Last Updated : 19 Sep, 2014 04:48 PM

 

Published : 19 Sep 2014 04:48 PM
Last Updated : 19 Sep 2014 04:48 PM

தூங்கிக் கிடக்கும் நீதி

மூன்று மணிநேரம் திரையில் ஓடும் கதையின் அடிப்படை உணர்வை மூன்று நிமிடம் ஒலிக்கும் பாடல் வெளிப்படுத்த முடியுமா? சில திரைப்பாடல்கள் அதை அற்புதமாகச் சாதித்து விடுகின்றன. இவ்வகைப் பாடல்களை ‘உணர்வுகளின் ஊர்வலம்’ என்று கூறிவிடலாம்.

அன்புக்குரிய மனைவியுடன் கலப்படமற்ற பாசத்துடன் பழகும் நண்பனைப் பலர் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. திரை மட்டும் விதிவிலக்காக இருக்குமா? நண்பனைக் கோபித்துக் கொள்ளாமல் தன் மனைவி மீது சந்தேகப்படும் கதாநாயகன், காலம் கடந்து வருந்தும் உணர்வும், அம்மாதிரி சந்தர்ப்பங்களில் தன்னைச் சரியாகப் புரிந்துகொள்ளாத நண்பனை எண்ணி வருந்தும் கதாநாயகனின் உணர்வும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.

இவ்வாறான உணர்வுச் சங்கமத்தின் இரு அம்சங்களை அழுத்தமாக வெளிப்படுத்தும் இந்தி, தமிழ்த் திரைப் பாடல்கள் அற்புதமானவை.

ராஜேஷ் கன்னா, மும்தாஜ்-சஞ்சீவ் குமார் ஆகியோருடன் இணைந்து நடித்த ‘ஆப் கி கசம்’ (உன் மேல் ஆணை) என்ற வெற்றிப் படத்தில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது. ‘வாழ்வே மாயம்’ என்ற மலையாள வெற்றிப் படத்தின் தழுவல் இது. இப்படத்தின் இப்பாடலை எழுதியவர் ஆனந்த் பக்ஷி. இசை அமைப்பாளர் ஆர்.டி. பர்மன்.

பாடல்:

ஜிந்தகி கா சஃபர் மே குஜர் ஜாத்தே ஜோ மகாம்

வோ ஃபிர் நஹீன் ஆத்தே, வோ ஃபிர் நஹீன் ஆத்தே

ஃபூல் கில்த்தே ஹைன் லோ மில்த்தே ஹைன்

லேக்கின் பர்ஜா மே ஜோ ஃபூல் முர்ஜாத்தே ஹைன்

வோ பஹாரோன் ஆனே ஸே கில்த்தே... நஹீன்

பொருள்:

வாழ்க்கைப் பயணத்தில் தொலைந்துவிட்ட

நொடிக் கண்ணிகள் மீண்டும் வருவதில்லை

மீண்டும் வருவதில்லை.

பூக்கள் மலருகின்றன.

மனிதர்கள் கிடைக்கின்றனர்

ஆனால், மொட்டிலேயே

கருகிவிடும் பூக்கள்

பூக்கும் பருவம் வருவதால் மலர்வதில்லை.

சிலர் ஒரு தருணத்தில் (மற்றவர்களுடன்)

பிணங்கிவிடுகிறார்கள்

ஆயிரம் பேர் பின்னர் (நம்மிடம்) வந்தாலும்

அவர்களின் சந்திப்பு (மீண்டும்) கிடைப்பதில்லை

வாழ்நாள் முழுவதும் அவர்களின் பெயரைக்

கூவி அழைத்தாலும் அவர்கள்

மீண்டும் வருவதில்லை.

மீண்டும் வருவதில்லை.

கண்கள் ஏமாற்றும். கண்ணை நம்பாதே.

கேள் நண்பன் மீது கொள்ளும் சந்தேகம்

நட்புக்கு விரோதமாகும்.

நம் உள்ளத்தில் இது குடி புக

இடம் அளிக்காதீர்கள்

நாளை அல்லல்பட நேரிடும்

தடுத்து நிறுத்த வேண்டியவர்களை (தடுக்காமல்)

நோகடித்துப் போகவிடாதீர்கள்

அப்புறம் விரும்பும்வரை

ஆயிரம் அன்பு வணக்கங்களை அனுப்பினாலும்

அவர்கள் வர மாட்டார்கள். வர மாட்டார்கள்

காலை வருகிறது. இரவு கழிகிறது.

இப்படியே காலம் சென்றுகொண்டிருக்கிறது

நிற்பதில்லை ஒரு நிலையில் அது

முன்னோக்கிப் புறப்பட்டுச் செல்கிறது.

மனிதர்கள் சரியாகப் பார்க்க முடிவதற்குள்

திரையில் காட்சிகள் மாறிவிடுகின்றன.

ஒரு முறை கடந்து செல்லுகின்ற பகல்-இரவு

காலை- மாலை மீண்டும் வருவதில்லை

அவை மீண்டும் வருவதில்லை.

வாழ்க்கைப் பயணத்தில் தொலைந்துவிட்ட

நொடிக் கண்ணிகள் மீண்டும் வருவதில்லை

மீண்டும் வருவதில்லை.

இதே உணர்வுகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் சிவாஜி கணேசன் நடித்த ‘பார்த்தால் பசி தீரும்’ படத்தின் பாடல் வெளிப்படுத்துகிறது. கண்ணதாசன் எழுதி, எம்.எஸ்.வி. இசையில் டி.எம். சௌந்தரராஜன் பாடிய பாடல் இது.

உள்ளம் என்பது ஆமை - அதில்

உண்மை என்பது ஊமை

சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்

தூங்கிக் கிடப்பது நீதி

சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்

தூங்கிக் கிடப்பது நீதி

உள்ளம் என்பது ஆமை - அதில்

உண்மை என்பது ஊமை

தெய்வம் என்றால் அது தெய்வம் - அது

சிலை என்றால் வெறும் சிலை தான்

தெய்வம் என்றால் அது தெய்வம் - அது

சிலை என்றால் வெறும் சிலை தான்

உண்டென்றால் அது உண்டு

இல்லை என்றால் அது இல்லை

இல்லை என்றால் அது இல்லை

உள்ளம் என்பது ஆமை - அதில்

உண்மை என்பது ஊமை

தண்ணீர் தணல் போல் எரியும் - செந்

தணலும் நீர் போல் குளிரும்

தண்ணீர் தணல் போல் எரியும் - செந்

தணலும் நீர் போல் குளிரும்

நண்பனும் பகை போல் தெரியும் - அது

நாட்பட நாட்படப் புரியும்

நாட்பட நாட்படப் புரியும்

உள்ளம் என்பது ஆமை - அதில்

உண்மை என்பது ஊமை

சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்

தூங்கிக் கிடப்பது நீதி

உள்ளம் என்பது ஆமை - அதில்

உண்மை என்பது ஊமை.

இரண்டு பாடல்களுமே ஒரே விதமான கதைப் பின்னணியைக் கொண்டிருப்பதோடு, வாழ்வின் பல்வேறு தருணங்களுக்கும் மனச் சிக்கல்களுக்கும் பொருந்தும்வண்ணம் இருப்பதையும் உணர முடியும். திரைப்படத்துக்குப் பாடல் எழுதும் கவிஞன் வாழ்வோடு கொள்ளும் நெருக்கமான உறவுதான் இத்தகைய தன்மையைச் சாத்தியப்படுத்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x