Last Updated : 01 Sep, 2017 11:25 AM

 

Published : 01 Sep 2017 11:25 AM
Last Updated : 01 Sep 2017 11:25 AM

திரைவெளிச்சம்: முள்ளாய்க் குத்தும் விமர்சனத் தராசு

வண்ணப்படம் எடுப்பவர்களை ஒற்றை வண்ணம் பயமுறுத்தியிருக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய் செலவில் நூற்றுக்கணக்கானோர் மாதக்கணக்கில் உழைத்து உருவாக்கிய, இரண்டு மணி நேரத்துக்கு மேல் திரையரங்கில் ஓடக்கூடிய ஒரு படத்தை எட்டு நிமிட சொச்ச வீடியோ ஒன்று பதம்பார்த்திருக்கிறது. நீலச் சட்டைக்காரர் என அழைக்கப்படும் யூடியூப் விமர்சகர் தோழர் மாறன் ‘விவேகம்’ திரைப்படத்தை விமர்சித்திருந்த விதம் திரைத்துறையினரைக் கடும் அதிருப்தியில் தள்ளியிருக்கிறது. போதாக்குறைக்கு, எழுத்தாளர் சாருநிவேதிதா வேறு தன் பங்குக்கு இந்தப் பட விமர்சனத்தில் திரைப்படத்தின் விவேகத்தைச் சந்தேகித்திருக்கிறார்.

திரைத்துறையில் நேரடியாக ஈடுபட்டுவரும் எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்ற, சாருநிவேதிதாவை ஒத்த பிற எழுத்தாளர்கள் திரைத்துறையினருக்கு விமர்சனச் சிக்கல்களை உருவாக்காமல் நாகரிகம் பேணிவரும் நிலையில், சாருநிவேதிதாவின் இந்த வெளிப்படையான விமர்சனத் தாக்குதல் திரைத்துறையினரை நிலைகுலையச் செய்திருக்கிறது. அதனால்தான் அவருக்குக் கொலை மிரட்டல்விடும் அளவுக்கு நிலைமை கைமீறிப் போயிருக்கிறது.

ஆனால், ஒரு திரைவிமர்சனத்துக்குப் படத்தை வெற்றிபெற வைக்கும் சக்தி இல்லை என்பதே உண்மை. விமர்சகர்களால் ‘ஆஹோ ஓஹோ’ எனப் புகழப்பட்ட ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘இறைவி’ போன்ற பல திரைப்படங்கள் வணிகரீதியில் கடும் தோல்வியைச் சந்தித்திருக்கின்றன. இவ்வளவு ஏன் ‘விவேகம்’ திரைப்படமே வசூலை வாரிக்குவிப்பதாகத்தான் செய்திகள் வருகின்றன. ஆனாலும், திரைத்துறையினர் ஏன் இவ்வளவு கோபம் கொள்கிறார்கள் என்று யோசிக்கும்போது அவர்களது கோபத்திலும் நியாயம் இருக்கிறது. அதற்குக் காரணம் இயக்குநர் லிங்குசாமியின் ‘அஞ்சான்’தான்.

எதிர்மறை விமர்சனம்

‘அஞ்சான்’ படத்தின் படுதோல்விக்குச் சமூக வலைத்தளங்களில் அந்தப் படத்துக்குக் கிடைத்த மோசமான விமர்சனங்கள் காரணமெனத் திரைத்துறையினர் நினைத்திருக்கலாம். ஆகவே, முதல்நாளே ஒரு படத்தை எதிர்மறையாக விமர்சிக்கும்போது திரையரங்குக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிடுமோ என்று அவர்கள் பதற்றப்படுகிறார்கள்.

அந்தப் பதற்றத்தையே இயக்குநர் விஜய் மில்டன் தான் வெளியிட்டிருக்கும் வீடியோவில் வெளிப்படுத்துகிறார். ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மாறனின் விமர்சனத்தைப் பார்த்த காரணத்தால்தான், அவர் உடனடியாக அதற்கு எதிர்வினையாற்றுகிறார். இப்போதோ மாறனின் விமர்சன வீடியோவை 21 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்திருக்கிறார்கள்.

இந்த விமர்சனச் சிக்கல் குறைந்த முதலீட்டில் தயாராகும் படங்களுக்கு வருவதில்லை. பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே வருகின்றன. காரணம் அவற்றின் முதலீடு. சந்தை தாங்கும் விலையைவிட அதிக விலைக்குப் படத்தை விற்கும்போது அதன் வசூலை எவ்வளவு விரைவில் அள்ளிவிட இயலுமோ அவ்வளவு விரைவில் அள்ளிவிட வேண்டும் எனத் திரைத் துறையினர் துடிக்கிறார்கள்.

அதற்குச் சிறு பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளார்கள். ‘அஞ்சான்’, ‘லிங்கா’ போன்ற கடந்தகாலக் கசப்புமிக்க நினைவுகள் வேறு அவர்களை அலைக்கழிக்கின்றன. ஆகவே, சிறு விமர்சனங்களை அனுமதிக்கவும் அவர்கள் தயங்குகிறார்கள்; ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள்.

வாழ்வாதாரப் பிரச்சினை

இதற்கு முன்னர் ‘கபாலி’ பட வெளியீட்டின் போதும் இத்தகைய சர்ச்சை உருவானது. காரணம் அந்தப் படமும் அதிக விலைக்கு விற்கப்பட்டது. முதல் சில நாட்களில் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கிப் படம் பார்க்கும் ரசிகர்களின் ஆர்வத்தைத் திரைத்துறையினர் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதற்குத் திரைத்துறையினரை மட்டும் குற்றம் சொல்ல முடியுமா என்பதும் யோசிக்க வேண்டிய அம்சம்.

ரூ. 120 மதிப்புள்ள டிக்கெட்டை எதற்கு ஐநூறு, ஆயிரம் கொடுத்து வாங்கிப் பார்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பார்வையாளர்களிடம்தான் உருவாக வேண்டுமே ஒழிய, அதைத் திரைத்துறையினரிடமே எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல. ஒருவேளை இத்தகைய விழிப்புணர்வு விமர்சனங்கள் வழியே உருவாக்கப்பட்டுவிட்டால் அதனால் பாதிப்படைபவர்கள் திரைத்துறையினர்தான். அதனால் அத்தகைய விமர்சனங்கள் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் திரைத்துறையினருக்கு உள்ளது. ஏனெனில், அது அவர்களது வாழ்வாதாரப் பிரச்சினை.

அதனால்தான் திரைப்படத்தின் கதைக் கவலையைவிட, அதன் விமர்சனம் பற்றிய கவலை திரைத்துறையினரைப் பீதியில் தள்ளுகிறது. ‘நல்ல படத்தை உருவாக்க வேண்டும் என்றுதான் பிரயாசைப்படுகிறோம், ஆனால், எங்களால் இயன்றதைத் தானே தர முடியும். அதற்காக எங்களைத் தரக்குறைவாக விமர்சிப்பது தகுமா? ’ என்னும்ரீதியில் மிகவும் தன்மையாகத்தான் கேட்கிறார் இயக்குநர் விஜய் மில்டன். அவரது கூற்றில் உண்மை இருக்கிறது.

மேலும், மாறனின் விமர்சனத்தைவிட அதை அவர் வெளிப்படுத்திய பாங்குதான் கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது. அதேநேரத்தில் அஜித் நடித்த ‘வேதாளம்’ படத்துக்கு இதே மாறன் ஓரளவு நல்ல முறையிலேயே விமர்சனத்தைத் தந்துள்ளார் என்பதையும் இந்த இடத்தில் நினைவுகூர வேண்டியுள்ளது. ஒரு படம் வெளியான உடன் அதைப் பார்த்துவிட்டுச் சுடச்சுட விமர்சிக்கும்போது, பெரும்பாலும் உணர்வு உந்திய நிலையில்தான் அது வெளிப்படும்.

அந்த உணர்வுக்குக் காரணம் திரைப்படம் உருவாக்கிய மனநிலைதான் என்று விமர்சகர்கள் சொல்லக்கூடும். நின்று நிதானமாக விமர்சனத்தை வெளிப்படுத்தக்கூடிய கால அவகாசம் யூடியூப் விமர்சகர்களுக்கு இல்லை என்பதும் இத்தகைய விமர்சன வெளிப்பாட்டுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

புதிதல்ல சர்ச்சை

படத்துக்கு எதிர்மறையான விமர்சனம் கிடைக்கும்போது திரைத்துறையினர் அதற்குக் கண்டனம் தெரிவிப்பதும் புதிய நிகழ்வல்ல. 1935-ல் கே.பி.சுந்தராம்பாள் நடிப்பில் வெளியான ‘பக்த நந்தனார்’ காலத்திலேயே இத்தகைய கண்டனங்களும் சர்ச்சைகளும் உருவாகியுள்ளன. பின்னர், செயற்கைக்கோள் அலைவரிசை காலத்தில் தொலைக்காட்சி விமர்சனங்கள் மீதான கோபத்தை நடிகர் சத்யராஜ் ஒரு திரைப்படக் காட்சியின் வழியே வெளிப்படுத்தியிருப்பார்.

மிகவும் கடின முயற்சியில் உருவாகும் படத்தை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கிறார்களே எனத் திரைத்துறையினர் அங்கலாய்க்கிறார்கள். அதேநேரத்தில் இவ்வளவு சிரமப்பட்டு உருவாகும் படம் இப்படி இருக்கிறதே என விமர்சகர்கள் ஆதங்கப்படுகிறார்கள். விமர்சகர்கள் தாங்கள் வெளிப்படுத்தும் சொற்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது போலவே திரைத்துறையினரும் விமர்சனங்களை நேர்மறையாக எதிர்கொள்ள முயல வேண்டும்.

மேலும், திரைப்பட விமர்சனத்தால் ஒரு திரைப்படத்தை வெற்றிபெறச் செய்யவோ தோல்வியுறச் செய்யவோ முடியாது என்ற உண்மையைத் திரைத்துறையினர் மறந்துவிடலாகாது. பெரிய நடிகர்களையும் திரைப்படங்களையும் விமர்சிப்பவர்களுக்கு எதிராக ரசிகர்கள் என்ற பெயரில் இழிவான வகையில் சமூக வலைத்தளத் தாக்குதல் நடத்துவதும் கொலை மிரட்டல் விடுவதும் ஆரோக்கியமான செயலாக இருக்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x