Last Updated : 27 Oct, 2017 11:09 AM

 

Published : 27 Oct 2017 11:09 AM
Last Updated : 27 Oct 2017 11:09 AM

நீர்க்குமிழி: முதல் பின்னணிப் பாடகி

 

டிப்பைவிட சங்கீதமே பிரதானமாகக் கருதப்பட்டுவந்த காலம் அது. ‘மேனகா’(1935) போன்ற சமூக சீர்திருத்த படங்கள் வெளிவந்துவிட்ட 1940 மற்றும் 50களில் சங்கீத வித்வான்களுக்கும் நல்ல தோற்றம் கொண்ட பாடகிகளுக்கும் சினிமாவில் நடிக்கும் அதிர்ஷ்டம் அடித்தது. பாட்டுத் திறமை இருந்தவர்களிடம் நடிப்புத் திறமையும் இருந்தால் ரசிகர்களால் வரவேற்கப்பட்டார்கள். பி.ஏ.பெரியநாயகி என்று புகழ்பெற்ற பண்ருட்டி ஆதிலட்சுமி பெரியநாயகி அப்படிப்பட்ட அழகிய தோற்றம் கொண்ட சங்கீத வித்தகியாக இருந்தார்.

பண்ருட்டியிலிருந்து புறப்பட்டவர்

பேசும்படம் மட்டுமின்றி கிராமபோன் இசைத்தட்டு உலகமும் அகில இந்திய வானொலியும் சங்கீதத்தை பெரிதும் நம்பியிருந்த அந்நாட்களில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வருகை, இசைத்தட்டுகள் வழியே 1930-களிலேயே நிகழ்ந்துவிட்டது.

என்.சி.வசந்தகோகிலம், டி.கே.பட்டம்மாள் ஆகிய இருவரும் அடுத்துவந்த பத்தாண்டுகளில் பிரபலமானார்கள். இந்த மூவருக்கும் அடுத்த நிலையில் பெரும்புகழ் ஈட்டியிருக்கவேண்டிய பல சிறந்த சங்கீதப் பாடகிகள் சட்டென்று மறக்கப்பட்டார்கள்.

அந்த வரிசையில் தமிழ் சினிமாவின் முதல் பின்னணிப் பாடகி என்ற பெருமைக்குரியவரான பி.ஏ.பெரியநாயகியின் திரைப்பிரவேசம் அவரது பாட்டுத் திறமையினால் நிகழ்ந்தது. உச்ச ஸ்தாயிலில், மெச்சத்தக்க இனிமையுடன் பாடக்கூடிய அபாரமான குரல்வளமும் பார்வைக்குப் பாந்தமான தோற்றமும் கொண்டிருந்த பெரியநாயகி, சென்னையை அடுத்த பண்ருட்டி வட்டத்தில் உள்ள திருவதிகை என்ற ஊரில் பிறந்தவர். பெரிய நாயகியின் தாயார் ஆதிலட்சுமி, ‘பண்ருட்டி அம்மாள்’ என்ற பட்டப்பெயருடன் ‘மதராஸ் பிரெசிடென்ஸி’ அறிந்த கர்நாடக சங்கீதப் பாடகியாக இருந்தார்.

இலங்கைக்குக் கச்சேரிகள் பாடச் சென்ற அவர், அங்கே சங்கீத ஆசிரியையாக மாறினார். இதனால் குடும்பம் இலங்கைக்குக் குடிபெயர்ந்தது. ஆதிலட்சுமிக்கு பாலசுப்பிரமணியன், ராஜாமணி, பெரியநாயகி என மூன்று பிள்ளைகள். மூவரையுமே சங்கீதத்தில் பழக்கினார் ஆதிலட்சுமி. சகோதரன், சகோதரியுடன் தனது பத்தாவது வயதுவரை இலங்கையில் வளர்ந்தார் பெரியநாயகி. இசைத்தட்டு நிறுவனங்களும் பேசும்படமும் சங்கீதத் திறமைகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதைக் கண்ணுற்ற ஆதிலட்சுமி, தனது பிள்ளைகளுடன் தாயகம் திரும்பி, சென்னை திருவல்லிக்கேணியில் குடியேறினார்.

தாயார் மூலம் அடிப்படை சங்கீத ஞானம் பெற்றிருந்தாலும் பத்தமடை சுந்தர ஐயரிடம் ராஜாமணியும் பெரியநாயகியும் முறையாகச் சங்கீதம் பயின்று அரங்கேற்றம் செய்தனர். அதைத் தொடர்ந்து சகோதரிகள் இருவருக்குமே கச்சேரிகள் கிடைத்தன. அம்மா ஆதிலட்சுமி எதிர்பார்த்ததுபோலவே முன்னணி கிராமபோன் ரெக்கார்ட் நிறுவனங்கள் மகள்கள் இருவருக்கும் பாடும் வாய்ப்புகளை வழங்கின. அதில் ஏ.வி.மெய்யப்பனின் சரஸ்வதி சவுண்ட் கம்பெனியும் ஒன்று.

 27CHRCJ_GEETHAGANDHAI கீதகாந்தி படத்தில்

சகோதரியுடன் முதல் வாய்ப்பு

அந்தக் காலத்தில் ரெக்கார்டு உலகில் பிரபலமாகிவிட்டால் அடுத்த வாய்ப்பு, பாடி நடிக்கும் திரைப்படமாக இருந்தது. சி.வி.ராமன் இயக்கத்தில் 1940-ல் வெளியான ‘விக்ரம ஊர்வசி அல்லது ஊர்வசியின் காதல்’ என்ற படத்தில் பெரியநாயகியின் அக்காள் பி.ஏ.ராஜாமணிக்கு நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அதே படத்தில் காந்தர்வக் கன்னியாகச் சிறு வேடத்தில் பாடி நடிக்கும் வாய்ப்பு பி.ஏ.பெரியநாயகிக்கு அமைந்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘என்னைப்போலே பாக்கியவதி யார்?’ என்ற பாடல்தான் திரைப்படத்துக்காக பெரியநாயகி பாடிய முதல் பாடல்.

இந்தச் சகோதரிகள் பின்னர் லேனா செட்டியார் தயாரிப்பில் டி.ஆர்.ரகுநாத் இயக்கிய ‘பிரபாவதி’(1944) படத்திலும் இணைந்து சிறு வேடங்களில் தோன்றினர். ஆனால் அக்காள் ராஜாமணியைவிட கூடுதல் கவனமும் புகழும் தங்கையான பெரியநாயகிக்கே கிடைத்தது. அதற்குக் காரணமாக அமைந்தது ஏ.வி.எம்மின் ‘சபாபதி’(1941) திரைப்படம். இந்தப் படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன் - ஆர்.பத்மா ஜோடியின் திருமண வரவேற்புக் காட்சியில் பி.ஏ.பெரியநாயகியின் கச்சேரியையே இடம்பெறச்செய்தார் படத்தை இயக்கித் தயாரித்த ஏ.வி.மெய்யப்பன்.

பெரியநாயகி பாடத் தொடங்கும் முன்னார், திருமண வரவேற்பு அழைப்பிதழின் பின்பக்கத்தில் ‘சங்கீத நிகழ்ச்சி’ பி.ஏ.பெரியநாயகி என அச்சிடப்பட்டிருப்பதை திரை முழுவதும் க்ளோஸ் அப்பில் காட்டி, சங்கீதத்தைப் பெருமைப்படுத்தியிருந்தார் மெய்யப்பன்.

27CHRCJ_PANJAMIRUTHAMrightஸ்ரீவள்ளியில் கிடைத்த அங்கீகாரம்

அதன்பிறகு டி.ஆர். மகாலிங்கம், குமாரி ருக்மணி நடித்த ‘ஸ்ரீவள்ளி’(1945) படத்தைத் தயாரித்து இயக்கினார் மெய்யப்பன். படம் முடிந்து முதல் பிரதியைத் திரையிட்டுப் பார்த்தபோது அதிர்ந்துபோனார். டி.ஆர்.மகாலிங்கத்தின் வெண்கலக் குரலுக்கு ஈடுகொடுக்கும்விதமாக இல்லை குமாரி ருக்மணி பாடியிருந்த பாடல்கள். படப்பெட்டிகள் அனைத்தும் தயாராகி, பிரதிகள் பல ஊர்களுக்கு அனுப்பிவிட்டிருந்த நிலையில் அவை அனைத்தையும் திரும்ப அனுப்பும்படி தந்தி கொடுத்தார்.

பி.ஏ.பெரியநாயகியை அழைத்து ருக்மணி பாடியிருந்த எல்லாப் பாடல்களையும் ஒரே நாளில் பாடவைத்துப் பதிவுசெய்தார். அன்று நவீன முறையாக அறிமுகமாகியிருந்த ‘போஸ்ட் சிங்க்ரனைசேஷன்’ முறையில் (post synchronisation method) ருக்மணியின் உதட்டசைவுகளுக்கு பெரியநாயகி பாடிய பாடல்களை இணைத்து இரவோடு இரவாகப் புதியப் படப் பிரதிகளை அச்சிட்டு மீண்டும் அனுப்பிவைத்தார். படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது மட்டுமல்ல, இப்புதிய முறையில் பாடிய முதல் பின்னணிப் பாடகி என்ற பெருமையும் பெரியநாயகிக்கு வந்து சேர்ந்தது.

பி.ஏ.பெரியநாயகியின் குரலுக்கும் நடிப்புக்கும் பெருமை சேர்த்த படங்களின் பட்டியலில் ‘கீதகாந்தி’, ‘பஞ்சாமிர்தம்’, ‘என் மனைவி’, ‘மனோன்மணி’, ‘மகாமாயா’ ‘பிரபாவதி’, ‘கிருஷ்ண பக்தி’, ‘தர்மவீரன்’, ‘ஏகம்பவாணன்’, ‘ருக்மாங்கதன்’ உட்பட 11 திரைப்படங்களுக்கு இடமுண்டு. சிறந்த பாடகியாக இருந்தும், இனி பாடத் தெரியவேண்டிய அவசியமில்லை, பெரிதாய் நடிக்கவும் வேண்டாம் என்ற நிலையை உருவாக்கிய ‘அழகு’ கதாநாயகிகளின் படையெடுப்பாலும் தொழில்நுட்பத்தாலும் வாய்ப்புகளை இழந்த இசைக்கலைஞர்களில் ஒருவராக மறக்கப்பட்டார்.பி.ஏ. பெரியநாயகி ஆனால் அவரது பாடல்கள் இன்றும் ரசிக்கப்பட்டு வருகின்றன.

படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x