Last Updated : 22 Dec, 2017 11:20 AM

 

Published : 22 Dec 2017 11:20 AM
Last Updated : 22 Dec 2017 11:20 AM

வேட்டையாடு விளையாடு 13: எட்டு ஜோடிகளின் வாழ்க்கை!

 

 

1. எட்டு ஜோடிகளின் வாழ்க்கை!

‘லவ் ஆக்சுவலி’. நேசத்தின் செய்தியைத் தலைப்பிலேயே சொல்லும் இந்தப் படத்தின் மொத்தக் கதையும் லண்டனைச் சேர்ந்த எட்டு ஜோடிகளின் வாழ்க்கையில் நடக்கும் பிரிவும் இணைவும்தான். இந்தக் கதைகளில் பிரிட்டிஷ் பிரதமரின் காதல் கதையும் இடம்பெற்றுள்ளது. பிரதமரின் காதலில் இடையூறை ஏற்படுத்துபவர் அமெரிக்க அதிபர். இந்த ஆறு பேரின் வாழ்க்கையிலும் நம்பிக்கையும் காதலும் நேசமும் கிறிஸ்துமஸ் நாளன்று துளிர்க்கிறது.

செப்டம்பர் 11 விமானத் தாக்குதலில் பலியான அப்பாவிப் பயணிகள் இறக்கும் தருவாயில் தங்கள் பிரியமானவர்களுக்கு விடுத்த செய்தியில் அன்பைத் தவிர வேறெதுவுமில்லை என்பது படத்தின் தொடக்கத்திலேயே டேவிட் என்ற கதாபாத்திரத்தின் குரலில் நினைவூட்டப்படுகிறது. 2003-ல் வெளியாகி வெற்றிபெற்ற இத்திரைப்படம், பண்டிகைக் காலத்தில் சிரித்துக் கொண்டாடி மனம் நெகிழ்ந்து பார்ப்பதற்கான படைப்பாகக் கருதப்படுகிறது.

ஹக் கிராண்ட், எம்மா தாம்சன், பில் நை எனப் பெரும் நட்சத்திரப் படையே நடிக்க, பெரும்பாலும் பண்டிகைப் பருவத்தின் இரவுப் பின்னணியில் பாடல்களுடனும் நடனங்களுடன் எடுக்கப்பட்ட இப்படத்தை இயக்கியவர் ரிச்சர்ட் கர்டிஸ். இத்திரைப்படத்தில் ரூபஸ் என்ற கதாபாத்திரமாக பரிசுப் பொட்டலத்தைத் திரும்ப திரும்ப உருவாக்கும் சேல்ஸ்மேனாக நடித்தார் ரோவான் அட்கின்சன். மிகப் பிரபலமான அந்த நகைச்சுவைக் கதாபாத்திரத்தின் பெயர் என்ன?

 

2.வளைந்துகொடுத்த ஆஸ்கர்!

கருணையையும் மன்னிக்கும் இயல்பையும் குழந்தைகளுக்கு வலியுறுத்தும் வகையில், சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய கதையைத் தழுவி 1971-ல் எடுக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படம் ‘எ கிறிஸ்துமஸ் கரோல்’. முதலில் தொலைக்காட்சித் திரைப்படமாக எடுக்கப்பட்டு, பின்னர் திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டு வெற்றிபெற்றது. ரிச்சர்ட் வில்லியம்ஸ் இயக்கிய இத்திரைப்படத்தின் உருவாக்கத்தில் தலைசிறந்த அனிமேட்டரான கென் ஹாரிஸின் பங்களிப்பு முக்கியமானது.

சார்லஸ் டிக்கன்ஸின் கதைகளை அடிப்படையாக வைத்து வெளியான திரைப்படைப்புகளில் ஆஸ்கர் விருதை வென்ற படம் இதுதான். 1972-ம் ஆண்டுக்கான சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்காக இந்த விருது கிடைத்தது. தொலைக்காட்சியில் வெளியான ஒரு படைப்புக்காகத் தனது விதிகளையே இந்தக் குறும்படத்துக்காகத் தளர்த்தியது ஆஸ்கர் அமைப்பு. அன்பு, ஈகையின் மகிமையை உணராத பணக்காரக் கஞ்சன் எபினேசர் க்ரூஜ்ஜை மூன்று ஆவிகள் கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள் இரவு திருத்துவதாக எழுதப்பட்ட இந்த கிளாசிக், எந்த ஆண்டு புத்தக வடிவில் வெளியிடப்பட்டது?

3. வடதுருவம் நோக்கி ஒரு ரயில் பயணம்!

சாண்டா கிளாஸ் வசிப்பதாகச் சொல்லப்படும் வடதுருவ உறைபனிப் பகுதிக்கு மந்திர ரயிலொன்றில் பயணிக்கும் சிறுவனின் சாகசம்தான் 2004-ல் வெளியான ‘போலார் எக்ஸ்பிரஸ்’. லைவ் ஆக்‌ஷன் அனிமேஷன் வகையில் கிளாசிக் என்று கருதப்படும் இப்படம் குடும்பம் மொத்தமும் உட்கார்ந்து கண்டுகளிக்க வேண்டிய படமாகும். ‘பெர்பார்மன்ஸ் கேப்ட்சர்’ உத்தியில் உருவான முதல் முழு நீளக் கதைப்படம் இது. எந்தப் பின்னணியோ அரங்கப் பொருட்களோ இல்லாமல் நடிகர்கள் முழுமையாகக் கற்பனையில் நடிக்க வேண்டிய சவால் இத்தொழில்நுட்பத்தில் உள்ளது. குழந்தைகளுக்கான கதாசிரியர் க்ரிஸ் வேன் ஆல்ஸ்பர்க் எழுதிய சித்திரக் கதையை அடிப்படையாகக் கொண்டு ராபர்ட் ஜெமெக்கிஸ் இயக்கிய இத்திரைப்படத்தில் நடித்த ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் யார்?

4. கேரளம் தந்த படம்

கேரள திரைப்பட ரசிகர்கள், பைபிள், கிறிஸ்துவின் வாழ்க்கை தொடர்பான ஆங்கிலத் திரைப்படங்களைப் பெரும் வெற்றிபெறச் செய்தவர்கள். கிறிஸ்துவின் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட மலையாள நாடகங்களும் பெரும் வெற்றிபெற்றவை. இயேசுவின் கதை முழுமையாகக் கையாளப்பட்ட மலையாளத் திரைப்படம் ஜீசஸ். 1973 டிசம்பர் 21 அன்று வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. தமிழிலும் வெளியிடப்பட்டு வசூலைக் குவித்தது.

பி. ஏ. தாமஸ் யுனிவர்சல் பிக்சர்ஸ் பேனரில் தயாரித்து இயக்கிய இத்திரைப்படத்தின் பாடல்கள் இன்றும் புகழ்பெற்றவை. எம். எஸ். விஸ்வநாதன், யேசுதாஸ், ஆலப்புழை ரங்கநாத், ஜோசப் கிருஷ்ணா ஆகியோர் சேர்ந்து இசையமைத்திருந்தனர். முரளி தாஸ் இயேசுவாகவும், ஜெமினி கணேசன் ஞானஸ்நானம் அளிக்கும் யோவானாகவும் எம். என். நம்பியார், இயேசுவின் சீடர் யூதாசாகவும் நடித்திருந்தனர். கே. ஜே. யேசுதாஸ் பாடிய ‘காகுல்தா மலைகளே’ இன்றும் நினைவுகூரப்படும் பாடல். இப்படத்தில் சலோமி கதாபாத்திரத்தில் நடித்த புகழ்பெற்ற நடிகையும் ஆளுமையும் யார்?

5. மன்னிப்பைக் கோரும் ஆவணம்!

ஆப்ரிக்கெனர் ரெஸிஸ்டெனர் மூவ்மெண்ட் என்றழைக்கப்படும் வெள்ளை ஏகாதிபத்திய அமைப்பைச் சேர்ந்தவர்களால் 1996-ல் கிறிஸ்துமஸ் அன்று ஒரு குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. தென் ஆப்ரிக்காவிலுள்ள வோர்செஸ்டர் நகரத்தில் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் ஒரு கறுப்பினத் தாயும் அவருடைய மூன்று குழந்தைகளும் கொல்லப்பட்டனர். அந்தக் குண்டுவெடிப்புத் தாக்குதல் குழுவிலிருந்த இளைய குற்றவாளியான ஸ்டெபான்ஸ் கோய்ட்ஸீ, தன்னால் பாதிக்கப்பட்டவர்களிடம் சென்று பேசி அவர்களிடம் மன்னிப்பு பெறுவதே ‘ப்ளாக் கிறிஸ்துமஸ்’ ஆவணப்படம். புகழ்பெற்ற இயக்குநர் மார்க் கப்லான் இயக்கிய இப்படம் நிறவெறியின் பாதிப்புகளை ஒடுக்கப்பட்டவர்கள் பார்வையிலிருந்து மட்டுமல்ல ஒடுக்குமுறையாளர்களின் தரப்பிலிருந்தும் பேசுவது. மனித உரிமைகள், இனவெறிப் பிரச்சினைகள் தொடர்பாகத் தொடர்ந்த ஆவணப்படங்கள் எடுத்துவரும் மார்க் கப்லான் தனது எந்த ஆவணப்படத்துக்காக 2005-ல் எம்மி விருது பெற்றார்?

விடைகள்: 1.மிஸ்டர் பீன், 2. 1843, 3.டாம் ஹாங்ஸ், 4.ஜெயலலிதா, 5.எ லயன்ஸ் ட்ரையல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x