Last Updated : 08 Jun, 2018 11:49 AM

 

Published : 08 Jun 2018 11:49 AM
Last Updated : 08 Jun 2018 11:49 AM

சி(ரி)த்ராலயா 21: நடிக்கத் தெரியாத நாகேஷ்!

கா

ந்தி கடற்கரையில் அலைகளின் அருகே அமர்ந்திருந்தனர் கோபுவும் ஸ்ரீதரும். ஸ்ரீதர் கதை சொல்லத் தொடங்கினார். “இரண்டு சகோதரிகள். அவர்களுடைய காதலர்கள் இருவரும் நண்பர்கள். பெண்களின் தந்தை செல்வந்தர், அந்தஸ்து பார்ப்பவர். தங்கையின் காதலன், ஏழைப் பள்ளி வாத்தியாரின் மகன். இதனால் அந்தஸ்து குறுக்கிடுகிறது. ஏழை நண்பனுக்காகப் பணக்கார இளைஞன் அவனது தந்தையைப்போல் வேடமிட்டு பெண்களின் தந்தையை ஏமாற்றுவதற்கு முதியவர் வேடம் போடுகிறான்.

இது எப்படியிருக்கும்?” என்று கேட்டு ஸ்ரீதர் பிரேக் பிடித்து கதையை நிறுத்த, “ வேஷம் போடும் நண்பனின் அப்பாவே அந்தப் பெண்களின் அப்பாவுக்கு நண்பனாக வருகிறார்” என்று கோபு ட்விஸ்ட் கொடுக்க, ஸ்ரீதர் சிரித்து விட்டு “நல்ல திருப்பம்” என்றார்.

நண்பனின் நகைச்சுவை பகுதிகளை தனது காதல் பகுதிகளோடு இணைத்து, கதை, வசனம் ஸ்ரீதர்-கோபு என்று சரிசமமாகப் படத்தின் தொடக்கத்திலேயே டைட்டில் போட்டு கோபுவை அங்கீகரிக்கவும் செய்தார் ஸ்ரீதர். தன்னுடைய நெருங்கிய நண்பரான ஸ்ரீதரின் இந்தச் செயலை இன்றுவரை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார் கோபு. பால்ய நண்பன்தான் என்றாலும் தொழிலில் கோபு தனித்துவம் பெறவேண்டும் என்கிற எண்ணத்தை ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் வெளிப்படுத்தினார்.

ஓஹோ புரொடக்‌ஷன் செல்லப்பா

திரைப்பட இயக்குநராக முயலும் நாகேஷ் சச்சுவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யும் காட்சிதான் இந்தப் படத்துக்கு கோபு எழுதிய முதல் காட்சி. எஸ்டேட் முதலாளி பாலைய்யாவின் மகன் செல்லப்பாவாக நாகேஷ். அவர் (சச்சுவிடம்): மீனா! இப்ப காதலன் வந்து உன் முன்னாடி நிக்கிறான். நீ என்ன செய்வே?'' சச்சு: இரண்டு கையாலேயும் மூஞ்சியை மூடிப்பேன் சார்!''

08chrcj_Kathalikkaneramillai 3 பாலைய்யாவிடம் கதை கூறும் நாகேஷ்

நாகேஷ்: பலே! புதுமுகம்னு உன்னை போட்டிருக்கேன். சுத்தமா ரெண்டு கையாலேயும் மூஞ்சியை மறைச்சிக்கோ.. ஒரு பயலும் உன் மூஞ்சிய பார்க்கக் கூடாது” என்று நாகேஷ் நொந்துகொள்ளும் அந்தக் காட்சியில் திரையரங்கம் அதிர்ந்தது. கல்லூரி முடிந்து விடுமுறைக்கு ஊருக்கு வரும் நாகேஷின் சகோதரிகள் காஞ்சனாவும், ராஜஸ்ரீயும் அவரைக் காண வருவார்கள். அப்போது நாகேஷிடம், “படம் எடுக்க போறீயாமே?'' என்று ஆச்சரியத்துடன் கேட்பார்கள்.

“இதென்ன... ஓஹோ புரோடெக்‌ஷன்ஸ்? பெயர் சகிக்கலே!'' என்பார் காஞ்சனா. ''படத்தைப் பார்க்கிற ஒவ்வொருத்தனும்.. ஓஹோ..ஓஹோனு சொல்லணும். அதனால இப்படியொரு பெயர். இவ்வளவு பேசறீங்களே. கடைசியா நீங்க பார்த்த படம் என்ன?'' என்று கேட்பார் நாகேஷ். அதற்கு காஞ்சனா, ''வி டோன்ட் சி டமில் பிலிம்ஸ். வி சி ஒன்லி இங்கிலிஷ் பிக்சர்ஸ்.'' என்பார். அதற்கு நாகேஷ், ''இப்படி சொல்றதுதான் இப்ப ஃபேஷன்--ஆகிப்போச்சு இல்லே. என் படம் வெளிவரட்டும். ஒவ்வொரு இங்கிலிஷ்காரனும் ‘வி டோன்ட் சி இங்கிலிஷ் பிச்சர்ஸ்.. வி சி ஒன்லி தமிழ் பிக்சர்ஸ்'னு சொல்லப் போறானா இல்லையா பாரு” என்று செல்லப்பா நாகேஷ் தளராமல் கூறுவார். சகோதரிகள் கிண்டல் செய்து விட்டு போய்விட, நாகேஷ், “இவங்க கிடக்குறாங்க. யூ கோ அஹெட் செல்லப்பா..!'' என்று தனக்குத் தானே சொல்லிக்கொள்வார்.

திருவல்லிக்கேணி தேடி..

இந்தப் படத்துக்குப் பிறகு மளமளவென்று படங்கள் ஒப்பந்தமாகி ஒரு பெரிய நிலைக்கு வந்து விட்டார் நாகேஷ். ''கோபு! எந்த முகூர்த்தத்துல எனக்கு யூ கோ அஹெட் செல்லப்பானு எழுதினியோ, என் வாழ்க்கை கோயிங் எஹெட்டாதான் இருக்கு.!'' என்று பெருமையுடன் கூறுவார் நாகேஷ். தனது ஓய்வு நேரங்களில் திருவல்லிக்கேணிக்கு சென்று கோபுவுடன் கழிப்பார். இருவருமாக மெரினா கடற்கரைக்கு சென்று அளவளாவிக்கொண்டிருப்பார்கள். தனது மறைவுவரை, கோபுவிடம் ஆத்மார்த்தமான நட்பையும் மதிப்பையும் கொண்டிருந்தார் நாகேஷ். ‘காதலிக்க நேரமில்லை’ பட அனுபவங்களைக் கூறுவதற்கு முன்பாக நாகேஷை பற்றிய நினைவுகளில் ஆழ்ந்து போனார் கோபு.

கோபுவும் நாகேஷும் உரையாட அமர்ந்துவிட்டால் கவாலி பாடல் போல மாறி மாறி ஜோக் அடித்துக்கொண்டிருப்பார்கள். ஒவ்வொன்றும் சிக்ஸர்களாகவே கேட்பவர்களுக்குச் சிரிப்பை அடக்க முடியாது. ஒரு முறை கோபுவை காண அவரது வீட்டுக்கு தனது காரில் வந்தார் நாகேஷ். அப்போது பார்த்தசாரதி கோவில் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. வைதீக வைணவர்கள் சிலர் கோபுவின் வீட்டு வாசல் படியில் அமர்ந்திருந்தனர். காரை நிறுத்திய நாகேஷ், கோபுவின் வீட்டு வாயிலில் கூட்டமாக அமர்ந்திருந்த இவர்களை கண்டு தயங்கி காரை நிறுத்தாமல் அவரது வீட்டுக்குத் திரும்பிப் போய்விட்டார்.

சிறிது நேரம் கழித்து கோபுவிற்கு போன் செய்தார். ''என்னடா கோபு! நான் உன் வீட்டுக்கு வந்தேன். வாசலுல ஒரே குருக்கள் கூட்டம்.!'' என்றார். ''கோவில் உற்சவம் நடக்குது. என் வீடு மாடவீதில இருக்கறதால, அவங்க காலாற உட்கார்ந்துட்டு போவாங்கடா. நீ பாட்டுக்கு வழி கேட்டுகிட்டு உள்ளே வரவேண்டியதுதானே'' என்றார் கோபு. உடனே நாகேஷ் ஜோக் அடித்தார்.

''கோபு, நம்ம சினிமா உலகம் மோசமானது. கோபு வீட்டு வாசலுல ஒரே அய்யர் கூட்டம்னு கோடம்பாக்கத்துல போய் சொல்லிட்டா போதும், அண்ணன் காலி, திண்ண ரெடின்னு அவனவன் கையில மலர் வளையத்தோட வந்துடுவான். இனிமே அவங்களை அப்படி உட்கார விடாதே!'' என்றார். ‘நிஜ வாழ்வில் நடிக்கத் தெரியாத மாபெரும் கலைஞன் நாகேஷ்” என்று நாகேஷின் மரணத்தன்று இந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்து கோபுவின் மனதை வருத்தியது

மற்றொருமுறை, காரில் நாகேஷும், கோபுவும் சேர்ந்து ஒரு திருமணத்திற்கு சென்றுகொண்டிருந்தனர். நாகேஷின் கையில் பரிசுப்பொருள் ஒன்றுமே இல்லை. கோபு தனது கையில் பெரிய கிஃப்ட் பார்ஸல் ஒன்றை வைத்திருந்தார். ''என்னடா, நாகு! பெரிய வி.வி.ஐ.பி கல்யாணத்துக்கு போறோம். கையை வீசிட்டு வர்றே.. நீ கிப்ட் பண்ணலியா?'' என்று கோபு கேட்டதும் தனது சட்டை பையிலிருந்து ஒரு கவரை எடுத்துக் காட்டினார். ''இதோ இருக்கே நூறு ரூபாய்.!'' என்றதும் கோபு திகைத்தார். ''என்னடா நாகு! நூறு ருபாய்னு சொல்றே. அவர் எவ்வளவு பெரிய வி.ஐ பி. உன்னோட அந்தஸ்துக்கு நூறு ரூபாய்தானா, அட்லீஸ்ட் ஒரு பொக்கே கொடுத்தாலாவது கவுரவமா இருக்கும்!'' என்றார் கோபு.

கறார் நாகேஷ்

'' லைட்பாய், ஸ்டூடியோ தொழிலாளி எல்லாரும் எனக்கு ஒண்ணுதான். யாரா இருந்தாலும் ஸ்டாண்டர்ட்டா நூறு ரூபாய்தான்..!'' எல்லாரும் நேரே வந்து ஆப்பிள் பழம் வச்சு கல்யாணத்துக்கு கூப்பிடறாங்க. நாகேஷ்ன்ற இந்தக் கலைஞன் அவங்க வீட்டு விசேஷத்துக்கு வந்து தரிசனம் தர்றது எத்தனைபெரிய மொய்?” என்றாரே பார்க்கலம். கோபு அதன்பிறகு வாயைப்பொத்திக்கொண்டார். தயாரிப்பாளர்களிடத்தில் நாகேஷ் மிகவும் கறார். பணபாக்கி வசூலிப்பதில் மிகவும் சமர்த்தர். அப்படிப்பட்டவர் கோபு இயக்கிய அல்லது எழுதிய படங்களாக இருந்தால் அந்த கண்டிப்பு இருக்காது. ஊதியத்தையும் குறைத்துக்கொண்டு “கோபு படம் என்பதால் கொடுத்ததை வாங்கிக்கொள்கிறேன்” என்பார்

''கண்ணன் தேரோட்டியதால் அர்ஜுனனுக்கு வெற்றிடா… கோபு. நீ எனக்குக் கதை, வசனம் எழுதினா, அது நிச்சயம் எனக்கு வெற்றிதாண்டா.'' என்று வசனத்தைப் படிக்கும்போதே சிலாகித்து பேசுவார் நாகேஷ். அந்த அளவுக்கு திரைப்பயணத்தில் நாகேஷை ராக்கெட் ஏறிப் பறக்க வைத்துவிட்டது ‘காதலிக்க நேரமில்லை’. அப்பா பாலைய்யாவிடம் செல்லப்பா கதை சொல்லும் காட்சியில் திரையரங்குகள் கிடுகிடுத்தன. ஆனால் அந்தப் படத்துக்கு நடிகர்களைத் தேர்வு செய்ததில் ஸ்ரீதரும் கோபுவும் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல!

சிரிப்பு தொடரும்..
தொடர்புக்கு: tanthehindu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x