Published : 13 Jul 2018 10:28 AM
Last Updated : 13 Jul 2018 10:28 AM

திரைப்பள்ளி 12: காலா இருக்காரா, இல்லையா?

திரைக்கதையின் அடிப்படையான மூன்று அங்க வடிவத்தில் மூன்றாவது அங்கம் ‘முடிவு’. திரைக்கதையின் இறுதிப் பகுதி என்பதால் நாம் ‘முடிவு’(The End) என்று சொல்கிறோம். ஆனால், திரைக்கதை ஜாம்பவான் சித் ஃபீல்ட் அதை ஏற்க மறுக்கிறார். கிளைமாக்ஸ் என்பது திரைக்கதையின் முக்கியப் பிரச்சினைக்கான பதிலாக அமைவது. அதனால் “அதை முடிவு என்று கூறாமல் ‘தீர்வு’(Resolution) என்றுதான் சொல்லவேண்டும்” எனக் கறாராக அறிவுறுத்துகிறார். அவர் காரணத்தோடுதான் இப்படிக் கூறுகிறார்.

முதன்மைக் கதாபாத்திரம் எதிர்கொள்ளும் கதையின் மையப் பிரச்சினை அல்லது முக்கியப் பிரச்சினையை, துணிவுடன் எதிர்கொண்டு போராடி அதைத் தீர்க்கப் பார்க்கிறது. முக்கியப் பிரச்சினை என்பது முதன்மைக் கதாபாத்திரத்தின் லட்சியம் எனில், அதை அதனால் அடைய முடிந்ததா இல்லையா, அந்த லட்சியத்தில் அதற்கு ஏற்பட்ட இறுதிக்கட்ட இழப்புகள் என்ன, அந்த இழப்புகளுக்குப் பிறகாவது லட்சியம் அடையப்பட்டதா, இல்லையா என்பதைப் பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ளும்விதமாகத் தீர்வு சொல்லப்பட்டிருக்க வேண்டும். ஏற்றுக்கொள்ளும்விதமாக ஒரு தீர்வு இருந்தது என்றால் அது பார்வையாளர்களை எந்தவிதத்திலும் குழப்பாத தீர்வு என்ற முடிவுக்கு வந்துவிடலாம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட தீர்வுகளைக்கூடப் பார்வையாளர்கள் ஏற்றுக்கொண்டுவிடலாம். அதற்கு மிகச் சிறந்த உதாரணம்: கே.பாக்யராஜின் ‘ஒரு கைதியின் டைரி’. குழப்பமான உதாரணம்: பா.இரஞ்சித்தின் ‘காலா’. இந்த இரண்டு தீர்வுகளையும் பார்க்கும் முன்பு. ‘லைஃப் ஆஃப் பை’யின் முதன்மைக் கதாபாத்திரங்களான பையும் ரிச்சர்ட் பார்க்கர் புலியும் போராட்டத்தின் இறுதியில் எதிர்கொண்ட தீர்வை ஒரு நோட்டம் விட்டுவிட்டுத் தொடருவோம்.

கலவரம் ஏற்படுத்திய களம்

மீளவே முடியாத நீர்ப்பரப்பாக நீளும் கடற்பரப்பே, ‘லைஃப் ஆஃப் பை’யின் கலவரம் மிக்க கதைக்களம். கண்ணுக்கெட்டிய தூரம்வரை கரையோ கப்பல்களோ தெரியாத தண்ணீர் சூழ்ந்த கொடூரத் தனிமையை ரிச்சர்ட் பார்க்கர் என்ற புலியை சக பயணியாக ஏற்று, போக்கிக்கொள்கிறான் பை. முரண்பாடு மிக்க இந்தத் தோழமையுடன் 277 நாட்களைக் கடலில் கழிக்க, தன்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் தன்னைக் கைவிடாத கடவுளே காரணம் என்று ஆழமாக நம்புகிறான் பை. புலியை வழித்துணையாக அனுப்பியதும் அவர்தான் என நம்புகிறான்.

உணவின்றி, உடல் இழைத்து, தோல் கறுத்து மெக்சிகோவில் கரைசேர்கிறான். படகு தரைதட்டியதும் தட்டுத்தடுமாறி கரையில் விழும் பை, தனது கன்னத்தை ஈரமான கடற்கரை மணலில் வைத்தபோது, “கடவுளின் கன்னத்துடன் வைத்துக்கொண்டதுபோல் இருந்தது” என்கிறான். இப்போது எழுந்து நடக்கச் சக்தியற்று விழுந்துகிடக்கும் பையைப் படகிலிருந்து குதிக்கப்போகும் புலி என்னசெய்யப்போகிறது என்பதே பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு.

ஆனால் ரிச்சர்ட் பார்க்கர், விழுந்துகிடக்கும் பையின் மீது தனது உடல் பட்டுவிடாதவாறு தாண்டிக் குதித்து சோம்பல் முறிக்கிறது. பின் கடற்கரையை ஒட்டியிருக்கும் காட்டின் தொடக்கப்பகுதியில் இருக்கும் புதரை நோக்கி மெல்ல நடந்து செல்கிறது. பைக்கு ரிச்சர்ட் பார்க்கரைப் பிரிய மனமில்லை. புலி ஒருமுறை தன்னைத் திரும்பிப் பார்த்து, இருவருக்கும் இடையிலான உறவை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கிறான். ஆனால், பைக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. காட்டை உற்றுநோக்கும் புலி தனக்கான வாழ்விடம் கிடைத்துவிட்டதை உறுதிசெய்துகொண்டு புதருக்குள் சென்று மறைந்துபோகிறது.

இந்த இடத்தில் பைக்கும் ரிச்சர்ட் பார்க்கருக்குமான உறவு எப்படிப்பட்டது, உண்மையில் அந்த இரு கதாபாத்திரங்களுக்கும் இடையில் உறவு முகிழ்த்ததா இல்லையா என்பதைப் பார்வையாளர்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறார் திரைக்கதாசிரியர். இந்த முடிவில் குழப்பம் ஏதுமில்லை. பை எதிர்பார்த்ததுபோலவே அந்தப் புலி திரும்பிப் பார்த்திருந்தால் அது ‘க்ளிஷே’ மட்டுமல்ல; அந்தத் திரைக்கதை முன்வைக்கும் ஆன்மிகத்தை மலினப்படுத்துவதாகவும் அமைந்துவிடும்.

பாக்யராஜின் தன்னம்பிக்கை

தன் குருநாதர் பாரதிராஜாவுக்காக பாக்யராஜ் எழுதிய திரைக்கதையே ‘ஒரு கைதியின் டைரி’. அதன் கிளைமாக்ஸை மட்டும் தனது கற்பனைக்கு ஏற்ப மாற்றி எடுத்துவிட்டார் பாரதிராஜா. அதாவது வீரசிவாஜியின் சிலையைப் போல் அச்சுஅசலாக வேடமிட்டு, அதைத் திறந்துவைக்க வரும் வில்லனைக் கொன்று, முதன்மைக் கதாபாத்திரம் பழிதீர்த்துக்கொள்வதே பாரதிராஜாவின் கிளைமாக்ஸ். அதைத் தென்னிந்திய ரசிகர்கள் கொண்டாடிவிட்டார்கள். ‘ஒரு கைதியின் டைரி’யை இந்தியில் இயக்கும் வாய்ப்பு பாக்யராஜுக்கு அமைந்தபோது அமிதாப்புக்குக் கதை சொல்லி அவரை அசத்தினார். கூடவே ஒரு அன்பான நிபந்தனையும் விதித்தார். “ஒரிஜினல் ஸ்கிரிப்டில் இருக்கும் கிளைமாக்ஸைதான் இந்திக்கு எடுப்பேன்.” என்றார்.

ஆனால், தமிழ்ப் படத்தைப் பார்த்த அமிதாப், பாரதிராஜா உருவாக்கிய அதே கிளைமாக்ஸையே இந்தியிலும் எடுக்க வேண்டும் என்று அடம்பிடித்தார். படத்தின் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் ஏன் சண்டைப் பயிற்சியாளர் வீரூ தேவ்கன் (அஜய் தேவ்கனின் அப்பா) உட்பட அனைவரும் அமிதாப் பக்கம் நின்றனர். பாக்யராஜ் விடவில்லை.

“எனது கிளைமாக்ஸை முதலில் எடுத்துப் படத்தைப்போட்டுப் பார்ப்போம்; அனைவருக்கும் பிடித்தால் சரி, இல்லாவிட்டால் தமிழ்ப்பட கிளைமாக்ஸையே எடுத்துத்தருகிறேன்” என்று கூற, பாக்யராஜின் தன்னம்பிக்கையைப் பார்த்து, அமிதாப் தனது பிடிவாதத்தைத் தளர்த்திக்கொண்டார். பாக்யராஜ் கற்பனையில் உருவான பாதாளச் சாக்கடைச் சண்டைக்காட்சியே எடுக்கப்பட்டது. அதைப் பார்த்த அமிதாப் உள்ளிட்ட அனைவரும் தமிழ் கிளைமாக்ஸ் வேண்டாம் என்றார்கள். அமிதாப்புக்கு அது மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தனது தீர்வை இந்திப் பார்வையாளர்கள் ஏற்பார்கள் என்ற, பாக்யராஜ் எனும் திரைக்கதை எழுத்தாளரின் தன்னம்பிக்கை வெற்றிபெற்றது.

இருக்கிறாரா, இல்லையா?

நகரங்களைத் தங்கள் வியர்வையால் கட்டியெழுப்புகிறவர்கள் விளிம்புநிலை மக்கள். ஆனால், அவர்கள் உருவாக்கிய நகரங்களின் ஒதுக்குப்புறமாக வாழும்போது மூக்கை மூடிக்கொண்டு கடந்து சென்றவர்கள், அவர்கள் வாழும் நிலத்துக்கான மதிப்பு உயர்ந்துவிடும்போது வளர்ச்சி என்ற பெயரால் அதைப் பிடுங்கிக்கொள்ள வருகிறார்கள். நிலத்துக்கான உரிமையில் அதிகார வர்க்கத்துக்கு எதிரான சாமானியர்களின் அரசியலை முன்வைத்த படம் ‘காலா’. கொஞ்சம் மசாலா தூவியிருந்தாலும் ஒரு உச்ச நட்சத்திரத்தைக் கொண்டு, இரஞ்சித் உருவாக்கிய ‘காலா’ ரஜினியின் படப்பட்டியலில் கௌரவமான படம். மூன்று அங்க முறையை மீறாத திரைக்கதை.

அதில் கவனிக்கத்தக்க ஒன்றாகப் படத்தின் தீர்வை அமைத்திருந்தார் திரைக்கதையை எழுதியிருந்த இரஞ்சித். காலா இறந்துவிட்டாரா இல்லையா என்பதைக் குறிப்பிடாமல் காலா பற்றிய தாராவி மக்களின் நம்பிக்கையாக, காலாவின் இருப்பு சித்தரிக்கப்படுகிறது. காலா இருப்பதாக நம்பும் மக்களின் நம்பிக்கையைப் பார்க்கும் நிலவெறி கொண்ட வில்லனின் கண்களுக்கு காலா மக்களோடு மக்களாக அங்கே இருப்பதுபோலவே தெரிகிறது. சர் ரியலிஸ்டிக் தன்மையிலான இந்த இறுதிக் காட்சியில் தோன்றி மறையும் காலா, உண்மையில் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பது முக்கியக் கேள்வி. படத்தின் தீர்வு சொல்ல வருவதோ, காலா இருக்கிறார் என்று நினைப்பவர்களுக்கு இருக்கிறார். இல்லை என்று நினைப்பவர்களுக்கு இல்லை.

தொடக்கம், நடுப்பகுதி, முடிவு என்ற தீர்வு ஆகிய இந்த மூன்று அங்கங்களிலும் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொண்ட நாம், அடுத்து ஒரு அங்கத்திலிருந்து அடுத்த அங்கத்துக்குக் கதையை நகர்த்திச் செல்லும் திரைக்கதையின் கண்ணிகள் எவையென அடுத்த வகுப்பில் அலசுவோம்.

தொடர்புக்கு: jesudoss.c@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x