Published : 18 Aug 2017 10:29 AM
Last Updated : 18 Aug 2017 10:29 AM

அலசல்: கலாச்சாரக் காவலர்களா ராமின் கதாநாயகர்கள்?

மிழில் பெண் மையப் படங்களுக்கான தொடக்கம், பேரன்பை, மனிதநேயத்தைக் கவித்துவமாக சித்தரிக்கும் படம், மனித உணர்வுகளை உள்ளும் புறமுமாகக் காட்சிப்படுத்திய படம் -இப்படியாகக் கொண்டாடப்பட்டுவருகிறது இயக்குநர் ராமின் ‘தரமணி’ திரைப்படம்.

உண்மையிலேயே இத்தகைய புகழாரத்துக்குத் தகுதிவாய்ந்த படைப்பா ‘தரமணி’?

முதலாவதாக, ஐ.டி. துறையில் 80 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளம் வாங்கும் சுயமரியாதையும் சுயசார்பும் மிக்க ஆங்கிலோ இந்தியப் பெண்ணான அல்தியாவுக்கு (ஆன்ட்ரியா) வருவோம். பெண்ணியத் திரைப்படம் என இவர்களைச் சொல்லவைப்பது அவர்தானே! அவரைத் தவிரத் திரைக்கதையில் ஊடாடும் அத்தனை பெண்களுமே அப்பட்டமாகத் தங்களுடைய காதலனுக்கு (கதாநாயகனின் முன்னாள் காதலி), கணவனுக்கு (அழகம் பெருமாளின் மனைவி ‘வீனஸ்’), கணவன் ஆகப்போகிறவனுக்கு (மோதிரம் தொலைக்கும் பெண்) நம்பிக்கைத் துரோகம் இழைப்பவர்களாகக் காட்டியிருக்கிறார் ராம். ஹீரோ திருந்தும் திருப்புமுனைக் காட்சிக்காக போலீஸ் கமிஷனர் மனைவி மட்டும் ‘நல்லவள்’. ஆனால், அவரும் செத்துப்போகிறார்.

வழக்கமான பிம்பம் கலைக்கப்பட்டதா?

அல்தியா கதாபாத்திரத்துக்கு எல்லா வகைகளிலும் உயிர் கொடுத்திருக்கிறார் நடிகை ஆன்ட்ரியா. அவருடைய தோற்றம், குரல், உடல்மொழி, உணர்வுகளை வெளிப்படுத்தும் பாவனை என அத்தனையும் கதாபாத்திரத்தைத் தூக்கி நிறுத்துகின்றன. தரமணியைத் தரமாகக் காட்டுவது அல்தியா கதாபாத்திரம் என்பதைவிட, ஆன்ட்ரியாவின் ஆளுமை என்றே சொல்லலாம்.

கணவர் ஓரினச்சேர்க்கையாளர் எனத் தெரிந்த பிறகு அவரைக் காப்பாற்றத் தன்னை ‘பிட்ச்’ எனச் சமூகம் சொல்ல அனுமதிக்கிறார் அல்தியா. அவருடைய இயல்புப்படி வாழ வழிவிட்டு அவர்களின் மகனைத் தன்னந்தனியே வளர்த்தெடுக்கிறார். வழிப்போக்கனை வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்ளத் துணிகிறார்.

ஒரு கட்டத்தில் சந்தேக நோய் பிடித்தாட்டும் அவனை வெளியேற்றுகிறார். விரக்தியால் குடிக்கிறார், மகிழ்ச்சியில் சிகரெட் பிடிக்கிறார். எல்லாம் சரிதான். ஆனால், அவருடைய கதாபாத்திரம் வழக்கமாகத் தமிழ் சினிமா கட்டமைத்த பெண் பிம்பத்தை மேலோட்டமாகவாவது அசைத்துப்பார்க்கிறதா?

“என்னுடைய கால பார்த்து அழகா இல்லைன்னு சொன்ன முதல் ஆம்பிள நீதான்” என மழைக்கு ஒதுங்கியபோது சந்தித்த ஒருவனிடம் அடுத்த நாள் சந்திப்பில் சொல்கிறார் அல்தியா. அப்போது அவன் அவளுடைய கெண்டைக்கால் முதல் அங்க அளவுவரை அப்பட்டமாக வர்ணிப்பதைக் கேட்டு ரசித்து அவனுடன் நட்பு வளர்க்கிறாள். இதைவிடவும் பெண்மையைக் கொச்சைப்படுத்த முடியுமா?

இது போலிப் பெண்ணியம் பேசும் படைப்பு என்பது முதல் பத்து நிமிடங்களிலேயே அம்பலமாகிவிடுகிறது. முதல் சந்திப்பிலேயே கதாநாயகியிடம் கதாநாயகன் தன்னுடைய பழைய காதல் கதையைச் சொல்கிறான். அதில் அவனுடைய காதலி எடுத்ததற்கெல்லாம் அழுபவள், சுயநலமாகப் பணம் பறித்து ஏமாற்றியவள், காதலில் தன்னை வஞ்சித்தவள் என்கிறான்.

இந்தக் கதையைக் கேட்டு ஒரு நவீனப் பெண் அவன் மீது நட்புகொள்கிறாள். பின்பு அது காதலாக மலர்கிறது என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது? முதல் சந்திப்பில் தன்னுடைய பழைய காதலை, தோல்வியை, ஏமாற்றத்தைப் பேசியபடியே வெட்டியாகச் சுற்றித் திரியும் ஒரு ஆணை இன்றைய பெண்கள் மதிப்பார்கள் என்பது நம்பத்தகுந்ததா?

கதாநாயகன் எனும் கலாச்சாரக் காவலன்

ஐ.டி. வேலைக்குச் சேலை கட்டிவந்த ஒரே பெண் எனத் தன்னுடைய முன்னாள் காதலியைப் பற்றிப் பீற்றிக்கொள்ளும் கதாநாயகன், பின்பு அவள் அமெரிக்காவில் மேற்கத்திய உடைக்கு மாறியபோது அதிர்ச்சிக்குள்ளாகிறான். இப்படி ‘கற்றது தமிழ்’ பிரபாகரன் முதல் ‘தரமணி’ பிரபுநாத்வரை ராமின் கதாநாயகர்கள் தமிழ் பெண்களின் உடை சார்ந்த கலாச்சாரக் காவலர்களாக இருந்திருக்கிறார்கள்.

ஆக, நவீன உடை அணியும் கலாச்சாரத்தைச் சேர்ந்த ஆங்கிலோ இந்தியப் பெண்ணாகக் கதாநாயகி இருக்கும் பட்சத்தில், அவள் மேற்கத்திய உடை அணியலாம். ஆனால், தமிழ் பாரம்பரியத்தைச் சேர்ந்த பெண்கள் மேற்கத்திய உடைக்கு மாறுவது குற்றம். இது எப்படி நியாயம்?

அல்தியாவுடன் சண்டை போட்டுப் பிரிந்துவந்த பிரபுநாத்திடம் “இது என்னோட எக்ஸ் கேர்ள் ஃப்ரெண்ட் நம்பர். நோட் பண்ணிக்குங்க. அவள எவ்வளவு முடியுமோ டார்ச்சர் பண்ணுங்க” என்கிற டீ கடை பெஞ்ச் உரையாடல், அதைத் தொடர்ந்து பிரபுநாத் செய்யும் விபரீதமான வேலைகள், “உங்களுக்கு மட்டும் ஊரில இருந்து வந்த வீனஸ், எனக்கு மட்டும் சிட்டில அதுவும் குழந்தையோட இருக்க பொண்ணு” என அழகம் பெருமாளிடம் கதாநாயகன் சொல்வது இப்படி எத்தனை ஆணாதிக்கப் பார்வைகள்?

பேரன்பை எந்த வகையில் கொண்டாடுகிறது?

முந்தின நாள் மழையில் விளையாடிக்கொண்டிருந்த நாய்க் குட்டி இன்று செத்துக்கிடப்பதைக் கண்டு மனம்வாடி அதை மண் தோண்டிப் புதைப்பது, கடல் நடுவே டால்பின்களோடு விளையாடும் கற்பனை அப்பாவை உருவாக்கியது, வயல் வெளியாகத் தரமணி பகுதி இருந்த காலத்தில் தன் ஜோடியுடன் சுற்றித் திரிந்த புறா, இன்று கட்டிடங்களின் குவியலாகிப்போன தரமணி அடுக்குமாடி வீடுகளுக்கு மீண்டும் மீண்டும் தன்னுடைய ஜோடியைத் தேடி ஒற்றைப் புறாவாக வந்துபோவதைக் காட்டுவது ஆகிய சித்தரிப்புகளால் மனிதநேயம்மிக்க படம் ஆகிவிடுமா?

நாய் செத்தால்கூடப் பரிதவிக்கும் நாயகன் தன் கண் முன்னே தன்னால் ஒரு போலீஸ்காரரின் மனைவி கொல்லப்படுவதைப் பார்த்துவிட்டு மீண்டும் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புகிறான். அந்தச் சம்பவத்தால்தான் அவன் தன்னுடைய காதலியின் அருமையைப் புரிந்துகொள்கிறான் என்றாலும் அத்தனை கொடூரமான சம்பவத்தை மனித ‘நேயம்’ மிக்க ஒரு மனிதனால் எப்படிச் சாதாரணமாகக் கடக்க முடியும்?

மனித உணர்வுகளையும் மனித உறவுகளில் இருக்கும் சிக்கல்களையும் நேர்மையாகப் பேசுகிறதா இந்தப் படம்? கணவர் மீது அக்கறையும் காதலும் பெருக்கெடுத்து ஓடுபவராக நம் மனதில் பதியும் வீனஸ் கதாபாத்திரத்தைச் சிதைத்ததுதான் உறவுச் சிக்கலை அவிழ்ப்பதா? “என்னுடைய ஹஸ்பண்ட் எங்கேனு இதுவரைக்கும் நீ கேட்கவே இல்லையே?”, “நீ மட்டும்தான் என்கூட வாழ நினைச்ச ஆம்பள” என அல்தியாவை உணர்வுபூர்வமாகப் பேச வைத்த இயக்குநர், அந்தத் தருணங்களில் பிரபுநாத்தை உணர்வற்ற ஜடமாகப் பதிலின்றி நிற்க வைத்திருக்கிறார்.

பேச வேண்டிய இடத்தில் எல்லாம் கதாநாயகனைச் சரியாகப் பேச வைக்காமல் ‘வாய்ஸ் ஓவரில்’ ராம் பேசிக்கொண்டேபோகிறார். காட்சி வடிவமான களத்துக்குள் தன்னுடைய புத்திசாலித்தனத்தைக் காட்டத் தவறிவிட்டு படத்தின் குறைகளையே ‘மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்ட மாதிரி’ காட்டியிருக்கிறார். இப்படியான படத்தைத் தலை மீது தூக்கிவைத்துக் கொண்டாடுவதைப் பார்க்கும்போது சினிமா ரசனை மீதான அச்சம் மனதைக் கவ்வுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x