Last Updated : 20 Apr, 2018 10:11 AM

 

Published : 20 Apr 2018 10:11 AM
Last Updated : 20 Apr 2018 10:11 AM

ராக யாத்திரை 01: திசை வேறானாலும்...

“இசை ஒரு எல்லையற்ற கடல். அதன் கரையினில் வியப்போடு வேடிக்கை பார்க்கும் குழந்தை நான்.” ஐன்ஸ்டைன் அறிவியலைப் பற்றிச் சொன்னதுபோல் ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ பட ஒலித்தட்டில் மோகன்லால் மலையாள நாசி ஒலியோடு ‘சங்கீதம் ஒரு அனந்த சாகரமாணு’ என இசையைப் பற்றிச் சொல்லும் வாசகங்கள் இவை. சிறு வயதிலேயே அந்தக் கடல் என்னை மிகவும் வசீகரித்திருந்தது. அதன் அலைகளில், கரைகளில் விளையாடி நனைந்து மகிழ்ந்திருந்தாலும் அக்கடலின் ஆழமும் வீச்சும் அப்போது தெரியாமல் இருந்தது.

மனித இனமும் மொழியும் தோன்றுவதற்கு முன்பே இசை தோன்றிவிட்டது. பறவைகள் இரைதேடல், இணைதேடல், சூழ்நிலையில், காலநிலைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றிப் பிற பறவைகளுக்குக் குறிப்பு உணர்த்தல் என ஒலியைச் சங்கேதமாகப் பயன்படுத்தத் தொடங்கின. ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகப் பயன்படத் தொடங்கிய ஒலியானது ஒரு கட்டத்தில் அதன் ஆரம்ப நோக்கங்களைக் கடந்து ‘கலைக்காகவே கலை’ என்று சொல்லப்படுவதுபோல் இசைக்காகவே இசை என மாறிப்போனது. எதற்காகவும் இல்லாமல் கூவுவதை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே குயில் கூவுவதைப் போல் இசை என்பது ஓய்வுக்கும் ரசனைக்கும் உரிய கலைப்பொருளானது. கலைமகள் கைப்பொருளானது. இசையை ஒலி என்னும் மொழியின் கவிதை எனலாம்.

இசையில் தோன்றிய நுட்பங்கள்

நாகரிகம் வளர வளர விவசாயம், கட்டுமானம் போன்ற பணிகளில் ஏற்பட்டதைப் போன்றே இசையிலும் தொழில்நுட்பங்கள் கூடத் தொடங்கின. ஒவ்வொரு புவியியல் பகுதிக்கும் ஒவ்வொரு வகையான இசை நுட்பங்கள் தோன்றின.

20CHRCJ_RAJA_AND_MSVright

தமிழகத்தில் இசை முத்தமிழில் ஒன்றாகப் போற்றப்பட்டு பண்களும் இசை இலக்கணங்களும் உருவாயின. பாணர்கள் என்பார் பண்ணிசைப்பதில் வல்லவராக விளங்கியதையும் யாழ் இசைக்கருவிகளில் அவர்கள் கொண்டிருந்த புலமையையும் சங்கப் பாடல்களும் சிலப்பதிகாரமும் தேவாரம் போன்ற நூல்களும் நமக்கு உணர்த்துகின்றன. ‘கருணாமிர்த சாகரம்’ என்ற மாபெரும் நூலில் ஆப்ரஹாம் பண்டிதர் தமிழிசை தனியிசையே என நிறுவியிருப்பார். சங்கப் பாடல்களெல்லாமே இசையோடு பாடவே எழுதப்பட்டவை என்பார் தொ.பரமசிவன்.

பின்னர் தெலுங்கு மன்னர்களின் காலத்தில் வேங்கடமகி என்பவரால் பண்கள், ராகங்கள் எல்லாம் கணித முறைப்படி தொகுக்கப்பட்டு, இலக்கணங்கள் வகுக்கப்பட்டு, 72 மேளகர்த்தா ராகங்கள் என உருவாக்கப்பட்டுக் கீர்த்தனைகள், பாடல்கள் மூலம் பிரபலப்படுத்தப்பட்ட செவ்வியல் இசை கர்னாடக சங்கீதம் என அழைக்கப்படுகிறது.

நாடகமும் திரையிசையும்

பக்தி இயக்கத்தின் நீட்சியாகவே கர்னாடக சங்கீத மும்மூர்த்திகள், தமிழிசை மூவர் போன்ற இசைக் கலைஞர்கள் மூலமும், சங்கரதாஸ் சுவாமிகள் போன்றவர்கள் இயற்றிய, பெரும்பாலும் பாடல்களாலேயே ஆன நாடகங்களாலும் நமது செவ்வியல் இசை மரபு தொடர்ந்து வந்தது. கடந்த நூற்றாண்டில் திரைப்படம் கண்டுபிடிக்கப்பட்டுப் பின்னர் பேசும் படமாக இசையுடன் ஒலிக்கத் தொடங்கிய போதும் ‘வள்ளி திருமணம்’, ‘அல்லி அர்ஜுனா’ போன்ற புகழ்பெற்ற நாடகங்களே திரைப்படமாயின.

நாடகங்களில் இசையமைக்கப்பட்ட பாடல்களும், பிரபலமான கர்னாடக சங்கீத இசைக்கலைஞர்களின் பாடல்களும், அதே மெட்டுக்களில் அமைந்த பாடல்களுமே ஒலித்து வந்தன. ‘நாத தனுமனிசம் ‘ என்ற தியாகய்யரின் கீர்த்தனை, மெட்டில் ‘காதல் கனிரசமே’ என ஒலிக்கும். தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா போன்ற முதல் சூப்பர், சுப்ரீம் ஸ்டார்கள் உருவான காலகட்டம் அது. அவர்கள் அபாரமான இசைக் கலைஞர்களாக இருந்தனர்.

பின்னணி இசை ஒருவர், பாடல்களுக்கு மெட்டுப் போட ஒருவர் எனப் பெரும்பாலும் ஐம்பது அறுபது பாடல்கள் இடம்பெற்றன. இசையமைப்பாளர் என்ற ஒரு பணி முழுமையாக உருவாகாத காலகட்டத்தில் பாபநாசம் சிவனையே முதல் நட்சத்திர இசையமைப்பாளர் எனச் சொல்லலாம். கர்னாடக இசையில் அவருக்கு இருந்த ஆழ்ந்த ஞானத்தால் ‘ஹரிதாஸ்’, ‘சிவகவி’ எனப் பல படங்களில் ‘கிருஷ்ணா முகுந்தா முராரே’, ‘அம்பா மனங்கனிந்து’ என கர்னாடக இசை ராகங்களில் அவர் அள்ளி அள்ளி அளித்தார்.

திரையிசை மரபின் தொடர்ச்சி

தொடர்ந்து அந்த மரபில் ஜி.ராமநாதன், சி.ஆர்.சுப்புராமன், கே.வி.மகாதேவன் என எண்ணற்ற மேதைகள் செவ்வியல் இசை ராகங்களைத் திரையில் பாடல்களாக ஒலிக்கச் செய்திருக்கின்றனர். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்தில் கர்னாடக இசை ராகங்களைப் பயன்படுத்துவது தொடர்ந்தாலும் மேற்கத்திய, வட இந்திய பாணியில் பாடல்களில் மெட்டிசைப்பதில் அவர் வல்லவராக இருந்தார்.

பின்னர் பண்ணைபுரத்தில் தோன்றிய இசைஞானியின் பயணம் நமது கர்னாடக செவ்வியல் இசை ராகங்களை நாட்டுப்புற இசையோடும் மேற்கத்திய செவ்வியல் இசையோடும் மெல்லிசையோடும் இணைத்து அவற்றுக்குப் புதிய புதிய பரிமாணங்களை அளித்தது. அந்த மரபு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வரையில் இன்றும் தொடர்கிறது.

20chrcjramanujam

தூர்தர்ஷன் மட்டுமே இருந்த காலத்தில் ‘ஏக் சுர்’ என எல்லா மொழிகளும் இணைந்த ஒரு பாடல் அடிக்கடி ஒலிபரப்பாகும். அதில் தமிழில் ‘திசை வேறானாலும் ஆழிசேர் ஆறுகள் முகிலாய் மழையாய் பொழிவதுபோல் இசை’ என்ற வரிகள் வரும். அதுபோல் நமது செவ்வியல் ராகங்கள் பல்வேறு நதிகளாய் உருவெடுத்து இசைக்கடலில் சங்கமிப்பதை அலசுவதே இந்த ராக யாத்திரை! வாருங்கள்! திரையிசை நதியில் ராக யாத்திரை சென்று கடலில் கால்நனைப்போம்!!

(யாத்திரை தொடரும்...)
தொடர்புக்கு: ramsych2@gmail.com

வாசகர்களுக்கு

ராகம் தொடர்பான ஒரு கேள்வியோடு தொடங்குவோம். மேலே சொன்ன அந்த ‘மிலே சுர் மேரா துமாரா’ பாடல் அமைந்த ராகம் எது? ராகம் தெரியாவிட்டாலும் அப்பாடலைப் பாடும்போது வேறு எந்தெந்தப் பாடல்களெல்லாம் உங்களுக்கு நினைவுக்கு வருகிறது என்பதைக் குறித்துக் கொண்டு அடுத்த வாரம் சொல்லுங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x