Last Updated : 20 Oct, 2017 11:08 AM

 

Published : 20 Oct 2017 11:08 AM
Last Updated : 20 Oct 2017 11:08 AM

வேட்டையாடு விளையாடு 05:முரசு நடனத்துக்கு முன்னோடி!

1. முரசு நடனத்துக்கு முன்னோடி!

ந்தியாவின் புகழ்பெற்ற நடனக் கலைஞர் உதய் சங்கர் எடுத்த ஒரே திரைப்படம் `கல்பனா’. இந்தியாவின் செவ்வியல், நாட்டுப்புற, பழங்குடி நடன வடிவங்களை இணைத்து, 1944-ம் ஆண்டில் சென்னை ஜெமினி ஸ்டுடியோவில் தொடங்கப்பட்ட கனவுப் படைப்பு இது. பெரும் எண்ணிக்கையிலான நடனக்கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், ஆசிரியர்கள் எல்லாரும் இணைந்து ஒத்திகை பார்த்து நடுநடுவே படமெடுத்து முடிக்க நான்கு ஆண்டுகள் ஆனது. உதய் சங்கரின் மனைவி அமலா சங்கர், பத்மினி ஆகியோர் நடித்து 1948-ல் வெளியான இந்தித் திரைப்படம் இது. உதய் சங்கர் தன் பணத்தையெல்லாம் இழந்து கொல்கத்தாவுக்குத் திரும்ப வைத்த தோல்வித் திரைப்படமும் கூட.

ஆனால் இப்படத்துக்காக நடந்த நடன, இசை ஒத்திகையைப் பார்த்து வியந்த தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன், பின்னர் எடுத்த ‘சந்திரலேகா’வில் இந்தியாவையே வியக்க வைத்த 400 நடனக் கலைஞர்கள், பிரம்மாண்ட டிரம்களில் நின்று ஆடும் பாடல், `கல்பனா’வின் தாக்கத்தில் உருவானதே. `கல்பனா’வின் அசல் நெகடிவ் சீர்குலைந்த நிலையில், ஹாலிவுட் இயக்குநர் மார்டின் ஸ்கார்சிசியின் வேர்ல்ட் சினிமா புராஜக்ட் திட்டத்தின் மூலம் டூப் நெகட்டிவ் சீராக்கப்பட்டு 2012-ல் கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இப்படத்தின் சிதைந்துபோன டூப் நெகடிவ்வை டிஜிட்டல் முறையில் சீராக்குவதற்கு எத்தனை மணி நேரம் எடுத்தது?

parakajpg100 

2. படத்துக்கென்றே ஒரு கேமரா!

இருபத்தைந்து நாஇப்படத்துக்காக டுகள், ஆறு கண்டங்களில் படம்பிடிக்கப்பட்ட ஆவணப்படமான ‘பராகா’வில் விவரணை கிடையாது. அதன் இயக்குநர் ரான் ப்ரிக்கே, ‘மனித குலத்தின் மீதான தியானம்’ என அதை வர்ணித்தார். இயற்கை நிகழ்வுகள், மனித இயக்கங்கள், தொழில்நுட்பத்தின் தாக்கம், உலகளாவிய வழிபாட்டு முறைகளை ஆகியன குறித்து எந்த இடையீடும் குறுக்கீடும் இன்றி பார்க்கும் மாற்றுத் திரைப்படம் இது. தேசம், மதம், அரசியல் அடையாளங்கள் தாண்டி ஒரு மனிதனின் அகத்தை நோக்கிப் பேசும் இப்படத்துக்காக பிரத்யேகமாக 65 எம்எம் காமிரா உருவாக்கப்பட்டது.

1992-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தின் இசை, அதன் காட்சிகளுக்கு இணையாகப் பெரிதும் பேசப்பட்டது. இசையமைப்பாளர் மைக்கேல் ஸ்டீயர்ன்ஸ். எல். சுப்ரமணியனும் இப்படத்துக்காகப் பணியாற்றிய இசைக்கலைஞர்களுள் ஒருவர். அன்றாட வாழ்க்கையின் நுட்பமான மாறுதல்களைப் படம்பிடிப்பதற்காக ’டைம்லாப்ஸ்’ தொழில்நுட்பம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட ஆவணப்படம் இது. ‘பராகா’ என்ற வார்த்தையின் அர்த்தம்?

 

3. தமிழுக்கு வந்த சார்லி சாப்ளின்!

3jpg100 

சார்லி சாப்ளினின் சிறந்த படைப்புகளில் ஒன்று ‘சிட்டி லைட்ஸ்’. உலகின் பல்வேறு மொழிகளில் எண்ணற்ற தழுவல்களாக மீண்டும் மீண்டும் பிறந்துகொண்டேயிருந்தது. டி.ஆர்.ராமச்சந்திரன், ஸ்ரீரஞ்சனி, ஜூனியர் நாயகன், நாயகியாக நடித்து, 1954-ல் வெளியான படமான ‘ராஜி என் கண்மணி’யை இயக்கிய கே.ஜே. மகாதேவன் ‘சிட்டி லைட்ஸ்’-ஐ அப்படியே தமிழாக்க முயற்சி செய்திருந்தார். கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி எழுதி, கே. சுப்ரமணியன் இயக்கிய ‘தியாகபூமி’யில் நாயகனாக நடித்தவர் இவர்.

சாப்ளினின் சேட்டைகளை நாயகன் டி.ஆர். ராமச்சந்திரன் இப்படத்தில் முயன்றிருப்பார். இப்படத்தில் சந்திரபாபு, ரங்காராவின் நடிப்பும் பேசப்பட்டது. எஸ். ஹனுமந்தர ராவ் இசையமைத்த இத்திரைப்படத்தில் சங்கு. சுப்ரமணியம் எழுதி, ஆர். பாலசரஸ்வதி பாடிய ‘மல்லிகைப் பூ ஜாதி ரோஜா’ இன்றும் ரசிகர்களால் ஆராதிக்கப்படும் பாடல். தமிழிலும் தெலுங்கிலும் எடுக்கப்பட்ட இப்படம் தோல்வியைத் தழுவியது. ஜெமினி தயாரித்த இப்படத்தின் தெலுங்குப் பதிப்புக்கு சூட்டப்பட்ட தலைப்பு என்ன?

 

4. எம்.டி.வாசுதேவனை அறிமுகப்படுத்தியவர்!

தென்னிந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் ஏ. வின்சென்ட். இவர் மலையாள யதார்த்த சினிமா இயக்குநராகவும் புகழ்பெற்றார். இவர் இயக்கிய ‘முறப்பெண்ணு’ படத்தின் மூலம் மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரை திரைக்கதையாசிரியராக அறிமுகப்படுத்தி 50 ஆண்டுகள் முடித்துவிட்டன. எம்.டி.வி எழுதிய ‘சினேகத்தின்டே முகங்கள்’ சிறுகதையை அடிப்படையாகக்கொண்டு அவரே திரைக்கதை எழுதினார்.

பிரேம் நசீர், கே.பி.உமர், சாரதா, அடூர் பாசி போன்றோரின் சிறப்பான நடிப்புக்காக இப்படம் இன்றும் கொண்டாடப்படுகிறது. ஒரு நிலப்பிரபுத்துவக் கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் முறிவுகள்தான் கதை. பி.ஏ.சிதம்பரநாத் இசையமைத்த இத்திரைப்படத்துக்கு பாடல்களை பி.பாஸ்கரன் எழுதினார். கே.ஜே.யேசுதாஸ், எஸ்.ஜானகி ஆகியோர் பாடிய பாடல்களுக்காக இன்றும் சிதம்பரநாத் நினைவுகூரப்படுகிறார். இப்படத்தின் உட்புறக் காட்சிகள் சென்னையில் உள்ள எந்த ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டன?

 

5. வங்கத்தின் மாற்றுப் படைப்பாளி!

megajpg100 

இந்திய - பாகிஸ்தான் பிரிவினை தொடர் பான கதைகளைத் தனது படைப்புகளாக்கியவர் வங்காள இயக்குநர் ரித்விக் கட்டக். வங்கத்தின் தலைசிறந்த மாற்று இயக்குநராக அறியப்படும் இவர், கிழக்கு பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகள் வாழும் கொல்கத்தாவின் புறநகர் பகுதியில் நடைபெறும் கதையாக இவர் எடுத்த ‘மேக தக்க தாரா’ வணிகரீதியாகவும் வரவேற்கப்பட்ட வெற்றிப் படைப்பு. அழகிய யுவதியான நீதா, குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவராலும் தொடர்ந்து சுரண்டப்பட்டு தியாகியாக மரணமடையும் கதை. வேலை, வாழ்க்கை, ஆரோக்கியம் எல்லாவற்றையும் இழந்து இறந்து போகும் நீதாவாக நடித்திருந்தவர் சுப்ரியா சவுத்ரி. ரித்விக் கட்டக் சிறந்த வாத்திய இசைக்கலைஞரும் கூட. அவர் எந்த வாத்தியத்தை இசைப்பதில் வல்லவர்?

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x