Published : 05 Jul 2018 02:57 PM
Last Updated : 05 Jul 2018 02:57 PM

திரைப் பள்ளி 11: கடல்.. புலி.. பசி!

ணிக சமரசங்கள் ஏதுமின்றி ‘வீடு’, ‘சந்தியாராகம்’ ஆகிய இரண்டு உலக சினிமாக்களை தந்த திரைமேதை பாலுமகேந்திரா. அவரது குரலோடு திரைப்பள்ளிக்குள் நுழைவோம். ஒரு தரமான திரைப்படம் மிகவும் சுவாரசியமானது. திரைக்கதையின் முக்கியப் பிரச்சினையோடு பார்வையாளர்களை ஒன்றச் செய்வது. முக்கியப் பிரச்சினையுடன் ஒன்றச் செய்துவிட்டு, நடனம், பொருந்தா நகைச்சுவை, சண்டைக்காட்சி எனத் திரை அனுபவத்தின் தொடர்பை இடையிடையே அறுத்துவிடும் அம்சங்கள், திரைக்கதையில் செய்யப்பட்டிருக்கும் கலப்படம் எனலாம். இது குறித்து பாலுமகேந்திரா கூறியிருப்பதைப் பாருங்கள்.

வியாபாரமும் வியாபாரியும்

“ கன்றுக் குட்டிக்கான பாலைக் கறந்து விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று ஒருவன் நினைத்த மாத்திரத்திலேயே அவன் வியாபாரியாகிறான். அதுபோல, தன் பணத்தை சினிமாவில் போட்டு லாபம் பார்க்கலாம் என்று நினைத்த மாத்திரத்திலேயே ஒருவன் சினிமா வியாபாரியாகிறான்.

தான் விற்பனை செய்யும் பாலில், ஒரு சொட்டுத் தண்ணீர் கூடக் கலப்பதில்லை என்ற திடசங்கல்பத்தில் ஒரு பால் வியாபாரி. லிட்டருக்கு 250 மில்லி தண்ணீர் கலக்கலாம் என்ற எண்ணத்தில் இன்னொரு பால் வியாபாரி. லிட்டருக்குப் பாதிக்குப் பாதி தண்ணீர் என்ற முடிவில் மூன்றாவது வியாபாரி. அவனவன் மனநிலைக்கு ஏற்ப அல்லது பணம் பண்ணும் ஆசைக்கு ஏற்ப பால் சுத்தமாக அல்லது கலப்படமாக நமக்குக் கிடைக்கிறது. சினிமா வியாபாரமும் அப்படித்தான்.

தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அவரவர் மனநிலைக்கேற்ப சமரசங்கள் செய்துகொள்கிறார்கள். ‘தரமான சினிமா மட்டுமே தருவேன்’ என்று ஒரு தயாரிப்பாளர், அல்லது இயக்குநர். ‘நல்ல படம் தருவேன் ஆனால் வியாபாரம் கருதி அதில் கொஞ்சம் ‘ஐட்டங்களும்’ வைப்பேன்’ என்ற மனநிலையில் இன்னுமொரு தயாரிப்பாளர் அல்லது இயக்குநர். ‘படம் எடுப்பேன், ஆனால் அது வியாபார நோக்கத்தில் மட்டுமே. எனவே எனது படத்தில் எளிதில் விலைபோகக்கூடிய அம்சங்கள் நிறைய இருக்கும்’ என்ற முடிவுடன் மூன்றாவது தயாரிப்பாளர்.

இப்படியாகப் பால் வியாபாரம் செய்ய வருபவரின் நோக்கத்தைப் பொறுத்து, பாலின் தரம் அமைவதைப் போல, படம் எடுக்க வருபவரின் நோக்கத்தைப் பொறுத்தே படத்தின் தரம் அமையும்.” என்கிறார்.

06chrcj_balumahindra பாலுமகேந்திரா நடுப்பகுதியின் போராட்டம்

திரைக்கதை வடிவத்தின் இரண்டாவது பகுதி, முதன்மைக் கதாபாத்திரம் தனது பிரச்சினைக்காக போராடும் பகுதி. முக்கியப் பிரச்சினைக்கான சம்பவம் நிகழ்ந்தபிறகு, அதைத் துணிவுடனோ, பதுங்கியிருந்தோ அல்லது புத்திசாலித்தனமாகவோ பிரச்சினையை எதிர்கொள்வதால்தான் இதை confrontation என்று அழைக்கிறார்கள்.

முதன்மைக் கதாபாத்திரமாகிய கதாநாயகனின் பிரச்சினை தெரிந்துவிட்டால் (நாயகியாகவும் இருக்கலாம்), அதை நாயகன் எப்படி எதிர்கொள்ளப் போராடுகிறான் என்பதைச் சித்தரிக்க நாயகனின் கதாபாத்திர வார்ப்புக்கு ஏற்ப தர்க்கத்துடன் கூடிய தடைகளை உருவாக்கி திரைக்கதாசிரியர் போராட்டத்தை சுவாரசியப்படுத்துகிறார்.

பிரச்சினையின் தொடக்கம்

‘லைஃப் ஆஃப் பை’ படத்தில் நாயகன் பையின் குடும்பம் ஒரு ஜப்பானிய கார்கோ கப்பலில் பயணிக்கிறது. பின்னால் நடக்கப்போகும் முக்கிய சம்பவத்துக்கு ஒரு முன்னோட்ட அறிகுறியைப்போல (Prelude), முதல்நாள் பயணத்தில், கப்பலின் கிச்சன் பகுதியில் கசப்பான அனுபவத்தை பையின் குடும்பம் எதிர்கொள்கிறது. பையின் குடும்பத்தினர் சைவ உணவு உண்பவர்கள். இருந்தும் கப்பலின் சமையல்காரர் அசைவ உணவைத்தான் உண்டாக வேண்டும், இங்கே சைவ உணவு கிடையாது என்று கடுகடுக்கிறார். “வாழ வழியில்லாத பிச்சைக்காரங்க சாப்பாட்டைக் குறைசொல்ல வந்துட்டாங்க” என்று சைவ உணவு கேட்கும் பையின் குடும்பத்தை அவர் வசைபாட, அங்கே சலசலப்பு உருவாகிறது.

நான்காம் நாள் பயணத்தின் இரவில் புயலில் சிக்கிக்கொள்ளும் கப்பல் பையின் கண் முன்னால் மூழ்குகிறது. எதிர்பாராதவிதமாக நாயகன் பை, உயிர்காப்புப் படகில் தப்பிக்கிறான். ஆனால் படகில் அவன் மட்டும் இல்லை என்பது அவனுக்குப் புரிகிறது. விலங்குகள் அடைக்கப்பட்டிருந்த கூண்டுகள் திறந்துகொண்டதில், அந்த வங்கப் புலி படகில் இருப்பதைப் பார்த்ததும் அவன் தன்னைக் காத்துக்கொள்ளும் போராட்டத்தைத் தொடங்குகிறான்.

படகில் இருந்த விலங்குகளுக்கு இடையிலான வாழ்க்கைச் சுழற்சியின் இறுதியில் புலி மட்டுமே எஞ்சியிருக்கிறது. இப்போது பை எதிர்கொள்வது மூன்று பிரச்சினைகளை. ஒன்று பசி மற்றும் தாகம். அடுத்து தன்னைப்போலவே பசியுடன் இருக்கும் புலிக்கு, நாம் உணவாகிவிடக்கூடாதே என்ற தவிப்பு, அதனால் படகில் புலியுடன் பயணிக்க முடியாத நிலை.

கடல்.. புலி.. பசி

இந்த மூன்று பிரச்சினைகளையும் பை எப்படி எதிர்கொண்டான்? உயிர்காப்புப் படகில் அவசரத் தேவைக்கான உணவும் நீரும் கூடவே எப்படித் தப்பிப்பது என்பதற்கான கையேடும் இருப்பதைப் பார்த்து அவற்றைப் பயன்படுத்துகிறான். ஆனால் ஒரு திமிங்கிலத்தின் தாண்டுதலில் படகு புரண்டு அந்த உணவும் கையேடுகளும் குடிநீரும் படகிலிருந்து தண்ணீருக்குள் விழுந்துவிடுகின்றன. இப்போது புலி பையைத் தாக்க வருகிறது. அதனுடன் படகில் இருந்தால் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து, துடுப்புகளைக் கொண்டு ஒரு தெப்பத்தைக் கட்டுகிறான்.

படகிலிருந்து அவன் விலகியிருக்க அந்தத் தெப்பம் உதவுகிறது. ஆனால் புலி பசி பொறுக்கமாட்டாமல் தனக்குப் பிடிக்காத தண்ணீரில் இறங்கி மீன் வேட்டை ஆடுகிறது. ஆனால் திரும்பி வந்து படகுக்குள் ஏற முடியவில்லை. அதன் கண்கள், தன்னைக் காப்பாற்றும்படி மன்றாடுவதாக உணரும் பை, அதைக் காப்பாற்றிவிட்டு மீண்டும் தன் தெப்பத்துக்கு வந்து விடுகிறான். ஆனால் பையின் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. புலிக்குத் தேவையான உணவைக் கொடுக்காவிட்டால் தனது உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்து, மீன் பிடித்து புலிக்கு உணவாகக் கொடுக்கிறான். மழைநீரைச் சேகரித்து குடிநீராகப் பயன்படுத்தி சமாளிக்கிறான்.

எல்லாவற்றுக்கும் உச்சமாய் பசி பொறுக்கமுடியாமல் பச்சை மீனை உண்கிறான் பை. பலநாள், பலவிதமான இயற்கையின் விநோத அனுபவங்களுக்குப்பின், புலியுடன் படகில் பயணித்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற நிலையை பை எதிர்கொள்கிறான். அதை மிரட்டி, பயிற்சி அளித்து, படகில் தனக்கான இடத்தை உறுதி செய்கிறான். அதேநேரம் அதன்மீது தன் அன்பையும் காட்டுகிறான். உடல்நலம் குன்றும் புலியை தன் மடியில் வைத்து வருடிக்கொடுத்து அதைத் தேற்றுகிறான்.

இப்போது புலி அவனது கட்டுப்பாட்டுக்குள் அடங்கி நடக்கிறது. அதன்பிறகு பகலில் நல்ல நீரும் இரவில் அமிலமாகவும் மாறிவிடும் அதிசயத் தீவில் இருவரும் கரையிறங்கி இளைப்பாறுகிறார்கள். அந்தத் தீவு ஆபத்தானது என உணர்ந்ததும் அங்கிருந்து மீண்டும் கடலில் பயணத்தைத் தொடர்கிறார்கள். உயிர் பிழைத்துவிட முடியும் என்ற நம்பிக்கை பைக்கு இருக்கிறது. இயற்கையின் முன்னால் தனது இடம் என்ன என்பதை உணர்ந்து திடம் கொள்கிறான். பயம் அவனிடம் தோற்றுப்போய்விடுகிறது. பைக்கு இயற்கை அளித்த தரிசனம் அவனை அசாதாரண சாகச நாயகனாக ஆக்கிவிடுகிறது.

இதே படத்தை மசாலா கலந்து ராஜமௌலி போன்ற ஒரு இயக்குநர் இயக்கியிருந்தால் என்ன நடந்திருக்கும். பையின் பாண்டிச்சேரி காதலியான ஆனந்தியுடன் நிச்சயமாக ஒரு டூயட் இருந்திருக்கும். ரிச்சர்ட் பார்க்கர் புலியுடன் கடலில் ஒரு சண்டைக் காட்சி இருந்திருக்கும். படகைக் கவிழ்த்துவிட்ட திமிங்கிலத்துக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுத்திருப்பார் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அப்படி எடுக்கப்பட்டால் அந்தப் படம் வெற்றிபெறவும் கோடிகளை அள்ளவும் செய்திருக்கலாம். ஆனால் ‘லைஃப் ஆஃப் பை’ கொடுத்த திரை அனுபவத்தை மிகையான படம் தரவே முடியாது… அது பற்றி அடுத்த வகுப்பில்.

தொடர்புக்கு: jesudoss.c@thehindu.co.in

“சினிமா மேஜிக்னு சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது” - கவுதம் கார்த்திக்

கவுதம் கார்த்திக் பேட்டி 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x