Last Updated : 11 May, 2018 10:26 AM

 

Published : 11 May 2018 10:26 AM
Last Updated : 11 May 2018 10:26 AM

ஹாலிவுட் ஜன்னல்: கரை சேர்த்த காதல்

கா

தலால் சகலத்தையும் சாதிக்கலாம். நடுக்கடலில் தன்னந்தனியாய் 41 நாட்கள் தவித்த இளம்பெண்ணை அவரது காதல் கரை சேர்த்த உண்மைக் கதையே ‘அட்ரிஃப்ட்’ ஹாலிவுட் திரைப்படம்.

காதலனுடன் பசிபிக் கடலில் படகொன்றில் பயணம் செல்லும் யுவதியின் வாழ்க்கையைத் திடீர்ச் சூறாவளி ஒன்று புரட்டிப்போடுகிறது. சேதமடைந்த படகில், முடமான காதலனைச் சுமந்துகொண்டு பல வாரங்கள் அலைந்து திரிந்து கரை காணும் அந்த இளம்பெண்ணின் போராட்டத்தைச் சொல்கிறது ‘அட்ரிஃப்ட்’.

இது 1983-ல் நடந்த உண்மைக் கதை. கடல் பயணத்தில் ஆர்வமுள்ள இளம் காதலர்கள், திருமணத்துக்கு முன்பாக பசிபிக் பெருங்கடலில் சாகச பயணத்தைத் திட்டமிடுகின்றனர். வரலாற்றில் அதுவரை இல்லாத சூறாவளியும் புயலும் அவர்களின் படகைத் தாக்கியதில் காதலன் உயிரிழந்தான். காதலி பலத்த காயமடைந்தாள். படகின் பாய்மரம், தகவல் தொடர்பு, வழிகாட்டும் சாதனங்கள் என அனைத்தும் சேதமடைந்தன. காதலனின் நினைவுகளைச் சுமந்துகொண்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு 41 நாட்கள் தவிப்புக்குப் பின்னர் ஹாவாய் தீவில் அப்பெண் கரை சேர்ந்தார். காதலனின் ஆன்மா உடனிருந்து தன்னைப் பத்திரமாக வழிநடத்தியதாக அவர் விவரித்த உருக்கமான சம்பவங்கள் ‘ரெட் ஸ்கை இன் மோர்னிங்’ (Red Sky in Mourning) என்ற நாவலாகப் பின்னர் வெளியானது.

நாவல் சித்தரிக்கும் காட்சிகளில் சில மாற்றங்களுடன் ‘அட்ரிஃப்ட்’ திரைப்படம் தயாராகி உள்ளது. உண்மைக் கதையில் இறந்துவிடும் காதலன், ட்ரைலரில் படம் முழுக்க வருவது திரைக்கதையில் செய்யப்பட்ட மாற்றமா, காதலியின் நம்பிக்கையாகப் புனையப்பட்ட காட்சிகளா என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். பெரும் செலவில் சூறாவளி, புயல்களின் தத்ரூப பயமுறுத்தலும், நீலக்கடல் நடுவே சிலிர்க்கும் காதல் காட்சிகளும் படத்தில் உண்டு. திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு நாவலும் மறுபதிப்பு கண்டுள்ளது.

ஷேலின் வூட்லி, சாம் க்ளாஃப்லின், ஜெஃப்ரி தாமஸ் உள்ளிட்டோர் நடித்த திரைப்படத்தை பல்தஸார் கொர்மேகர் (Baltasar Kormakur) இயக்கியுள்ளார். சர்வைவல், ரொமான்ஸ் ரசிகர்களுக்கான, இந்தத் திரைப்படம் ஜூன் 1 அன்று வெளியாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x