Published : 04 May 2018 10:01 AM
Last Updated : 04 May 2018 10:01 AM

திரைப் பள்ளி 03: ‘அலைபாயுதே’ காதலில் இழையோடும் காலம்!

சிறுகதை, நாவல், நாடகம், திரைப்படம் ஆகிய நான்கு பிரபலமான வடிவங்களுக்கும் உள்ளடக்கம் என்பது ஒன்றே. அதுதான் கதை. ஆனால் கதையை எப்படிக் கூறுகிறோம் என்ற உத்தியில்தான் இவை வேறுபடுகின்றன. ஒரு சிறுகதை அல்லது நாவலை எழுத, இன்றைய நவீன எழுத்தாளர் கதைக் கருவுக்கு ஏற்ற அல்லது அவர் பரிட்சித்துப் பார்க்க விரும்பும் கதை சொல்லல் உத்தியைக் கைக்கொள்ளலாம்.

உதாரணத்துக்கு ரியலிசம், சர்-ரியலிசம், நியோ-ரியலிசம், மேஜிக்கல் ரியலிசம், ஃபெபிமினிசம், மாடர்னிசம், போஸ்ட்-மார்டனிசம் என 20-க்கும் மேற்பட்ட கோட்பாடு சார்ந்த கதை வெளிப்பாட்டு முறைகளில் ஒன்றைத் தேர்ந்துகொண்டு எழுதலாம். எந்த முறையைத் தேர்ந்துகொண்டாலும் எழுத்தாளன் வார்த்தைகளால் புனைந்து எழுதப்படும் வர்ணனையை மட்டுமே நம்பியிருக்கிறான். வர்ணனையின் மூலமே தனது கதை நிகழும் நிலப்பரப்பின் தன்மையை, அங்கு வாழும் கதை மாந்தர்களின் தோற்றத்தை, அவர்களது குணநலன்களை, அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் நிகழும் விதத்தை விவரிக்கிறான்.

காட்சிக் கற்பனை

வாசகனோ எழுத்தாளனின் வர்ணனையை மீறி, கதை நிகழும் உலகையும் கதை மாந்தர்களையும் கற்பனைசெய்து மனத்திரையில் ஓடவிடுகிறான். ஆனால் திரைப்படத்தில் கதை நிகழும் இடமும் அங்கு வாழும் கதாபாத்திரங்களும் காட்சிகளாகக் காட்டப்பட்டு விடுகின்றன. இதனால் வாசகனுக்கு காட்சியைக் கற்பனை செய்ய வேண்டிய அவசியமில்லாமல் போய், பார்வையாளன் என்ற வேறொரு அனுபவத்துக்குத் தயாராகிவிடுகிறான். இந்த இடத்தில்தான் திரைக்கதை எழுத்தாளன் காலத்தையும் இடத்தையும் (Time and Space) கையில் வைத்துக்கொண்டு பார்வையாளனைத் தனது கட்டுக்குள் கொண்டு வருகிறான்.

பார்வையாளன், காட்சியைக் கற்பனை செய்ய வேண்டிய அவசியமில்லாத நிலையில், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்த அல்லது வாழும் கதாபாத்திரங்களை, அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்களை ஒன்றின்பின் ஒன்றாக, ஒழுங்கான வரிசையில் காட்சிகளாகக் கோத்து திரையில் காட்டும்போது அங்கே திரைப்படக் கலை பிறந்துவிடுகிறது. தொடர்ச்சி அறுபடாத இந்தக் காட்சி ஓட்டத்தின் வழியே, பார்வையாளன் ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்குமான தொடர்பை மனதுக்குள் அலசிப் பார்த்து, இதுதான் கதை, இதுதான் அதன் போக்கு என்பதைத் தீர்மானித்துவிடுகிறான்.

கலைக்கப்பட்ட காலம்

அதுவே வெவ்வேறு கால கட்டங்களில் நடக்கும் சம்பவங்களை, அவற்றின் கால வரிசையைக் கலைத்துப்போட்டு, தொடர்பற்ற காட்சிகளாகத் துண்டாடி அவற்றைக் கோத்துக் காட்டினாலும் பார்வையாளனால் ஒரு கதையைத் தீர்மானித்துக்கொள்ள முடிகிறது. உலகின் தலைசிறந்த இயக்குநர்கள் தங்கள் படைப்புகளில் காலத்தையும் இடத்தையும் இந்த முறையில் கலைத்துப்போட்டு பார்வையாளனின் திரை அனுபவத்தைப் புரட்டிப் போட்டிருக்கிறார்கள். தொடர்ச்சியற்ற காட்சிக் கோவையின் மூலம் கதையையும் முடிவையும் ஊகித்துக்கொள்ளும் பார்வையாளன், திரைக்கதை எழுத்தாளனின் எத்தகைய கால விளையாட்டுக்கும் தயாராகி திரையரங்கு வருகிறான்.

திரைக்கதையின் நரம்பும் அதில் ஓடும் ரத்தமும் போன்றவை காலமும் இடமும். கதைக்கருவைப் பொறுத்து அது நிகழும் இடத்தை எளிதில் தீர்மானித்துவிட முடியும். அதேபோல் கதைக் கருவையொட்டி தேர்ந்துகொள்ளும் திரைப்பட வகை (Movie genre), திரைக்கதை எழுத்தாளன் அல்லது இயக்குநர் வெளிப்படுத்த நினைக்கும் ஆளுமை ஆகிய காரணங்களுக்காகத் திரைக்கதையில் காலமானது எப்படி வேண்டுமானாலும் எடுத்தாளப்படலாம். எப்படியிருப்பினும் கதைக் கரு முடிவு செய்யப்பட்டவுடனேயே திரைக்கதைக்கான காலகட்டத்தை (Time frame) முடிவு செய்துவிடுவதன் மூலம் திரைக்கதை எழுதுவதில் நேரம் வீணாவதைக் கணிசமாகக் குறைக்க முடியும்.

வாசிப்பின் வழியே விளையாட்டு

திரைக்கதையில் காலம் என்பதை இன்னும் சற்று எளிமையாகப் புரிந்துகொள்ள விரும்பினீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு விளையாட்டு! நீங்கள் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், பாலகுமாரனை வாசிப்பவராக இருக்கலாம். அல்லது ஜெயமோகன், எஸ்,ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, இமையம் என நவீன எழுத்தாளர்களின் தீவிர வாசகராக இருக்கலாம். யாரை வாசித்தாலும் அவர்கள் எழுதிய 200 அல்லது 300 பக்கத்துக்குள் அடங்கிவிடும் நாவல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரே நிபந்தனை, ஒரே நேர்கோட்டில் காலம் முன்நோக்கி நகர்ந்து செல்லும் லீனியர் (Linear) கால வரிசையில் அந்த நாவல் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

இப்போது முதல் அத்தியாயத்தில் தொடங்கி கடைசி அத்தியாயம்வரை படித்து கதையைப் புரிந்துகொள்கிறீர்கள் என்றால் அது லீனியர் (Linear) கால வரிசை. அதுவே கதையின் முடிவு இடம்பெற்றிருக்கும் (முடிவு இல்லாமலும் இருக்கலாம்) கடைசி அத்தியாயத்தின் சில பக்கங்களை மட்டும் முதலில் வாசித்துவிட்டு பின் முதல் அத்தியாயத்திலிருந்து தொடந்து சில அத்தியாயங்களை வாசியுங்கள். பின்னர் வாசித்த இடத்திலிருந்து தாவி நாவலின் நடுப்பகுதிக்கு வந்து ஒரு அத்தியாயத்தை வாசித்தபின் மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடருங்கள். இறுதியில் கடைசி அத்தியாயத்தை முழுமையாக வாசித்து கதையின் முடிவைத் தெரிந்துகொண்டீர்கள் என்றால் அது நான்-லீனியர் (Non-Linear) கால வரிசை.

நாள், வாரம், மாதம், வருடம்…

இந்த இரண்டு கால வரிசையிலும் கதை சொன்ன இயக்குநர்களை நாம் ஹாலிவுட்டில் தேட வேண்டியதில்லை. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘அலைபாயுதே’ படத்தில் கார்த்திக் மற்றும் சக்தியின் காதல் கதை, எந்தக் கால வரிசையில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை, கண்டுபிடித்துக் கூற முடிகிறதா பாருங்கள். ஒரே நேர்கோட்டில், கதை காட்சிகளாக விரிந்து செல்லும்போது, அதன் கால ஓட்டம் நிறுத்தப்பட்டு, முன்னர் நடந்த சம்பவங்களை ஃப்ளாஷ் பேக் (Flash Back) காட்சிகளாகவோ, பின்னர் நடக்கவிருக்கும் சம்பவங்களை ஃப்ளாஷ் ஃபார்வர்டு (Flash Forward) காட்சிகளாகவோ விரியச் செய்யலாம்.

இப்படிக் குறுக்கிடும் இடைவெட்டுக்குப் பின்னர், கால ஓட்டத்தைத் திரும்பவும் நேர்கோட்டுக்குக் கொண்டு வந்து கதையைத் தொடரலாம். எப்படியிருப்பினும் உங்கள் கதை ஒரே நாளில் நடக்கிறதா, அல்லது ஒரு வாரத்தில், ஒரு மாதத்தில், ஒரு வருடத்தில், பல வருடங்களுக்கு, அல்லது நூற்றாண்டுகளைக் கடந்தும் நடக்கிறதா என்ற டைம் பிரேமை முடிவு செய்தால் மட்டுமே உங்கள் திரைக்கதையின் வேகத்தையும் அதன் போக்கையும் உங்களால் கட்டுப்படுத்த முடியும். இப்படிக் காலத்தைத் தங்கள் கட்டுக்குள் வைத்து விளையாடி சில திரை ஆளுமைகளின் படங்களுடன் அடுத்த வகுப்பில் சந்திப்போம்.

தொடர்புக்கு: jesudoss.c@thehindutamil.co.in

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x