Published : 26 Jan 2018 10:12 AM
Last Updated : 26 Jan 2018 10:12 AM

இயக்குநரின் குரல்: இவர் எவ்வளவு முக்கியமானவர்! - விக்கி

பொதுநல வழக்குகளின் மூலம் பலவேறு மக்கள் பிரச்சினைகளின் தீர்வுக்காகப் போராடி வருபவர் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி. அவரது போராட்ட வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் ‘டிராபிக் ராமசாமி’யாக நடிக்க, அதே பெயரிலேயே புதிய படமொன்றை இயக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் விக்கி. அவருடன் உரையாடியதிலிருந்து...

டிராபிக் ராமசாமி வாழ்க்கையைப் படமாக்க வேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்?

மாபெரும் மனித உரிமைப் போராளி இரோம் ஷர்மிளா மணிப்பூர் மக்களின் உரிமைக்காக 16 ஆண்டுகளாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அப்படியும் செவிசாய்க்காத அதிகாரவர்க்கத்தைத் தேர்தல் களத்தில் எதிர்கொண்டபோது மக்கள் அவரை மனசாட்சியே இல்லாமல் கைவிட்டனர். அதன் பிறகு அவருக்குத் தங்குவதற்குக் கூட இடமில்லாத சூழ்நிலை ஏற்பட்டு தமிழகத்தில் அடைக்கலமாகிவிட்டார். இரோம் ஷர்மிளாவின் தியாகத்தை மக்கள் புரிந்துகொள்ளவே இல்லை. டிராபிக் ராமசாமியும் மக்களுக்காகத்தான் களத்தில் நின்று போராடுகிறார். நீதிமன்றத்தின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை அசைக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. தன்னைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்கள் நமக்காகக் கவலைப்படுவார்களா, நம்மை அங்கீகரிப்பார்களா என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் போராடும் இவரைப் போன்ற ஒருவர் நம் மத்தியில் இருக்கும்போது அவர் எவ்வளவு முக்கியமானவர் என்பதை சினிமா மூலம் கூற விரும்பியே அவரது வாழ்க்கையைத் தழுவிப் படமாக்க நினைத்தேன்

டிராபிக் ராமசாமி மிக எளிய மனிதர். அவரது கதாபாத்திரத்துக்கு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனை ஏன் தேர்வு செய்தீர்கள்?

டிராபிக் ராமசாமி என்றில்லை, சேகுவேரா, ஆப்ரஹாம் லிங்கன், புரட்சியாளர் லெனின் உட்பட உலகில் பெரும்பாலான சமூகப் போராளிகளின் தோற்றம் எளிமையானதுதான். அந்த எளிமை என்பது அவர்களின் உண்மையிலிருந்து வெளிப்பட்டு நிற்பது. விஜய் சேதுபதி ஒரு மிகப் பெரிய கலைவிழா நிகழ்ச்சிக்குக் காலில் சாதாரண ஹவாய் காலணி அணிந்து வந்திருந்தார்.

அவரிடம் ‘உங்கள் அந்தஸ்துக்கு நீங்கள் பிராண்டட் காலணி அணிந்து வந்திருக்கலாமே?’ என்று கேட்டார்கள். அவரோ “ இதுதான் எனக்கு கம்ஃபர்ட்டாக இருக்கிறது” என்று சொன்னார். உண்மையாக வாழ்வதில் இருக்கும் சவுகரியம் எதிலும் கிடையாது என்று நினைப்பவர்கள்தாம் இந்தப் போராளிகள்.

எஸ்.ஏ.சி சாரிடம் ஆறு ஆண்டுகளாக உதவியாளனாகப் பணியாற்றி இருக்கிறேன். அவருடைய எல்லாப் படங்களையும் பார்த்திருக்கிறேன். அவரது அனைத்துப் படங்களின் உள்ளடக்கத்திலும் சமூகத்துக்கான குரல் தீவிரமாக இருக்கும். பொழுதுபோக்கு எந்த அளவுக்கு இருக்கிறதோ அதே அளவுக்குத் தீவிரமான பிரச்சாரமும் இருக்கும். அதனால்தான் ‘புரட்சி இயக்குநர்’ என்ற பட்டம் அவரைத் தேடி வந்தது.

டிராபிக் ராமசாமி அய்யா நேரடியாக நீதிமன்றக் களத்தில் சமூகத்துக்காகவும் மக்களுக்காகவும் போராடுகிறவர் என்றால், எஸ்.ஏ.சி. சார் தனது படங்களில் நீதிமன்றக் காட்சிகளை உருவாக்கி அதன்வழியே போராடி வந்திருப்பவர். இருவரது களங்களும் வேறுவேறாக இருந்தாலும் அவர்கள் இருவரும் இயங்கி வந்திருப்பது சமூகத்துக்காகத்தான். இருவருக்கும் உருவம்தான் வேறு வேறே தவிர, போராட்ட குணமும் சமூகத்தின் மீதான காதல் என்பதிலும் இருவருக்கும் இடையிலான உணர்வு ஒன்றுதான். இந்த ஒற்றுமையுமே எனக்குப் பேதுமானதாகப்பட்டது.

டிராபிக் ராமசாமியையே நடிக்கக் கேட்டிருக்கலாமே? அவரைச் சந்தித்தபோது என்ன சொன்னார்?

நானும் இயக்குநரும் அவரைச் சென்று சந்தித்தோம். “அப்போது எஸ்.ஏ.சி சார் ‘உங்கள் வாழ்க்கையைப் படமாக எடுப்பதோடு அதில் நான் நடிக்க வேண்டும் என்று இந்த இளைஞர் கேட்கிறார். எனது உதவியாளர்தான், என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். ஒரு நொடிகூட யோசிக்காமல் “ கடந்த ஆண்டுகளில் பல இயக்குநர்கள் என்னிடம் வந்து கேட்டார்கள். நான் மறுத்துவிட்டேன். ஆனால், நீங்கள் நடிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, நிறைவு. எனது சார்பாக இந்தப் படத்தில் ஒரு சிறு பங்கு இருக்கட்டும்” என்று கூறி 200 ரூபாய் பணத்தை எடுத்து எஸ்.ஏ.சி சாரிடம் கொடுத்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது கவனித்தேன். டிராபிக் ராமசாமி எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவர்கள் செய்யும் தவறுகளை எதிர்த்து நூற்றுக்கணக்கான வழக்குகளைத் தொடுத்தவர். கொஞ்சமும் சோர்ந்துவிடாமல் அந்த வழக்குகளை நெஞ்சுரத்துடன் இன்னும் நடத்திக்கொண்டிருப்பவர் என்று எஸ்.ஏ.சி சுட்டிக்காட்டினார். அதேபோல் ‘நீங்களும் யார் முதலமைச்சர் என்றாலும் அவர்களை விமர்சித்துப் படமெடுத்திருக்கிறீர்கள்’ என்று அவர் குறிப்பிட்டார். இந்த கெமிஸ்ட்ரியை அவர்களின் சந்திப்பில் நேரடியாகக் கண்டேன். இந்தப் படம் தொடங்கிய பிறகு டிராபிக் ராமசாமி இன்னும் உத்வேகத்துடன் செயல்படத் தொடங்கியிருக்கிறார்.

வாழ்க்கை வரலாற்றைப் பேசும் படம் என்று வருகிறபோது நிஜக் கதாபாத்திரத்தின் தோற்றத்துக்கு நெருக்கமாக ‘நட்சத்திர தேர்வு’ இருக்க வேண்டும் அல்லவா?

மறுக்கவில்லை. ஆனால், சினிமாவில் டிராபிக் ராமசாமி போன்ற ஒரு உன்னதமான போராளியை அவரை அறியாத பார்வையாளனுக்கும் கொண்டுசெல்ல வேண்டும். அதற்கு அவன் நன்கு அறிந்த முகம் அவசியம் என்று நினைத்தேன். திறமையான திரை இயக்கம் என்று வருகிறபோது, ‘ரைட் கேஸ்டிங் இஸ் பிப்டி பர்செண்ட் டைரக்‌ஷன்’ என்று சொல்லுகிறார்கள். நெருக்கமான தோற்றத்தில் இருப்பவரை நடிக்க வைப்பது என்பது ஒரு வகை. பிரபலமான ஒருவரைப் பிரபலமான கதாபாத்திரமாக நடிக்க வைப்பது என்பதும் நடைமுறையில் இருப்பதுதான். இதில் எஸ்.ஏ.சி சார் டிராபிக் ராமசாமியாக வாழ்ந்திருக்கிறார் என்பதைப் படத்தைப் பார்த்தபின் நீங்களே கூறுவீர்கள்.

வசனம் முக்கிய அம்சமாக இருக்குமா?

சினிமா காட்சி ஊடகம்தான் என்றாலும் பிரச்சினையைப் பேச வேண்டிய இடத்தில் பேச வசனம் கண்டிப்பாகத் தேவை. அப்படித்தான் இந்தப் படத்தில் வசனம் அளவாகப் பங்காற்றியிருக்கிறது. வாழ்க்கை வரலாற்றைப் பேசினாலும் பொழுதுபோக்கு மற்றும் சுவாரசியத் தன்மை படமாகவும் இதைக் கொடுக்க வேண்டும் என்பதால் நன்மையைத் தூக்கிப்பிடிக்கக் கொஞ்சம் கற்பனையையும் நேர்மையான முறையில் கலந்திருக்கிறோம்.

விஜய் ஆண்டனி, பிரகாஷ் ராஜ் என்று பெரிய நடிகர் பட்டாளம் இந்தப் படத்துக்குள் வந்தது எப்படி?

நான் இருக்கிற இடம்தான் காரணம். விஜய் ஆண்டனி, பிரகாஷ்ராஜ், ஆர்.கே.சுரேஷ், சீமான், குஷ்பு ,கஸ்தூரி, அம்பிகா, ரோகிணி எனக் கதாபாத்திரங்களுக்குள் தங்களைப் பொருத்திக்கொண்டிருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் அனைவருமே டிராபிக் ராமசாமி படத்தில் நடிப்பதைப் பெருமையாகக் கருதுகிறோம் என்று கூறியிருக்கிறார்கள். படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடந்துகொண்டிருக்கிறன. விரைவில் இசையை வெளியிட இருக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x