்

நிறையட்டும் எழில் நிறங்களுடன் எனச் சொன்னேன்.

இவர்கள் வாழ்க்கை என்பதே எழில் வழங்கத்தானே என்றனர்

பருவ காலம் என்னைப் பார்த்தது ஒரு நாள்

நில் நில் விளையாடு நீ என்னோடு என்றேன்

நின்றது பருவ காலம் ஆனால் நிசப்தமாக

செல்வதாயின் என்னோடு செல்ல வேண்டும்

என்னைப் போல எனச் சொன்னேன்

இவர்கள் வாழ்க்கை என்பதே செல்லுவதுதானே சகோதரா

ஓ சகோதரா என்றார்கள்.

இந்தி மொழிக்கே உரிய சிறப்பாக விளங்கும் சிறு சிறு சொற்பதங்களால் அமைந்த இந்தப் பாடலுக்கு இணையாகச் சிறிய, எளிய அன்றாடத் தமிழ் வார்த்தைகளால் மனித மன இயல் தத்துவத்தை வெளிப்படுத்தும் கண்ணதாசனின் கவி வரிகளைப் பார்ப்போம்.

புகழ் பெற்ற ஆங்கிலப் படமான ‘sound of Music’ என்ற படத்தின் டைட்டில் மெட்டில் அமைந்ததாகக் கூறப்பட்ட இப்பாடல், அதன் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனின் சிகரத்தில் ஒரு முத்தாகத் திகழ்கிறது.

படம்: சாந்தி நிலயம்

பாடல்: கண்ணதாசன்

பாடியவர்: பி.சுசீலா

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

கடவுள் ஒரு நாள் உலகைக் காணத் தனியே வந்தாராம்

கண்ணில் கண்ட மனிதரையெல்லாம் நலமா என்றாராம்

ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்

ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்

படைத்தவனோ உடனே சிரித்துவிட்டான்

கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது

காசும் பணமும் ஆசையும் இங்கே யார் தந்தது

எல்லை இல்லா நீரும் நிலமும் நான் தந்தது

எங்கும் சொந்தம் என்னும் எண்ணம் ஏன் வந்தது

இறைவனுக்கே இது புரியவில்லை

மனிதனின் கொள்கை தெரியவில்லை

(ஒரு மனிதன்...)

பள்ளிக்கூடம் செல்லும் வழியில் இறைவன் நின்றானாம்

பச்சை குழந்தை மழலை மொழியில் தன்னைக் கண்டானாம்

உள்ளம் எங்கும் செல்லம் பொங்கும் அன்பைக் கண்டானாம்

உண்மை கண்டேன் போதும் என்று வானம் சென்றானாம்

(ஒரு மனிதன்...)