Published : 15 Sep 2017 10:58 AM
Last Updated : 15 Sep 2017 10:58 AM

திரைப் பார்வை: ஒன் ஹார்ட்- இசை மேடைக்கு மரியாதை... ஆனால் ரசிகர்களுக்கு?

தி

ரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களின் கட்டமைப்பைத் துளி அளவும் மாற்றாமல் அச்சு அசலாக மேடை ஏற்றுவதுதான் சிறந்த மேடைக் கச்சேரியாக நெடுங்காலம் கருதப்பட்டது. தமிழ்த் திரையிசை மேடைக் கச்சேரிகளின் அந்தப் போக்கைப் புரட்டிப்போட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். இசைப் பதிவின்போதே சக இசைக் கலைஞர்களுக்கு முழுமையாகப் படைப்பாற்றல் சுதந்திரத்தை வழங்குபவர் அவர். அதே சுதந்திரத்தைத் தன்னுடைய மேடை நிகழ்ச்சிகளிலும் வழங்கிவருகிறார். தன்னுடைய பாடல்களில் இடம்பெற்ற இசைக் கருவிகளின் அரேஞ்மெண்ட், பாடகர்களின் சங்கதி உட்படப் பலவற்றைச் சோதனை முயற்சியாக மாற்றி மேடை ஏற்றுகிறார். பொதுவாகத் தான் இசையமைத்த பாடலின் வடிவத்தை யாரேனும் கொஞ்சம் மாற்றினாலும் இசையமைப்பாளர்கள் வெகுண்டெழுவார்கள். ஆனால், ரஹ்மான் அத்தகைய முயற்சிகளைப் புத்துணர்ச்சியோடு வரவேற்றிருக்கிறார். 2000-த்தின் தொடக்கத்திலிருந்தே அவர் உலக மேடைகளில் தன்னுடைய இசையை அரங்கேற்றத் தொடங்கினார்.

‘என்னைப் பற்றியது அல்ல’

இத்தகைய இசைக் கச்சேரிகளையே அடிப்படையாக வைத்துத் தற்போது ரஹ்மான் படைத்திருக்கும் திரைப்படம்‘ஒன் ஹார்ட்’.

குழந்தை முகம் மாறாத இளைஞராகத் தன்னுடைய பியானோவின் முன்னால் அமர்ந்து பேசும் ரஹ்மானின் பழைய ஆவணப் பதிவுக் காட்சியோடு படம் திரையில் விரிந்தது. அடுத்த சில நொடிகளில், சலனமற்ற ஆழ்கடலுக்கு நடுவே ஒரு படகில் இன்றைய ரஹ்மான் வானம் பார்த்து நிற்கிறார். அவர் கடந்து வந்த பாதையை, அவருடைய இசைப் பயணத்தைப் படம் காட்சிப்படுத்தவிருப்பது உணர்த்தப்படுகிறது. 2015-ல் வட அமெரிக்காவின் 14 நகரங்களில் ரஹ்மான் தன்னுடைய இசைக் குழுவினரோடு அரங்கேற்றிய ‘தி இன்டிமேட் கான்சர்ட்’ கச்சேரிகளைப் பற்றிய படம் இது என ரஹ்மானே சொல்கிறார். தன் குரலின் உச்சத்தை இந்தியா சினிமாவுக்குக் காட்டிய ‘தில் சே ரே’ பாடலை அமெரிக்காவின் மேடையில் ரஹ்மான் பாடும் காட்சியைக் கண்டதும் திரையரங்கில் உள்ள ரசிகர்களுக்கு உற்சாகம் கொப்பளிக்கிறது.

“இது என்னைப் பற்றியது மட்டுமல்ல. என்னுடைய குழுவினரின் திறமைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் எப்போதுமே எனக்குப் பெருமைதான்” எனச் சொல்லும் இசைப்புயல் தன்னுடைய குழுவினர் ஒவ்வொருவரின் தனித்துவத்தையும் மகிழ்ச்சியோடு வர்ணிக்கிறார். ரெக்கார்டிங் தியேட்டரைப் போலவே துல்லியமாக மேடையிலும் பாடும் திறம்வாய்ந்த பாடகர் ஹரிசரண், இந்தி, தமிழ், ஆங்கிலம் எனப் பன்மொழிகள் அறிந்த ஸ்ருதி சுத்தமாகப் பாடும் பாடகி ஜோனிதா காந்தி, பிறவிக் கலைஞரான செல்லப் பிள்ளை பாஸ் கிட்டார் கலைஞர் மோகினி டே, தனக்கு உறுதுணையான இசை நண்பர் மற்றும் இசை ஒருங்கிணைப்பாளர், டிரம்ஸ் கலைஞர் எனப் பன்முகத் திறன்வாய்ந்த ரஞ்சித் பாரட், சென்னைப் பையன் அட்டகாசமான கிட்டார் கலைஞர் கேபா ஜெர்மியா இப்படி ஒவ்வொருவரையும் கச்சேரி மேடையிலேயே அறிமுகப்படுத்துகிறார்.

புத்துயிரூட்டும் அனுபவம்

ரஹ்மானுடன் மேடை கச்சேரி செய்வது எத்தகைய புத்துயிரூட்டும் அனுபவம் என்பதை ‘ஒன் ஹார்ட்’ படத்துக்கான வீடியோ பதிவில் ரஞ்சித் பாரட், பாடகியும் பியானோ கலைஞருமான ஆனட் ஃபிலிப்பும் பகிர்ந்துகொள்கிறார்கள்.

“மேடைக் கச்சேரியில் இசை நிகழ்த்துவது என்பது ஆபத்தும் வேடிக்கையும் கலந்த ஒன்று. அதில் முன் தயாரிப்பு பெரிதும் உதவாது. மனோலயத்தின்படிதான் ஒவ்வொரு நாளும் அமையும்” எனச் சொல்லும் ஆனட் ஃபிலிப்பின் படைப்பாற்றலை மேடையில் காணும்போது பிரமிப்பு அடங்கவில்லை. ஜாஸ் இசையில் அவர் செய்யும் ஜாலம் அசத்தல்.

ஜொனிதா காந்தியின் குரலில் ‘சின்னச் சின்ன ஆசை’, ‘நெஞ்சுக்குள்ள’, ‘முன்பே வா’ பாடல்கள் புதிய பொலிவும் பரிமாணமும் அடைகின்றன. அதிலும் ‘நானே வருகிறேன்’ பாடலை அவர் பாடக் கேட்கும்போது ரஹ்மான் மீதான பிரமிப்பு கூடுகிறது. இந்தப் பாடலைக் குறித்து ரஹ்மானுக்கும் ரஞ்சித் பாரட்டுக்குமான உரையாடல் இந்தியத் திரையிசையின் எதிர்காலம் குறித்த முன்னோட்டமாக அமைகிறது.

‘வெள்ளைப் பூக்கள்’, ‘இஷ்கு பினா’ (தாள்- இந்தி), ‘நான் ஏன் பிறந்தேன்’, ‘மவுலா மவுலா’ (டெல்லி 6), ‘தேரே பினா’ (குரு- இந்தி) ஜெய் ஹோ’ பாடல்களை ரஹ்மான் பாடுவதும், அதைத் தொடர்ந்து இசையைத் தத்துவார்த்தமான பயணமாக அவர் தரிசிக்கும் விதத்தை எடுத்துரைப்பதும் ரஹ்மான் இசை ரசிகர்களுக்குப் பெருவிருந்து.

உறக்கம் அற்ற இரவுகள்

இடையிடையே ரஹ்மான் தன் குடும்பத்தினரோடு கப்பலில் குட்டி வீடியோ காட்சி, கேஸ் பலூனில் பறக்கும் காட்சி, மனைவியுடன் விளையாட்டுத்தனமான ஃபோட்டோ ஷூட் என இதுவரை பார்த்திராத சில தருணங்களைக் காட்டியிருக்கிறார்கள்.

“90களில் மேடை ஏற நடுங்கியவன் நான். ரெக்கார்டிங் தியேட்டரில் உருவாக்கும் ஒலிகளை மேடையில் மீட்டுருவாக்க முடியுமா என்கிற பயம் ரொம்பவும் இருந்தது. இதனால் மேடைக் கச்சேரிக்கு முன்னதாகப் பல இரவுகள் தூக்கம் இன்றி கழிந்திருக்கின்றன. கிட்டத்தட்ட 18 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் நம்பிக்கையோடு மேடை ஏறுகிறேன்” எனப் படத்தில் சொல்கிறார் ரஹ்மான். மேடைக் கச்சேரிக்கான திரைப்படத்தில் இதை அவர் சொல்வதைப் பார்க்கும்போது, உடனடியாக முதன்முதலில் ரஹ்மான் மேடை ஏறும் ஃபூட்டேஜைக் கண்கள் தேடுகின்றன. ஆனால் அப்படியான காட்சிகள் இல்லை. இதேபோல படத்தில் இடம்பெறும் மற்ற இசைக் கலைஞர்களிடம், “ரஹ்மானுடன் பணிபுரிவது உங்களுக்கு எப்படி உள்ளது?” என்கிற ஒற்றைக் கேள்வி மட்டுமே எழுப்பப்பட்டிருக்கிறது. அதனால் அவர்கள் எல்லோருமே, “என்னால் நம்ப முடியவில்லை, நான் அதிர்ஷ்டசாலி, நான் ஆசிர்வதிக்கப்பட்டவர்” போன்ற ஒற்றை வார்த்தை பதிலை மட்டுமே பதிவுசெய்திருக்கிறார்கள்.

நியாயம் செய்திருக்கிறாரா?

‘கான்சர்ட் ஃபில்ம்’ எனப்படும் மேடைக் கச்சேரி திரைப்படம் இந்தியத் திரை உலகத்துக்கு முற்றிலும் புதிது. அந்த வகையில் இது பாராட்டத்தக்க முயற்சி. அதிலும் இசைக் கலைஞர்களின் மகத்துவத்தை ஒரு படி மேலே தூக்கி நிறுத்தியதில் ரஹ்மானுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஆனால் ரஹ்மான் ரசிகர்களுக்கு? இத்தனை காலம் ரஹ்மானைக் கொண்டாடக் காரணமான தமிழ்ப் பாடல்களில் ஒன்றிரண்டு பாடல்களைத் தவிர இதில் வேறெதுவுமே இடம்பெறவில்லை. ‘ரோஜா’ வெளியானபோது ஆறேழு வயதில் இருந்தவர்களை மனதில் வைத்துத்தான் இந்தப் படத்தை எடுத்ததாக ரஹ்மான் குறிப்பிடுகிறார். ஆனால் ஒரு கலைஞராக ரஹ்மான் அதை பூர்த்தி செய்யவில்லை என்பதை நினைக்கும்போது மனம் வருந்துகிறது. அதிலும், மைக்கேல் ஜாக்சனின் ‘திஸ் இஸ் இட்’ கான்சர்ட் திரைப்படப் பாணியில் ‘ஒன் ஹார்ட்’ எடுக்கப்பட்டிருப்பதாக ரஹ்மானே சொன்னார்.

யூடியூபில் கிடைக்கப்பெறும் அந்தப் படத்தைப் பார்த்தபின்பு மேலும் மனம் வெம்பியது. பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் இறந்த பிறகு அதுவரை அவர் நிகழ்த்திய மேடைக் கச்சேரிகளை அடிப்படியாகவைத்து 2009-ல் எடுக்கப்பட்டதுதான் ‘திஸ் இஸ் இட்’. ஆடல், பாடல், இசையமைத்தல் எனச் சகலகலா வல்லவனான மைக்கேல் ஜாக்சன் ஒவ்வொரு மேடைக் கச்சேரிக்கும் முன்னதாக எப்படிப் பயிற்சி எடுத்தார், தன்னுடன் பாடும் சக கலைஞர்களுக்கும் நடனக் கலைஞர்களுக்கும் எப்படிப் பயிற்றுவித்தார், நடனக் கலைஞர்களை அவர் தேர்வுசெய்த விதம், மேடை அமைப்பு உட்பட ஒவ்வொன்றுக்கும் அவர் எவ்வாறு மெனக்கெட்டார் உள்ளிட்ட பல அம்சங்களை அருமையாக வெளிக்கொணர்கிறது படம். ஒரே பாடலை வெவ்வேறு மேடைகளில் அரங்கேற்றிய விதத்தை நறுக்கானத் தொகுப்பின் மூலம் ஒருங்கிணைத்திருக்கிறார்கள். ஒரு மாயாஜால நிகழ்ச்சிக்குப் பின்னால் உள்ள ரகசியங்களைக் கட்டவிழ்ப்பதுபோன்ற பிரமிப்பு அதைப் பார்க்கும்போது ஏற்படுகிறது.

மனித நேயத்துக்கான நம்பிக்கைக் கீற்றாக இசையைக் கருதும் ரஹ்மானும் ‘ஒன் ஹார்ட்’-ல் இதயப்பூர்வமாக அதைச் செய்திருக்கலாமே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x