Last Updated : 23 Nov, 2015 03:20 PM

 

Published : 23 Nov 2015 03:20 PM
Last Updated : 23 Nov 2015 03:20 PM

சூழல் ஒன்று பார்வை இரண்டு: முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு?

ஐம்பெரும் இயற்கை சக்திகளாக நாம் போற்றுவது நிலம், நீர், காற்று, தீ மற்றும் ஆகாயம். இவற்றின் பௌதிக இயல்புகளையும் தாண்டி நமது செயல்கள் மற்றும் உணர்வுகளுடன் ஒப்பிட்டுப் பாடப்படுவது கவி மரபு. இந்த மரபை அடியொற்றி இரண்டு மழைப் பாடல்களைப் பார்ப்போம்.

இந்திப் பாட்டு.

படம்: ஷோர் (சத்தம்/ இரைச்சல்),

பாடலாசிரியர்: இந்திரஜித் சிங் துளசி,

பாடியவர்: முகேஷ், இசை: லட்சுமிகாந்த் பியாரிலால்:

பாடல்:

பானிரே பானி தேரா ரங்க் கைஸா,

ஜிஸ்மே மிலா தோ லகே உஸ் ஜைஸ்ஸா

பானிரே பானிரே ஓ பானிரே பானிரே பானிரே



பொருள்:

தண்ணீரே ஓ தண்ணீரே உன் வண்ணம் எப்படி

எதில் கலந்தாயோ அதுவாக நீ மாறுவாய் அப்படி

தண்ணீரே ஓ தண்ணீரே

இப்படியும் உள்ளது இவ்வுலகின் சிலரது வாழ்க்கை

உலர்ந்ததை உண்டு குளிர்ந்ததைக் குடிக்கும் செய்கை

நிறையும் உன் ஒரு சொட்டு நீரில் இந்நில மக்களின்

குறைகள் பலவும் அவர் கொள்வர் அமைதி - ஓ மழையே

(தண்ணீரே ஓ தண்ணீரே)

பசித்த மானிடனின் பசியும் அவன் தாகமும் போல

கங்கையில் விழும்போது நீ புனித கங்கை நீராகிறாய்

தங்கும் மேகத்துடன் கலந்து பொங்கு மழையாகிறாய்

(ஒருபுறம் மழையை ரசிக்கும்)

தீயில் விரிந்து தீயை அணிந்து தடுமாறும் இளமை

(மறுபுறம் அதே மழையினால்)

சாயும் மதில்கள் சரியும் சுவர்கள் ஓ மழையே

நீ வாழ்வை மாற்றுவாய் வீழும் சுமையாய் அங்கே

தண்ணீரே ஓ தண்ணீரே உன் வண்ணம் எப்படி தாம்

எண்ணியபடி இவ்வுலகைப் படைத்த இறைவன் அப்படி

ஒவ்வொரு காட்சியும் ஒளிபெறும் வண்ணம்

உள்ளது மழையே உன் கைவண்ணம்

(நீ நீராய்) கொட்டும்போது கிட்டாத இவ்வெழில் வண்ணம்

மொட்டுகள் மலர்ந்து வனங்கள் முகிழ்கும் செய்தி

மெட்டுகள் வந்து நமக்கு மெலிதாய் உணர்த்தும்

தண்ணீரே ஓ தண்ணீரே உன் வண்ணம் எப்படி - இந்த

மண்ணில் வாழ்வோம் ஆண்டுகள் நூறு என நம்பும்படி

மழையை இரு விதமான கோணங்களில் மனோஜ்குமார் காண்பதாக அமைந்த இப்பாடல் இன்றும் மழைக்காலங்களில் மும்பையில் ஒலிக்கப்படுகிறது. மிக அழுத்தமான கதையம்சம், முகேஷின் உருக்கமான குரல், தத்துவார்த்தமான வரிகள் ஆகியவற்றுடன் கூடிய பல பாடல்கள் நிறைந்த ஷோர் என்ற இந்தத் திரைப்படம் மனோஜ் குமாரை ஒரு லட்சிய நடிகராக ஆக்கியதில் பெரும் பங்கு வகித்தது.

சமூகத்தின் அவலங்களை எளிய வார்த்தைகள் மூலம் எல்லோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் பாடல் எழுதியவர் மருதகாசி. மழையைப் பற்றி அவரின் அழகான உவமேயங்கள் கொண்ட இந்த மழைப் பாடலைப் பாடி நடித்த வசீகரமான குரல் வளம் கொண்டவர் டி.ஆர். மகாலிங்கம்.

படம்: ஆடவந்த தெய்வம், பாடலாசிரியர்: ஏ. மருதகாசி,

பாடியவர்கள்: டி.ஆர். மகாலிங்கம், பி.சுசீலா, இசை: கே.வி. மகாதேவன்

பாடல்:

சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே- மழை

கொட்டு கொட்டுனு கொட்டுது பாரு அங்கே

கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே-அவன்

கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர் துளி போலே

சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

முட்டா பயலே மூளை இருக்கா என்று ஏழை மேலே

துட்டு படைச்ச சீமான் அள்ளி கொட்டுற வார்த்தை போலே

கொட்டு கொட்டுனு கொட்டுது பாரு அங்கே

முழுக்க முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு

உன் முக்காட்டை நீக்கு தலை ஈரத்தைப் போக்கு

இருக்க இடம் கொடுத்தா என்னையே நீ தாக்குறே

குறுக்கு மூளை பாயுறே கோணல் புத்தியை காட்டுறே

பழுக்கப் பழுக்க உலையில் காய்ச்சும் இரும்பு போலவே

முகம் சிவக்குது இப்போ அது சிரிப்பது எப்போ

குளிச்சு முழுகிவிட்டு குளிர்ச்சியாய் ஓடி வா

செவந்து போன முகத்தில் சிரிப்பை நீயும் காணலாம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x