Last Updated : 26 Sep, 2017 11:40 AM

 

Published : 26 Sep 2017 11:40 AM
Last Updated : 26 Sep 2017 11:40 AM

வேட்டையாடு விளையாடு: ஒரு கிராமம்.. நாற்பது திருடர்கள்

ஒரு கிராமம்.. நாற்பது திருடர்கள்

இன்றைக்கும் உலக கிளாசிக்குகளில் ஒன்றாக ஜப்பானிய இயக்குநர் அகிரா குரசோவா இயக்கிய ‘செவன் சாமுராய்’ படம் கருதப்படுகிறது. 16-ம் நூற்றாண்டு ஜப்பானில் குடியானவர்களின் நிலை, சாமுராய் வீரர்களின் வாழ்க்கை ஆகியவற்றைத் தத்ரூபமாகக் காண்பித்த கருப்பு வெள்ளைத் திரைப்படம் இது. அறுவடையான பயிர்களைக் கொள்ளையடிக்க குதிரைகளில் திருடர்கள் கூட்டமாக வருவார்கள். அவர்களிடமிருந்து அறுவடையைப் பாதுகாக்க ஏழு நாடோடி சாமுராய்களைக் காவலர்களாக நியமிக்கிறது ஒரு ஜப்பானிய கிராமம். ஏழு பேரும் சேர்ந்து அந்தக் கிராமத்தைச் சூறையாட வரும் 40 திருடர்களை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதே கதை. 1954-ல் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அக்காலகட்டத்தில் மிக அதிகப் பொருட்செலவில் தயாரானது. அந்தப் படத்தின் தயாரிப்புச் செலவு ஐந்து மில்லியன் டாலர். இந்தச் செலவில் அப்போது ஏழு ஜப்பானியத் திரைப்படங்களை எடுத்துவிடுவார்கள். சாமுராய் படங்கள் எடுப்பதில் வல்லவர் என்று கருதப்படும் அகிரோ குரசோவாவின் முதல் சாமுராய் படம் இதுவே. அடிப்படை மனித உணர்வுகளும் மோதல்களும் அற்புதமாகக் கையாளப்பட்டிருக்கும் இப்படம் சினிமா ரசிகர்கள், திரைப்பட மாணவர்கள் இரு தரப்பினராலும் இன்றும் உலக அளவில் கொண்டாடப்படுகிறது. செர்ஜியோ லியோன் எடுத்த வெஸ்டர்ன் திரைப்படமான ‘மேக்னிபிஷண்ட் செவன்’, செவன் சாமுராயை அடிப்படையாகக் கொண்டது. செவன் சாமுராயின் தாக்கத்தில் இந்தியில் எடுக்கப்பட்டு பெரும் வெற்றிபெற்ற இந்திப் படம் எது?

சினிமா வரலாறாக மாறிய நாடகம்

தமிழ் சினிமாவின் புதிய அத்தியாயம் எழுதப்பட்ட ஆண்டு 1952. புராணக் கதைகளிலிருந்து சமூக யதார்த்தத்தையும் எளிய மக்களின் அபிலாஷைகளையும் பிரதிபலிக்கும்படி எடுக்கப்பட்ட ‘பராசக்தி’ வெளியானது இந்த ஆண்டில்தான். பின்னாளில் தமிழக அரசியலில் சாதனையாளராக மாறிய மு.கருணாநிதியை நட்சத்திர வசனகர்த்தாவாக்கிய திரைப்படம் இது. பெரும் நடிக ஆளுமையான சிவாஜி கணேசன் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படமும் இதுவே. அக்காலத்தில் வெளிவந்த பெரும்பாலான சினிமாக்களைப் போலவே பராசக்தியும் வெற்றிகரமான நாடகத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான். தீவிர நாத்திகரான அந்தத் தமிழறிஞர்தான் பராசக்தி நாடகத்தை எழுதினார். அவர் யார்?

மிட்டாய் விற்ற திரைப்பட இயக்குநர்!

ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜியார்ஜ் மெலியஸ், உலக சினிமா வரலாற்றில் முக்கியமான ஒரு அத்தியாயம். ஒரு கலை வடிவமாகச் சினிமா உருவாகி வந்த நாட்களில் மாயாஜாலக்காரராக இருந்த ஜியார்ஜ் மெலியஸ், சினிமா என்ற வடிவத்தின் மீது ஈர்ப்புகொண்டார். இன்று ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் என்று சொல்லப்படும் சினிமா தொழில்நுட்பத்தின் தந்தை இவர்தான். மல்டிபிள் எக்ஸ்போஷர்ஸ், டைம் லாப்ஸ் போட்டோகிராபி ஆகிய தொழில்நுட்பங்களை முதலில் பயன்படுத்தியவர். கறுப்பு வெள்ளை பிலிமில் வண்ணங்கள் வரைந்து அதை வண்ணப்படமாக மாற்றியவர். காமிக்ஸ் கதைபோல ஒவ்வொரு காட்சிக்கும் முதலிலேயே ஓவியங்களை வரைந்து வைக்கும் ஸ்டோரிபோர்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய திரைப்பட இயக்குநர்களில் ஒருவர். இவர் எடுத்த ‘எ ட்ரிப் டு தி மூன்’ மற்றும் ‘தி இம்பாசிபிள் வாயேஜ்’ போன்ற ஊமைப் படங்கள் ஆரம்ப கால அறிவியல் மிகுபுனைவு திரைப் படைப்புகளாக இன்றும் பேசப்படுகின்றன. முதல் உலகப் போர் காரணமாக உருவான பொருளாதார நெருக்கடியால் திரையுலக வாழ்க்கையைத் தொடர முடியாத ஜியார்ஜ் மெலியஸ், ஒரு கட்டத்தில் குழந்தைகளுக்கு மிட்டாய் மற்றும் பொம்மை விற்கும் கடை நடத்தி மறைந்துபோனார். அவரது வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு மார்ட்டின் ஸ்கார்சஸி இயக்கிய திரைப்படம் எது?

நடைப்பயிற்சியில் சிக்கிய பூனை

நிழல் உலகைச் சித்தரித்த வகையில் கேங்க்ஸ்டர் படங்களின் பைபிளாகக் கருதப்படுவது ’காட்பாதர்’. எழுத்தாளர் மரியா பூசோ எழுதிய நாவலின் திரைவடிவத்தை இயக்கியவர் பிரான்சிஸ் ஃபோர்ட் கோப்போலா. நியூயார்க் நகரில் ஆதிக்கம் செலுத்தும் மாஃபியா குடும்பத்தின் கதை இது. மூத்த குடும்பத் தலைவர் விட்டோ கார்லியனாக மார்லன் பிராண்டோவும் அவரது மகன் மைக்கேல் கார்லியனாக அல் பாசினோவும் நடித்தனர். மார்லன் பிராண்டோவுடன் நடித்த பூனையை தற்செயலாக பிரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலோ, தன் காலை நடைப் பயிற்சியில் பார்த்தபோது கண்டுபிடித்தார். பிராண்டோவுக்கும் அதற்கும் உண்டான நட்பு படத்துக்கு உயிர்கொடுத்தது. காட்பாதர் படத்தில் சினிமா தயாரிப்பாளரின் படுக்கையில் ரத்தத்துடன் அறுக்கப்பட்ட குதிரைத் தலைக் காட்சியில் பயன்படுத்தப்பட்ட குதிரையின் தலை நிஜமானது. இப்படத்துக்காகக் கிடைத்த ஆஸ்கர் விருதை யாருக்காக மறுத்தார் மார்லன் பிராண்டோ?

திரைக்குள் வந்த தெருக் குழந்தைகள்

மீரா நாயர் இயக்கி 1988-ல் வெளியான படம் ‘சலாம் பாம்பே’. மும்பையின் தெருக்களில் வசிக்கும் குழந்தைகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில் மும்பை குடிசைப் பகுதியில் வசிக்கும் குழந்தைகளே நடித்தனர். பாட்டும் பிரம்மாண்டமும் பகட்டும் கொண்டதாக அறியப்பட்ட இந்தி சினிமாவின் எல்லைகளைத் தகர்த்தது இத்திரைப்படம். கான் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவில் தேர்வு செய்யப்பட்டு, கோல்டன் கேமரா அண்ட் ஆடியன்ஸ் விருதைப் பெற்றது. சிறந்த அயல்மொழித் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட இந்தியாவின் இரண்டாவது திரைப்படம் இது. இப்படத்தின் இசையமைப்பாளர் யார்?

விடைகள்

புதிருக்கான விடைகளைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உண்மையாகவே நீங்கள் தேர்ந்த திரை ஆர்வலர்தான். இதோ விடைகள் 1.ஷோலே 2.பாவலர் பாலசுந்தரம் 3.ஹியூகோ 4. அமெரிக்காவின் பூர்வ குடிகளான செவ்விந்தியர்கள் 5.எல். சுப்ரமணியம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x