Last Updated : 29 Dec, 2017 10:29 AM

 

Published : 29 Dec 2017 10:29 AM
Last Updated : 29 Dec 2017 10:29 AM

விடைபெறும் 2017: தன்னை முன்னிறுத்தாத இசை

ஆண்டின் முதல் படமாக வெளியான ‘பெய்யெனப் பெய்யும் குருதி’யில் 2017-ன் தமிழ்த் திரையிசைப் பயணம் தொடங்கியது. இந்த ஆண்டில் சுமார் 200 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அவை நமக்கு 800 பாடல்களை அளித்து நம் பொழுதுகளைக் களவாடிச் சென்றன. சுமார் 75 படங்கள் புதிய இசையமைப்பாளர்களை நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளன. ஜூன் 25 அன்று வெளியான ‘தரிசு நிலம்’ மூலம் நீண்ட இடைவெளிக்குப் பின் சங்கர் கணேஷ் மீண்டும் களம் இறங்கி உள்ளார். இன்றைய தலைமுறையையும் கவர முடியும் என்பதை ‘முட்டக்கண்ணி சொந்தக்காரி’, ‘என் ஊரு திண்டுக்கல்லு’ போன்ற பாடல்கள்மூலம் அவர் நிரூபிக்க முயல்கிறார். ‘திருட்டுப் பயலே 2’ மூலம் மவுனம் கலைத்த வித்யாசாகர் மனதுக்கு இதமான மெலடிகளை அளித்தார்.

எண்ணிக்கை அடிப்படையில் இமான் ஒன்பது படங்களுக்கு இசையமைத்து முதலிடத்தில் உள்ளார். ஏழு படங்களுக்கு இசையமைத்து ஜிப்ரான் இரண்டாம் இடத்தில் உள்ளார். ஆறு படங்களுக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜாவுக்கு மூன்றாம் இடம். ஐந்து படங்களுக்கு இசையமைத்த விஷால் சந்திரசேகர் நான்காம் இடத்திலும் தலா நான்கு படங்களுக்கு இசையமைத்து இளையராஜா, ஷான் ரோல்டன் ஐந்தாம் இடத்திலும் உள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத், தமன் ஆகியோர் தலா மூன்று படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.

ஜிப்ரானின் பங்களிப்பு

ஒலிகளின் தரம், முதல்முறை கேட்கும்போதே ஈர்த்துக்கொண்டது, ஹிட்களின் எண்ணிக்கை ஆகிவற்றின் அடிப்படையில் ஜிப்ரானின் இசையாளுமை அநாயாசமாக எழுந்து நின்றது. ‘அறம்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘மகளிர் மட்டும்’, ‘மாயவன்’, ‘சென்னை டூ சிங்கப்பூர்’, ‘அதே கண்கள்’ என்று அவர் தேர்வு செய்த படங்கள் அவரது புதிய கதைக் களங்களையும் பாடல்களுக்குப் பொருத்தமான சூழ்நிலைகளையும் கொண்டிருந்ததால் தன்னை முன்னிலைப்படுத்த முயலாமல் கதையைத் தாங்கிப் பிடிக்கும் பாடல்களை வழங்கித் தன் பாணியை நிரூபிக்கிறார். அதேபோல் ‘அறம்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘மாயவன்’ ஆகிய படங்களைத் தன் பின்னணி இசையின் மூலம் வேறு தளத்துக்கு எடுத்துச் சென்றதை நாம் மறுக்க முடியாது

ரஹ்மானின் துள்ளல்

‘மொசார்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்று ரசிகர்கள் அழைத்தாலும் ‘அதை நான் விரும்பவில்லை’ என்று சொல்லும் ஏ.ஆர்.ரஹ்மான், ‘காற்று வெளியிடை’, ‘மெர்சல்’ என்று இரண்டு படங்களுக்கு மட்டுமே இசையமைத்தார். இருப்பினும், தன் பாடல்கள் மற்றும் இசைக்கோவையில் ஒலி அடுக்குகளைப் படிகம்போல் அடுக்குவதில் தனக்கும் மற்றவர்களுக்கும் உள்ள இடைவெளியை இன்னும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறார். ‘காற்று வெளியிடை’யின் பாடல்களும் பின்னணி இசையும் கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கான குரலாகவும் கதைபோக்கின் துணைக் கதை சொல்லியாகவும் விரிந்தன. அந்தப் படம் ரசிகர்களை ஏமாற்றினாலும் ரஹ்மானின் இசை ஏமாற்றவில்லை. ‘அலைபாயுதே’ ஆல்பத்தில் இடம்பெற்று ஹிட் அடித்த ‘சினேகிதியே’ பாடலுக்கு இணையான மெர்சல் ஆல்பத்தின் நீதானே பாடல் 'ஆளப் போறான் தமிழன்’ ஆராவார அரசியல் அறிமுகப் பாடலின் துள்ளலில் அடங்கிப்போனது.

இழப்பை உணர்த்திய இசை

‘தரமணி’ படத்தின் பாடல்களுக்கு யுவன் வழங்கியிருந்த இசை, கவிதைகளையே வரிகளாக எழுதிவந்த முத்துக்குமாரின் இழப்பு எத்தகையது என்பதை நமக்கு உணர்த்துகின்றன. ‘தரமணி’யைத் தவிர்த்து யுவனின் மற்ற பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. யுவன் சங்கர் ராஜா வழக்கம்போல் மிக அற்புதமான பாடல்களையும் மிக மோசமான பாடல்களையும் அளித்துத் தன் நிலையற்ற தன்மையை மெய்ப்பித்துக்கொண்டே இருக்கிறார். இருப்பினும், பின்னணி இசையில் தான் இளையராஜாவின் அசைக்க முடியாத வாரிசு என்பதை இந்த வருடமும் நிரூபித்திருக்கிறார்.

தொடரும் சாயல்

இமானின் ‘எம்புட்டு இருக்குது ஆசை’, ‘அம்முக் குட்டியே’, ‘செந்தூரா’, ‘அந்தப் புள்ள மனச’, ‘ஆஹா ஆஹா ஆதாம் ஏவாள்’ போன்ற பாடல்கள் நல்ல மெலடிகள்தான். இருப்பினும், ‘கும்கி’ படத்தின் இசையின் மூலம் தன் மேல் ஏற்றிக் கொண்ட சுமையை இறக்க முடியாமல் தடுமாறுவது இமானுக்கு இந்த வருடமும் தொடர்கிறது. தன் பழைய பாடல்களின் சாயலும் முன்னோடிகளின் சாயலும் இல்லாமல் தனித்து நிற்கும் கதைகளும் ரசனையான இயக்குநர்களும் அவருக்கு அமைந்தால் தனித்துவம் நோக்கி அவர் பயணிக்கலாம். இருப்பினும், தனது டெம்பிளேட் இசையிலிருந்து அவர் வெளிவர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

கிட்டத்தட்ட இதே நிலையில்தான் அனிருத்தும் பயணித்து வருகிறார். ‘3’ படத்தில் ‘கண்ணழகா’ போன்று இதயத்தை உருக்கும் மென்மையான மெலடிகளை அளித்த இவர், தற்போது ஒலிகளுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிக்கிறார். ஜனரஞ்சகப் பாடல்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, தனது இயல்பான ‘கம்போஸிங் திறமை’க்கும் கொடுத்தால் தனித்து நிற்கும் இசையை அவர் கொடுக்க முடியும். இதற்கு ‘வேலைக்காரன்’ படத்தின் இரு பாடல்கள் கட்டியம் கூறுகின்றன.

ராஜாவின் மெலடிகள்

‘வா வா மகளே’, ‘மகளே மகளே’, ‘கான ரீங்காரம்’ போன்ற பாடல்கள்மூலம் ஆன்மாவை உலுக்கும் மெட்டுக்களுக்கு இன்றும் தான் மட்டுமே ராஜா என்பதை இளையராஜா நிரூபிக்கிறார். அவருடைய தவறான படத் தேர்வால், டிஜிட்டல் ஒலிகளின் இரைச்சல் நிறைந்திருக்கும் இசைச் சந்தையில் மின்னி மறைந்துவிடும் அவருடைய பல நல்ல பாடல்கள் இளைய ரசிகர்களின் கவனத்துக்கு வராமலேயே சென்றுவிடுகின்றன. தாஜ்நூர் இசையமைப்பில் வெளியான ‘குரு உச்சத்துல இருக்காரு’ படத்தில் இடம்பெற்ற ‘போதும் ஒத்த சொல்ல’ இதமான மெலடியாக இருந்தது.

நேர்த்தியான பாடல்களாலும் பின்னணி இசையாலும் ‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் ஷான் ரோல்டன் கவர்ந்திழுத்தார். ஆனால், அதற்குப் பின் வந்த படங்களில் அதைத் தக்கவைக்க முடியாத சமாளிப்புகளே அவரின் இசையாக வெளிப்பட்டது. ஹாரிஸ் ஜெயராஜ் இந்த வருடமும் இறங்கு முகத்தில்தான் உள்ளார். சந்தோஷ் நாராயணனுக்கும் இந்த வருடம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றாலும் ‘மேயாத மான்’ ஆல்பத்தில் இடம்பெற்று ரசிகர்களை முணுமுணுக்க வைத்த ‘அடியே எஸ்.மது’ உள்ளிட சில பாடல்கள் கவர்ந்தன.

மின்னும் இளைய தலைமுறை

ஜிப்ரானுக்கு அடுத்தபடியாக ஆரோல் கரோலி, ஷாம் சி.எஸ், விஷால்சந்திரசேகர், கிரிஷ் ஆகிய புதிய தலைமுறை இசையமைப்பாளர்கள் நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர். ‘துப்பறிவாள’னில் ஆரோல் கரோலியின் பின்னணி இசையும், ‘விக்ரம் வேதா’வில் ஷாமின் பின்னணி இசையும் அந்தப் படங்களின் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது. அதே போன்று ‘8 தோட்டாக்கள்’ படத்தின் சுந்தரமூர்த்தி, ‘பண்டிகை’ படத்தின் விக்ரம், ‘அருவி’ படத்தின் பிந்து மாலினி மற்றும் வேதாந்த் பரத்வாஜ் மிகவும் கவனிக்கத்தக்கவர்களாக உள்ளனர். இதற்கிடையில் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகி தாக்கம் எதையும் ஏற்படுத்தமுடியாமல் போனார்.

ரஹ்மானின் ‘நீ தானே’ அனிருத்தின் ‘இதயனே’, ஜிப்ரானின் ‘மெல்ல மெல்ல’, வித்யாசாகரின் ‘நீ பார்க்கும்’, அருவியின் ‘அசைந்தாடும் மயில்’ யுவனின் ‘யாரோ உச்சிக் கிளை மேலே’ ‘மழை மேகம்’, ஷாம் சி.எஸ்ஸின் ‘மழைகுள்ளே’, சுந்தரமுர்த்தியின் ‘நீ இல்லையென்றால்’போன்ற பாடல்கள் நம் மனதை இதமாக வருடிச் சென்றன. ஆனால், ரஹ்மானின் ‘ஆளப் போறான் தமிழன்’ அனிருத்தின் ‘கருப்பனெல்லாம் கலிஜாம்’, ‘சர்வைவா’ ஹிப் ஹாப் ஆதியின் ‘வாடி உள்ளே வாடி’, ஹாப்பி ஹாப்பி நியூ இயர்’, சந்தோஷ் நாராயணின்‘அடியே எஸ்.மது’ போன்ற பாடல்கள்தான் இந்த வருடம் திரையரங்குகளை அதிகம் அதிர வைத்தன.

திரை இசை என்பது இன்றும் பாடல்களின் தரத்தில் அடிப்படையில்தான் அளவிடப்படுகிறது. பாடல்களில் கவரும் பலர் இன்னும் பின்னணி இசைபற்றிய புரிதலே இல்லாமல் நம் காதுகளைப் பதம் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறனர். இருப்பினும் ஜிப்ரான், ஆரோல் கரோலி, சாம் சி.எஸ் போன்ற புதிய தலைமுறை இசையமைப்பாளர்கள் இதற்கு அளிக்கும் முக்கியத்துவம் சற்று நம்பிக்கையளிப்பதாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x