Published : 20 Oct 2017 11:09 AM
Last Updated : 20 Oct 2017 11:09 AM

ஓய்வெடுக்க இது நேரமல்ல! - நடிகை சமந்தா பேட்டி

“சென்னை பல்லாவரம் பெண்ணான சமந்தா தற்போது ஆந்திர சினிமாவின் முன்னணி நட்சத்திரக் குடும்பமான அக்கிநேனி வீட்டு மருமகளாக ஐக்கியமாகிவிட்டார். ட்விட்டரிலும் தனது பெயரை ‘சமந்தா அக்கிநேனி’ என மாற்றிக்கொண்டிருக்கும் இந்த புதுமணப் பெண், தமிழ், தெலுங்கு சினிமாவில் இன்று அறிமுகமான கதாநாயகிபோல இளமை குன்றாமல் வலம் வந்துகொண்டிருக்கிறார். மத்தாப்புச் சிரிப்பை எப்போதும் அணிந்திருக்கும் இந்தத் தலைத் தீபாவளி நாயகியிடம் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி…

விஜயுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறீர்கள், எப்படி இருந்தது அனுபவம்?

விஜய் சாருடன் நடிப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவருக்கு மூன்று கெட்-அப்கள். அதை ஆறு மாதங்களில் முடிப்பது கடினம். அட்லி, விஜய் இருவருமே கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அதற்குக் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

திருமணத்துக்கு மிகவும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே அழைப்புவிடுத்தது ஏன்?

எனது திருமணம் எளிமையான முறையில் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இருந்தேன். நாக சைதன்யாவும் அதையே விரும்பினார். இருவரது குடும்பத்தினரும் சேர்ந்தே 200 நபர்கள் இருந்தார்கள். குறைந்த நபர்களை மட்டுமே அழைத்து, அவர்கள் அனைவரும் சிரித்துக் கொண்டாடி மகிழ்வதைக் காண வேண்டும் என்பது எங்களது இருவரின் ஆசையாக இருந்தது. அப்போதுதான் வந்திருக்கும் ஒவ்வொருவருமே என்ன நினைக்கிறார்கள் என்பது தெரியவரும். ஆயிரக்கணக்கில் அழைத்திருந்தால் ‘ஹாய்’ என்ற ஒற்றைச் சொல்லுடன் முடிந்திருக்கும்.

தமிழ், தெலுங்கு எனப் பல படங்களில் நடிப்பு, ட்வீக் நிறுவனம் தொடக்கம், பிரத்யூஷா தொண்டு நிறுவனம் இவற்றுக்கு இடையே திருமணப் பணிகள் என எப்படிச் சமாளித்தீர்கள்?

திருமணம் நெருங்கிவிட்டது, இன்னும் பணியாற்றிக்கொண்டேதான் இருப்பாயா என்று நண்பர்கள் கிண்டல் செய்தார்கள். ஏதாவது ஒரு விஷயம் செய்தால்கூட, இன்னும் புதிதாக செய்ய வேண்டும், நம்மை நிரூபிக்க வேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பேன். அதனால் மட்டுமே இன்னும் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.

ஒரு வெற்றி கிடைத்துவிட்டது; கொஞ்ச நாள் ஓய்வெடுக்கலாம் என்ற நினைப்பு வந்ததே இல்லை. திருமண வாழ்க்கையும் என் வேகத்தைத் தடுக்காது. பணம் மட்டுமே பிரதானம் என்பதற்காக நடிக்கவில்லை. நமது திறமையை இன்னும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைத்துத்தான் பணியாற்றி வருகிறேன். எப்போதுமே யதார்த்தமாக இருக்க வேண்டும் என நினைப்பேன். 24 மணி நேரத்தில் என்னால் செய்ய முடிந்த கொஞ்ச விஷயங்களைச் செய்கிறேன். நடிப்புத் துறையில் கடினமாக உழைப்பதுதான் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகிறது.

தெலங்கானா அரசுடன் இணைந்து கைத்தறி நெசவாளர்களுக்காகப் புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளதற்கான காரணம் என்ன?

கைத்தறி நெசவைப் பொறுத்தவரை இன்னும் பழைய முறையிலேயே பணிபுரிந்து வருகிறார்கள். கால மாற்றத்துக்கு ஏற்றாற்போல் புதுமையான விஷயங்களை அதில் புகுத்த வேண்டும். தற்போது முழுமையாக எனது ட்வீக் நிறுவனம் செயல்படத் தொடங்கவில்லை. இன்னும் பல நெசவாளர்கள் எங்களோடு இணைந்தால் மட்டுமே அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கட்டுப்படியாகும் விலைக்கு விற்பனை செய்ய முடியும். அடுத்த ஆண்டுக்குள் நல்லதொரு முடிவுடன் புதுமையான விஷயங்களைக் கைத்தறி நெசவில் கொண்டுவந்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடித்து வரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் குறித்து...

சினிமா மீதான காதலுக்காக நான் நடித்திருக்கும் படம். எவ்வளவு பெரிய வெற்றியடையும், எவ்வளவு வசூல் கிடைக்கும் என்ற எண்ணமில்லாமல் தைரியமாக இயக்குநர் கதையை எழுதியுள்ளார். கண்டிப்பாக இந்த எண்ணத்துக்காகவே இயக்குநரைப் பாராட்ட வேண்டும். விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட அனைவருமே பணத்தைப் பெரிதாக மதிக்காமல் இயக்குநருக்காக நடித்திருக்கிறோம்.

திருமணத்துக்குப் பிறகு பழைய மாதிரி அனைத்து வேடங்களிலும் நடிக்க முடியும் என நினைக்கிறீர்களா?

திருமணமாகி விட்டாலும் எனது திரையுலக வாழ்வில் எந்தவொரு மாற்றமும் நிகழாது. படங்களின் தேர்வைப் பொறுத்தவரை, நானே நிறைய மாறியிருக்கிறேன். நடிப்பில் 8 ஆண்டுகளைக் கடந்திருப்பதால் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பப்படுகிறேன். மிகவும் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை. ஒரே விதமான கதாபாத்திரங்களில் நடிப்பதால் போராடிக்கிறது.

நாக சைதன்யா பற்றி?

திருமணத்துக்குப் பிறகு நான் நடிப்பை விட்டுக் கொடுத்து விடுவேன் என்று நாக சைதன்யா மிகுந்த கவலையாக இருந்தார். தமிழ், தெலுங்கு திரைப்பட உலகில் திருமணம் ஆன பெண்களுக்கு நிலவும் பாதுகாப்பற்ற தன்மையை நான் அகற்ற வேண்டும். திருமணத்துக்குப் பிறகு முன்பைவிட பிஸியாக நான் நடிப்பதை இந்த உலகம் காண வேண்டும் என சைதன்யா விரும்பினார். நிச்சயமற்ற தன்மை திரையுலகில்கூட நிலவலாம், குடும்பத்தில் என்னைப் பாதுகாப்பாக உணரவைத்துதான் அவர் எனக்குத் தந்திருக்கும் சிறந்த பரிசு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x