Published : 16 Jun 2018 10:09 AM
Last Updated : 16 Jun 2018 10:09 AM

திரைவிமர்சனம்: கோலி சோடா 2

மீ

சை அரும்பாத விடலைச் சிறுவர்களை வைத்து ’கோலிசோடா’ என்ற ஆக்சன் டிராமாவை ஓரளவு நம்பகமான விதத்தில் கொடுத்தவர் விஜய் மில்டன். 4 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் 2-ம் பாகத்தை எழுதி, இயக்கி, ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். முதல் பாகத்தின் தொடர்ச்சி என இதில் எதுவும் இல்லை. ஆனால், எளியவரை வலியோர் நசுக்க, வலி பொறுக்கமுடியாமல் எளியவர்கள் திருப்பி அடிப்பார்கள் என்ற அதே ஒருவரிக் கதை. விடலைச் சிறுவர்களுக்கு பதிலாக இந்தமுறை வளர்ந்த இளைஞர்கள். ஒருவர் ரவுடியிடம் வேலை செய்பவர். காதலியின் அறிவுரையால் அதில் இருந்து வெளியேறி, நேர்மையான பாதைக்குத் திரும்ப முயல்கிறார். இன்னொருவர் ஆட்டோ ஓட்டுபவர். ஆட்டோவை விற்றுவிட்டு அடுத்தகட்டமாக கார் வாங்கி முன்னேற நினைக்கிறார். மூன்றாவது நபர் உணவு விடுதியில் பரோட்டா மாஸ்டர் பிளஸ் கூடைப்பந்து வீரர். போட்டியில் வென்றால் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்பதால் சாம்பியன் கனவுடன் வலம் வருகிறார். முன்னேறத் துடிக்கும் இந்த மூன்று சாமானிய இளைஞர்களின் வாழ்க்கை, ஒரு ரவுடி, ஒரு வார்டு கவுன்சிலர், ஒரு அரசியல் தலைவர் ஆகியோரின் அதிகாரம், பண பலம், ஆள் பலத்தால் அடிபட்டு, வதைபட்டு திசைமாறுகிறது. அடிபட்டவர்கள் திருப்பி அடித்தார்களா? இறுதி வெற்றி யாருக்கு என்பது கதை.

முதன்மைக் கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு, அவர்களை வேலைவாங்கிய விதம், ஒரு ஆக்சன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த விதம் ஆகியவற்றில் கவனிக்க வைக்கிறார் இயக்குநர் விஜய் மில்டன். காட்சிகளின் கோணங்களிலும் வெரைட்டி காட்டி வியக்க வைக்கிறார். நேர்த்தியான ஒளிப்பதிவோடு கச்சிதமான படத்தொகுப்பும் (எடிட்டர் தீபக்) கைகோர்த்து படத்தின் முதல் பாதி மிரட்ட வைக்கிறது. படத்தில் ஓவிய ஆசிரியை ரோகிணி ‘ஸ்டோரி போர்டு’ மூலம் தனது பிளாஷ்பேக் கதையைக் கூறும் காட்சி சட்டென்று ஈர்க்கிறது.

படத்தின் நாயகர்களான பாரத் சீனி, வினோத், இசக்கி பரத் ஆகிய மூவரும் நன்கு உள்வாங்கி நடித்துள்ளனர். இவர்கள் 3 பேரையும் ஒரே புள்ளியில் இணைக்கும் முக்கிய நபராக வருகிறார் சமுத்திரகனி. நடிப்பில் படத்துக்குப் படம் மெருகேறிக் கொண்டிருக்கிறார்.

படத்தின் பிரதான வில்லன் செம்பன் வினோத் ஜோஸ். மலையாளத்தில் இருந்து வந்தவர். எதார்த்த நடிப்பில் கவனிக்க வைக்கிறார். செமயாய் மிரட்டுகிறார். கவுன்சிலராக வரும் சரவணன் சுப்பையா வும் தன் பங்களிப்பை நிறைவாய் செய்கிறார்.

கடும் வெயிலில் கிடைக்கும் பன்னீர்சோடா போல, தகதகக்கும் வன்முறைக்கு நடுவே வருகிறது கதாநாயகிகள் சுபிக்சா, க்ரிஷா வரும் காதல் காட்சிகள். ஆனாலும், அவை ஏனோ படத்தோடு ஒட்டவில்லை.

இவர்களோடு காவல் அதிகாரியாக இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் ரேகா, ரோகிணி ஆகியோரும் முக்கியப் பாத்திரங்கள் ஏற்றிருக்கின்றனர்.

‘கெட்டவன் தோக்கணும்; நல்லவன் ஜெயிக்கணும்’ என்ற நீதியை ஏக விறுவிறுப் பில் எடுத்துச் செல்கிறது படம். ஆனாலும், ஆக்சன் காட்சிகளுக்குத் தேவையான நம்பகத்தன்மை இல்லாதது, ரவுடித்தனம் செய்யும் நாயகனின் கண்ணசைவுக்காக நாயகி காத்துக் கிடப்பது, சில டயலாக்குகளில் கட்டாய கருத்து திணிப்பு, இரண்டாம் பாதியில் வரும் வன்முறை காட்சிகள், அத்தனை பெரிய அடியாள் கூட்டத்தை 3 பேர் சேர்ந்து அடித்து துவம்சம் செய்வது என ஆங்காங்கே சில நெருடல்கள். இந்த பலவீனங்களை சரிசெய்திருந்தால், 'கோலி சோடா -2' நிஜமாகவே குப்பென்று உள்ளுக்குள் இறங்கி அற்புத ருசியை தந்திருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x