Last Updated : 17 Nov, 2017 09:23 AM

 

Published : 17 Nov 2017 09:23 AM
Last Updated : 17 Nov 2017 09:23 AM

வேட்டையாடு விளையாடு 09: தொலைக்காட்சியிருந்து ஒரு சூப்பர் ஸ்டார்!

 

இந்திய மாற்று சினிமா இயக்குநர்களில் ஒருவரும் சிறந்த ஆவணப்படங்களை உருவாக்கியவருமான மணி கவுல் இயக்கிய படம் ‘இடியட்’ (1992). பாலிவுட்டின் ராஜாவான ஷாரூக் கானின் முதல் திரைப்படம் இது. ரஷ்ய நாவலாசிரியர் பியோதர் தாஸ்தாயேவ்ஸ்கி எழுதிய ‘இடியட்’ நாவலின் தழுவலான இப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. மாறாக, தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நான்கு பாகங்களாகத் திரையிடப்பட்டது. சில திரைப்பட விழாக்களில் மட்டுமே திரையிடப்பட்டது.

‘தியேட்டர் ஆக்ஷன் க்ரூப்’ என்ற டெல்லி நாடகக் குழுவில் நடிகராகவும், தேசிய நாடகப் பள்ளியின் மாணவருமான ஷாரூக் கான், தொலைக்காட்சி நாடகங்களில் நடிப்பதிலேயே ஈடுபாட்டுடன் இருந்தவர். ஷாரூக் கான் சிறுவனாக இருந்தபோது அவருடைய தந்தை முதலில் வாங்கித் தந்த புத்தகங்களில் ஒன்று ‘இடியட்’. இந்த சென்டிமெண்டும் இப்படத்தில் ஷாரூக் நடிப்பதற்குக் காரணம். பாலிவுட் சினிமாவில் நடிக்கத் தனது தோற்றம் சரிவராது என்ற எண்ணத்தில் இருந்தவர். மணி கவுல் இயக்கத்தில் நடித்த பிறகும் தொலைக்காட்சி நாடகங்களிலேயே தொடர்ந்த ஷாரூக் கானை யாருடைய மரணம் சினிமாவை நோக்கி நகர்த்தியது?

2.ஒரு கிராமத்தின் கதை

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் இங்மார் பெர்க்மனுக்கு சர்வதேச அந்தஸ்தை உருவாக்கிய திரைப்படம் ‘தி செவன்த் சீல்’. 1957-ல் வெளியான இப்படம், நேசம், தியாகம், வலி, கடவுளின் இருப்பு, மரணம் தொடர்பான பிரச்சினைகளை 14-ம் நூற்றாண்டில் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஐரோப்பியக் கிராமத்தின் பின்னணியில் விசாரணை செய்கிறது. மரணதேவனுக்கும் சிலுவைப் போரிலிருந்து திரும்பும் வீரன் அண்டோனியஸ் ப்ளாக்குக்கும் நடைபெறும் உரையாடல் பகுதி பிரபலமானது. மத்திய கால ஐரோப்பியக் கட்டிடப் பின்னணியை பெர்க்மன் தன் தந்தை பணியாற்றிய தேவாலயத்தில் பார்த்த புடைப்புச் சிற்பங்களில் இருந்து உருவாக்கியிருந்தார்.

மிகத் துயரமான காலகட்டங்களிலும் நம்பிக்கையும் சிரிப்பும்தான் வாழ்க்கையைக் காப்பாற்றும் என்று தெருக்கூத்தாடித் தம்பதியின் வழியாகவும் அவர்களது குட்டிப்பையன் வழியாகவும் சொல்லியிருப்பார் பெர்க்மன். சரித்திர காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்க இங்க்மர் பெர்க்மனுக்கு உந்துதலாக இருந்த திரைப்பட இயக்குநர் யார்?

3.முந்திக்கொண்ட இயக்குநர்!

விமான ஓட்டி, விமானப் போக்குவரத்து நிறுவனர், திரைப்பட இயக்குநர், சாகசக்காரர் எனப் பல முகங்களைக் கொண்ட அமெரிக்கத் தொழிலதிபர் ஹோவர் ஹியூஸ். அவரது வாழ்வும் சரிவும் ஒரு சிறந்த திரைப்படத்துக்கான அத்தனை அம்சங்களையும் கொண்டது. ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், கிறிஸ்டோபர் நோலன் உட்படப் பல இயக்குநர்கள் ஹோவர் ஹியூஸின் வாழ்க்கையைத் திரைப்படமாக்கிவிட வேண்டும் என்பதைத் தங்கள் கலைவாழ்வின் லட்சியங்களில் ஒன்றாக வைத்திருந்தனர். ஆனால், ஹோவர் ஹியூஸின் வாழ்வைத் வெற்றிகரமாகத் திரைப்படமாக்கியவர் மார்டின் ஸ்கார்சிஸி. ‘ஹோவர் ஹியூஸ்: தி சீக்ரெட் லைப்’ என்ற சுய சரிதை நூலை அடிப்படையாகக் கொண்டு, ஸ்கார்சிஸி இயக்கி 2004-ல் ‘தி ஏவியேட்டர்’ என்ற தலைப்பில் வெளியானது.

வெற்றிகரமான இயக்குநர்-நாயகக் கூட்டணியான மார்டின் ஸ்கார்சிஸி- லியனார்டோ டி காப்ரியோ கூட்டணி இணைந்த இரண்டாவது படம் இது. 20-ம் நூற்றாண்டின் தொடக்க காலகட்டத்தைப் பழைய லைட்டிங் தொழில்நுட்பங்களையும் ஆரம்பகால வண்ணக்கலவை முறைகளையும் சேர்த்து உருவாக்கியிருப்பார்கள். 11 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இத்திரைப்படம் எத்தனை ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது?

4.இயக்குநர் ஆன ஒளிப்பதிவாளர்!

ஜெமினி ஸ்டுடியோஸ் நிறுவனத்தில் லேப்மேன் ஆக இருந்த பி.எஸ். ரங்கா இயக்கிய படம் ‘நிச்சய தாம்பூலம்’ (1962). ஒளிப்பதிவாளராக ‘பக்த நாரதர்’(1942) படத்தில் அறிமுகமான பி.எஸ். ரங்கா, பெங்களூருவில் முதல் கலர் லேபை அமைத்தவர். தமிழ், தெலுங்கு, இந்தியில் புராணப் படங்களையும் கிராமியப் படங்களையும் எடுத்து வெற்றிபெற்றவர். ‘நிச்சய தாம்பூலம்’ படத்துக்கு ஒளிப்பதிவு, தயாரிப்பு, இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, அதை வெற்றிப் படைப்பாக்கினார்.

நடிகை ஜமுனாவுக்கு இந்தப் படத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. கடுமையான காவல் துறை அதிகாரி, ஊதாரி மகன், அன்பான தாயைச் சுற்றிய கதை இது. ரங்கா ராவ், சிவாஜி கணேசன், பி.கண்ணாம்பா ஆகியோர் நடித்திருந்த இப்படத்தின் பாடல்கள் புகழ்பெற்றவை. இந்தப் படத்துக்காக டி.எம். சௌந்திரராஜன் குரலில் இன்றும் புகழ்பெற்ற பாடலாக வலம் வரும் அந்தப் பாடல் எது?

5.நிறைவு தராத படைப்பு

பரத நாட்டியத்துக்கு 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சமூகரீதியான புறக்கணிப்பு இருந்தது. அதை மீறி, அந்தக் கலையைத் தன் மேதைமையாலும் மரபுவழி பெற்ற சம்பிரதாய ஞானத்தாலும் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்றவர் நடனக் கலைஞர் பாலசரஸ்வதி. அவரது நடனத்தைப் பார்ப்பதற்கான ஒரே காட்சி ஆவணம் 1976-ல் வெளியான ‘பாலா’ என்ற ஆவணப்படம். நிகழ்த்துகலைகளுக்கான தேசிய மையம், தமிழ்நாடு அரசு இரண்டும் சேர்ந்து தயாரித்த இந்த ஆவணப்படத்தை இயக்கியவர் சத்யஜித் ராய்.

கோயில் சிற்பங்களில் பதிவாகியிருக்கும் பரத நாட்டியத்தின் மரபைப் பிரதிபலிக்கும்விதமாக அமைந்த, பாலசரஸ்வதியின் நடனத்தை மையமாகக் கொண்ட ஆவணப்படம் இது. பாலசரஸ்வதி தனது நடன வாழ்வில் உச்சமாக இருந்தபோது இந்த ஆவணப்படத்தை சத்யஜித் ராய் திட்டமிட்டிருந்தார். ஆனால், பாலசரஸ்வதியின் 58-ம் வயதிலேயே இந்தப் படம் சாத்தியமானது. சத்யஜித் ராய், பாலசரஸ்வதி இருவருக்குமே நிறைவு தராத படைப்பு இது. சத்யஜித் ராய் தனது எந்த வயதில் பாலசரஸ்வதியின் நடனத்தைப் பார்த்தார்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x